Saturday, June 11, 2005

சில லூசுகள் சீதனம் வாங்க மாட்டினமாம் (பகுதி 2)

சுதந்திரம் இல்லையெண்டு கூச்சலிடும் அளவுக்கு நான் அவளுக்கு என்ன குறைதான் வைக்கப் போறன்.

எல்லாத் தமிழ திரைப்படங்களுக்கும் கூட்டிப் போவன். சித்தி, மங்கை, சக்தி, கோகிலா எங்கை போறாள், அர்ச்சயா, ஆலயம், குடும்பம், குப்பம், யன்னல், அலுமாரி என வரும் எல்லா நாடகங்களையும் பார்க்க வாங்கிக் கொடுப்பன்.

படையப்பா சாறி, குஷி சாறி, பூவேலி சாறி, அமர்க்களம் சாறி, மின்னலே சாறி, முழக்கமே சாறி எண்டு எல்லாச் சாறிகளும் வாங்கிக் கொடுப்பன். CTR, CTBC, கீதவாணி எண்டு எல்லா 24 மணிநேர வானொலிகளும் இழுக்கின்ற வானொலி 110 டொலருக்கு வாங்கிக் கொடுப்பன்.

எனது மனைவியை வானொலியில் நேயர் விருப்பங் கேட்க விடுவன். சில கணவன்மார் அதுக்கே அனுமதி கொடுப்பதில்லையாம். பாட்டுக் கேட்கவே சுதந்திரம் கொடுக்காத மிருகங்கள். உவ்வளவு சுதந்திரம் கொடுக்கிற என்னை அவள் பூப்போட்டு கும்பிட வேணும்.

இவ்வளவுக்கு மேலை உவளுக்கு வேறை என்ன சுதந்திரம் வேணும். ஊரிலை புழுதி மண்ணைப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு கனடாவையே காட்டப் போற எனக்கு அவள் உண்மையிலேயே அடிமையாக இருக்க வேணும். ஆனால், நான் அப்படியெல்லாம் அவளை அடிமையாக வைச்சிருக்கமாட்டன். ஏனென்டால் நான் பெண்களை மதிக்கிறவன்.

சில ஆண் சிங்கங்கள் இருக்கினம்...தங்கடை சொந்த மனிசிமாரை கார் முன் சீற்றிலை இருக்க விடமாட்டினம். பெண்களே விண்வெளிக்குப் போறா இந்தக் கம்பியூட்டர் காலத்திலை உவங்கள் உப்பிடி எல்லாம் செய்யலாமோ? நான் எனது மனைவியை முன் சீற்றிலை இருக்கவிடுவன். ஆனால். அதுக்காண்டி கார் ஓட எல்லாம் விடமாட்டன். எனக்குத் தெரிஞ்ச சிலபேர் தங்கடை மனிசிமார் சொண்டுக்குப் பூசுவதையெல்லாம் தேசியப் பிரச்சினை எண்டு நினைச்சுக் கொண்டிருக்கினம். ஆனால் நான் மனைவிக்கு சிவப்பு, ரோஸ், ஏன் அவள் விரும்பினால் பச்சைக் கலரிலை கூட வாங்கிக் குடுப்பன். அவளுக்கு நான் அவ்வளவு சுதந்திரம் கொடுப்பது ஏன் தெரியுமோ? நான் பெண்களின் உணர்வுகளை மதிக்கிறவன். என்ரை அம்மாவும் ஒரு பெண்தானே! பெண்களின் உணர்வுகளை மதியாதிருப்பது தாயையே மதியாதிருத்தல் போலல்லோ.

என்ரை இவர் பான்ஸ் போட விடுவாரோ, அல்லது சேலைதான் கட்டிகொண்டு மாரடிக்க வேணுமோ என்ற கேள்வியே எழாத வண்ணம் நான் கனடாவுக்கு ஏற்ற மாதிரி விதம்விதமா பான்ஸ் எல்லாம் போடவிடுவன். கனடாவிலை பொட்டுப் போடுறது, போடாமல் விடுவது பெரிய விடயமாப் போச்சு இப்ப. அதிலை எனக்கொரு பிரச்சினையும் இல்லை. நான் பெண்களது சுதந்திரத்துக்கு முன்னுரிமை கொடுக்கிறவன். அவள் பொட்டுப் போடலாம், போடாமல் விடலாம். அது அவளின்ரை தனிப்பட்ட விருப்பமல்லோ.

திரும்பவும் நான் சொல்லுறன். வீட்டிலை எல்லா வேலையும் அவள்தான் செய்யவேணும். நான் ஒரு துரும்புமே தொடமாட்டன். என்ரை அம்மா என்னை இராசா போலை வளர்த்தவா. நான் இராசா...சிங்கக்குட்டி. எல்லாத்துக்கும் மேலாலை நான் ஒரு தமிழன் எல்லோ

(முற்றும்...மேடைப் பேச்சு மட்டுமே)

....................................................
கனடாவில் நிகழ்ந்த "வீரம்" என்ற மேடை நிகழ்வில் இது வாசிக்கப்பட்டது (2000இல் எண்டு நினைக்கிறன்). பகுதி ஒன்றுக்கு இங்கே செல்லவும்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, June 10, 2005

சில லூசுகள் சீதனம் வாங்க மாட்டினமாம் (பகுதி 1)

தமிழ் என் உயிருக்கு நேர். ஆம் நான் ஒரு தமிழன். எமக்கென்று சில கலாச்சாரக் கூறுகள் உள்ளன. அவற்றை எமது அடுத்த சந்ததிக்கும் எடுத்துச் செல்வேன். ஒவ்வொரு தமிழனதும் கடமையிது என்பதனை உரத்துச் சொல்வோம் உலகுக்கு.

பெண்ணடிமை, பெண்ணியம், சீதனம் பற்றி இன்று இலக்கிய ஆக்கங்கள் தொட்டு இருபத்துநான்கு மணி நேர வானொலி தாண்டி, இலவசப் பத்திரிகை வரை எல்லாம் தம்மால் முடிந்தவரைக்கும் முழக்கமிடுகின்றன.

இது பற்றிய விழிப்புணர்வு இன்றைய இளைஞர்களிடையே இல்லாமல் போனதன் நிமித்தம் நான் இன்று இந்தச் சபையோருக்கு சீதனம் பற்றியும், பெண்ணடிமைத்தனம் பற்றியும் சற்றுச் சொல்லலாம் என்று வந்திருக்கின்றேன்.

உன்னாணைக் கேக்கிறன் சீதனம் வாங்கிறதிலை என்ன பிழை இருக்கு? என்ரை அம்மா சாணகம் அள்ளி, மிளகாய்க்கண்டு வைச்சு என்னைப் படிப்பிச்சவா. என்னை இப்படி ஒரு டாக்குத்தராக்குவதற்கு எவ்வளவு கஸ்ரப்பட்டிருப்பா என்று எனக்கு மட்டும்தான் தெரியும். அப்படியான எனது அம்மா கேட்கும் சீதனத்தை எனக்கு வாறவள் தாறதுதானே நியாயம்.


சில லூசுகள் சீதனம் வாங்க மாட்டினமாம். பாவம் அவை. பிழைக்கத் தெரியாததுகள். நான் நினைக்கிறன்அவையளுக்கு சீதனம் வாங்கிற அளவுக்குத் தகுதியில்லைப் போலை.

மற்றது கதையோடை கதையா எனக்கு ஒரு வடிவான, வெள்ளை நிறப்பெண்தான் மனைவியாக வர வேண்டும். வெள்ளை நிறத்திலை பெண்ணெடுக்கிறது அப்படியொன்றும் பெரிய காரியமில்லைப் பாருங்கோ. ரொறன்ரோவிலை ஒரு தமிழ்ப் பத்திரிகைக்கு 20 டொலர் கொடுத்தால் இன்ன நிறத்திலை இன்ன சாதிப் பெண் வேண்டுமென்ற மணமகள் தேவை விளம்பரம் போடுவினம். சொன்னா நம்புங்கோ, அந்தப் பத்திரிகை 20 டொலர் கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் போடும்.

நான் கொஞ்சம் கறுப்புத்தான். இப்ப அதுக்கு என்ன எண்டுறன். ஆணுக்கு கறுப்புத்தான் வடிவென்று உவையளுக்குத் தெரியாதாக்கும். வாறவள் கறுப்பெண்டாலும் பரவாயில்லை; என்ன கொஞ்சம் சீதனம் கூடத் தர வேண்டியிருக்கும்.

ஐயோ சொல்ல மறந்து போட்டன். வாறவள் படிச்சிருக்கக் கூடாது. படிச்சவைதான் பெண் சுதந்திரம் என்று சும்மா குடும்பத்திலை குழப்பத்தைக் கொண்டு வருகினம். கல்யாணங் கட்டினாப் பிறகு அவள் தன்ரை தாய் தகப்பனை ஸ்பொன்ஸர் பண்ணுற வேலையெல்லாம் இருக்கக்கூடாது. அதுகள் கிழடுகள்...இங்கை வந்து வீட்டிலை கரைச்சல், அதுகளுக்கும் கரைச்சல்.

அவள் வேலைக்குப் போறன் எண்டாலும் எனக்குப் பரவாயில்லை. இங்கை பருங்கோ, நாங்கள் பெண்களின் உணர்வுகளை மதிக்கப் பழக வேண்டும். ஏனெண்டால் அதுகள் ஏற்கனவே பலவீனமானவர்கள்.

அவள் வேலைக்குப் போனால் அந்தக் காசிலை என்ரை தங்கைச்சிக்கு நல்ல இஞ்சினியர் மாப்பிள்ளையா கட்டிக் கொடுக்கலாம். என்ரை அம்மா, அப்பா பாவம். அவையளையும் ஸ்பொன்ஸர் பண்ணலாம்.

கதையோடை கதையா வேலைக்குப் போனாலும் அவள்தான் சமைக்க வேணும். தங்கைச்சியின் கல்யாணம் முடிஞ்ச அடுத்த நாளே இவள் வேலைக்குப் போறதை நிப்பாட்ட வேணும். சொந்தமா நாலு காசு உழைச்சா இவளவைக்கு திமிர் வந்திடும். சொல்ல மறந்து போனன்...நான் பெண்களை மதிக்கிறவனாக்கும்.

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு பற்றி எமது சங்க கால இலக்கியங்கள் திரும்பத் திரும்பச் சொன்னதை இவள் கட்டாயம் திரும்பத் திரும்பக் கடைப்பிடிக்க வேணும். வேறொரு ஆண்மகனை அவள் ஏறெடுத்தும் பார்க்கக்கூடாது. பெடியங்கள் நாங்கள் என்னவும் செய்யலாம். எங்கடை அரசர்கள் எத்தினை மகாராணிகளை வைச்சிருந்தார்கள் என்று உந்தப் பெண்களிற்குத் தெரியாதாக்கும். ஏன், எல்லாம் வல்ல எம்பெருமான் முருகன்கூட வள்ளி, தெய்வானை என் இரண்டு பெண்களைத் திருமணஞ் செய்தானே. மகேசன் எவ்வழி மக்கள் அவ்வழி. இரண்டு ஆண்களைத் திருமணஞ் செய்த பெண் கடவுள் இருந்தல் சொல்லுங்கோ...நான் இப்பவே மன்னிப்புக் கேட்கிறன்.

(தொடரும்)

....................................................
கனடாவில் நிகழ்ந்த "வீரம்" என்ற மேடை நிகழ்வில் இது வாசிக்கப்பட்டது (2000இல் எண்டு நினைக்கிறன்).

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

முற்றுமா முற்றாதா?

காலத்தைத் தெளிவாகக் காட்டின்
தெரிநிலை வினையாம்.
குறிப்பாகக் காட்டின்
குறிப்புவினையாம்.
நீ தெரிந்து தாக்குகின்றாய்
குறிவைத்தும் தாக்குகின்றாய்.
நீ யாரோ எனக்குச் செய்த செய்வினையா?
அன்றில்எந்தனது ஊழ்வினையா?

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, June 09, 2005

முதலிரவு

வாழ்க்கையில்
மேடு பள்ளம் இருக்குமென்று
அந்த ஒரு இரவில்தான்
புரிந்து கொண்டேன்.

(யாவும் கற்பனையே)

...............................
நானும் கவனிச்சுக்கொண்டுதான் இருக்கிறன். வேறையொரு பால்வீதியிலை தொலைஞ்சு போன நட்சத்திரமா உணர்கின்றேன். அத்துவானக் காட்டிலையிருந்து நான் புல்லாங்குழல் வாசிக்கின்றேன்...கேட்பவர் எவருமில்லை. அந்தக் கொதியிலைதான் மேலையுள்ள வரைவிலக்கணத்தைப் பதிஞ்சன் எண்டதை தயவு செய்து மறக்க வேண்டாம். யாவும் கற்பனையே எண்டதுக்குக் கீழை அடிக்கோடிடவும்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, June 08, 2005

வேலைதேடு படலம்

... சற்று வளர்ந்து அந்நிய மண்ணில் திசைகளெதுவும் தெரியாமல் திகைத்து நின்றது கொஞ்சக் காலம். பின் மற்றவரின் தடம் பற்றி படித்துப் பட்டம் பெற, தொடங்கியது கவலைதரு(ம்) படலம். அது வேலை தேடு(ம்) படலம்.

அந்த வேலைதேடு படலம் பற்றிச் சற்றுச் சொல்வேன் கேள்மின்:

பட்டமளிப்பு விழாவுக்கு பாட்டியும் வந்து தன்ரை பொக்கைவாயாலை கொஞ்சி பெருமைப்பட்டதுவும்,

"...சான்றோன்" எனக்கேட்டு அன்னை என்னை அரவணைத்து நின்றதுவும்,

அண்ணா பரிசாய்த் தந்த நாற்சக்கர ஊர்தியும்,

எஞ்சினியர் மாப்பிள்ளை! எந்த ஊரிலையும் இனி சம்மந்தம் பேசலாம் என்ற அக்காவின் நிலத்தில் நிற்காத கால்களும்

என்று எல்லாம் நன்றாய்த்தானிருந்தது தற்போது வேலை எடுக்கிறது "கொஞ்சம்" கஸ்ரம் என்று என் பாழாய்ப்போன உள்ளறிவு புரிந்து கொள்ளும்வரைக்கும்.


கால்மேலே கால்போட்டு வீட்டிலே நானிருக்க, "தயவு செய்து எங்களது நிறுவனத்திலை வேலை செய்ய வாங்கோ" என்று ஒரு ஆங்கிலேய முதலாளியும் என்வீட்டுக் கதவு தட்டிக் கெஞ்சப் போவதாகக் கனவு காணவில்லைத்தான். அத்துடன், இருநூற்றியைந்து வேலைக்கு முயன்று ஒரு வேலைதனினும் கிடைக்காமல் போகுமென்றும் நான் கனவிலும் நினைக்கவில்லை.

பாட்டியும் பாவம். இப்பதான் உலகம் விளங்கியிருக்கும்... "மோனை எனக்கு எப்ப உளைச்சுத் தரப் போறாய்?" என்று ஒரு பேச்சுக்குத்தானும் கேட்பதில்லை இப்போ.

ஈன்ற பொழுதில் பெரிது உவந்த அன்னைகூட இப்போ சாப்பாடு போட்டுத் தருவதில்லை. வேலையில்லாமல்தானே இருக்கிறான் பெடியன்; போட்டுச் சாப்பிட்டா என்ன என்று அவவும் நினைத்திருக்கலாம்.

நான் சும்மா வீட்டிலை இருப்பதாயும், தன்ரை மனிசிக்கு பேருந்தில் பயணஞ்ச் செய்யகளைப்பதாயும் சொல்லி பெருமையாத் தந்த ஊர்தியின் திறப்பினை தனக்குத் தெரிந்த நாகரீகமான முறையில் கேட்டான் என் அன்பான அண்ணா.

அப்பாவும் எத்தனை காலம்தான் ஓடாய்த்தானுழைப்பார். தனக்குத் துணையாய் வேலைக்கு ஒருநாள் வாவென்றார். பின்னர், படிச்ச படிப்புக்கொரு வேலை கிடைக்குமட்டும் தன்னோடு வரச் சொன்னார். என்ரை பொடியன் எண்டைக்கும் ஒரு எஞ்சினியர் என்ற அன்னையும் பெரிதாகவோ சிறிதாகவோ ஆட்சேபிக்கவில்லை.

"இப்ப படிக்கிறேல்லைத்தானே. உன்ரை அறையை எனக்குத்தா". தங்கையும் தான் படிப்பதாய் என்னை "வாழும் அறையின்" ஓரத்திற்கு ஒருவறாய் என்னை அனுப்பி வைத்தாள். மகிழ்ச்சிப் பெருநதி ஆரோகரித்தோடியது... தங்கைச்சியும் வளர்ந்திட்டாள்.

"வாழும் அறையில்" நான் பட்டம் வாங்கும் படத்தைப் பத்திரப்படுத்தி வைத்திருந்தாள் அக்கா. இப்ப அதிலை பாபா பக்தியோடு நிற்கிறார்.


வேலை தேடுவதே இப்போ வேலையாகி போய்விட்டது.


"வேலை கிடைச்சிட்டுதோ?" என்று வேலைமினக்கெட்டு கேட்பவரிடமிருந்து தப்பிக்கவாவது அவசரமாய் வேலை வேண்டும்.

"** அண்ணாவுக்கே வேலை கிடைக்கேல்லையாம்; எங்கடை கெதி என்னவோ" என்கின்ற அடுத்த வருடம் பட்டம் வாங்கப் போகும் தம்பிகளின் தங்கைகளின் பெருமூச்சைக் குறைக்கவேனும் எனக்கொரு வேலை வேண்டும்.

ஓய்விலிருக்குமொரு பொருள் புறக் காரணிகளால் தூண்டப்படும்வரை ஓய்விலேயே இருக்குமாம். இவ்வளவு புறக் காரணிகள் என்னைத் தீண்டியும் நான் இன்னும் ஏன் "சும்மா ஓய்வில்" இருக்கின்றேன்.

திடங்களிற்கு மட்டுமே அது பொருந்துமா? அல்லது படிச்ச விதியே பிழையா? அல்லது படிச்சதே தப்பா?

விடையெதுவும் கிடைக்கவில்லை. விடை கிடைக்கும்போது எவையெவையெல்லாம் இழக்கப்பட்டிருக்குமோ!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

குஞ்சுகள் (சிறுகதை)

இருட்டுப் போர்வை பூமியை மூட ஆரம்பித்த மாலை வேளை. வானத்தில் நிலவும், நட்சத்திரங்களும் மட்டுமே மீதியாக இருந்தன. ஆனால் காற்றோ இப்பவும் சூடாகவே வீசிக்கொண்டிருந்தது.


"எணை அப்பு...! என்ரை செல்லத்தைக் காணேல்லை. நீ கண்டனியோணை?" அரக்கப்பரக்க ஓடிவந்து கேள்வி கேட்ட என் பேரனிற்கு பதிலளிப்பதற்காய் வாய்க்குள் குதப்பிக் கொண்டிருந்த வெற்றிலைச் சாற்றினைத் துர உமிழ்ந்தேன்.

"இல்லை ராசா. நான் காணேல்லை. கொஞ்சம் முன்னந்தானே நீ மடியிலை வைச்சுக் கொஞ்சிக் கொண்டிருந்தனீ..." அவனது தலையை ஆதரவாகத் தடவி கொடுத்தவாறே கேட்டேன்.

"ஓமணை அப்பு. பவுடர் பூசி, ஒட்டுப் பொட்டும் வைச்சுப்போடு விட்டனான். அதுக்குன்னம் காணைல்லை" என்று விம்மத் தொடங்கிய எனது பேரனுக்கு வாற ஆவணி மாசம் பதினான்கு வயசாகின்றது.

கோழிக்குஞ்சுகள் வளர்ப்பதென்றால் அவனுக்குக் கொள்ளை ஆசை. பள்ளிக்கூடத்தால் வந்து நேரே கோழிக்கூட்டிற்குத்தான் செல்வான். அவை பெருகப் பெருக அவற்றை விற்று உண்டியலில் காசு சேர்ப்பான்.
கோழிக்குஞ்சென்றால் உயிரோ அன்றி அவற்றால் வரும் பயனுக்காக வளர்க்கின்றானோ என்று அறுபத்திரண்டு வயசுக் கிழம் என்னால் இன்னுமே புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனென்றால் முட்டை வித்த காசைக் கொண்டுபோய் வல்லிபுரக் கோயில் திருவிழாவிலை விளையாட்டுச் சாமான், சமயப் புத்தகங்கள் எல்லாம் வாங்குவான்.

படிப்பு, வீட்டுவேலை, கோழிக்குஞ்சுகள் இவைகள் மட்டுந்தான் இவனது வாழ்க்கை. தான் படித்து பெரிய ஒரு டாக்குத்தராக வரவேண்டும் என்று எப்பொதும் சொல்லிக் கொண்டிருப்பான்.

கொஞ்ச நாட்களாக கோழிக்குஞ்சுகள் அடிக்கடி காணாமல் போயின. மனசு நிறைய அன்போடு, பவுடர் பூசி, ஒட்டுப்பொட்டு வைச்ச அந்த சாம்பல் நிறக் கோழிக்குஞ்சுதான் இப்போது காணாமல் போய்விட்டது.

அழுவதைத் தவிர வேறு ஒன்றுமே செய்யத்தோன்றாமல், எவ்வளவுதான் மன்றாடிக் கேட்டும் சாப்பிடவே விரும்பாமல் இருந்த அவனைப் பார்க்கையில் என் நெஞ்சுக்குள் எங்கோ வலித்தது.

"எடை மோனை... போயும் போயும் ஒரு அற்பக் கோழிக்குஞ்சுக்கோ அழுது கொண்டு இருக்கிறாய்! வேணுமெண்டா சொல்லு ராசா... உனக்கு நான் நாளைக்கே நூறு குஞ்சுகள் வாங்கித் தாறன். இப்ப சாப்பிடு மோனை. படுக்கைக்கு வெறும் வயித்தோடை போகக்கூடாது." என்று அவனை நான் ஆசுவாசப்படுத்த, அது எடுத்த எடுப்பிலேயே தோல்வியில் முடிந்தது.

"ஏனணை அப்பு... நான் திடீரெனச் செத்துப் போனா, வேறை வீட்டிலை இருந்து ஒரு பிள்ளையை வாங்கி வளப்பீங்களோ? என்னை அதுக்குன்னம் மறந்து போவீங்களோ...?" அந்தப் பிஞ்சின் கேள்விக் கணைகளை எதிர்க்க முடியாமல் வாயடைத்து போய் ன்றேன்.

இரவு முழுவதும் என்ரை செல்லம்...என்ரை செல்லம் என்று அனுங்கிக் கொண்டிருந்தான். காலையில் சற்றுப் பிந்தியே எழும்பினான். அவனது கண்கள் அளவிற்கு மீறிச் சிவந்திருந்தன. இண்டைக்கு பள்ளிக்கூடத்திலை சோதினைக்கு வாங்கில், மேசை அடுக்குறது எண்டு பொய் சொல்லி பள்ளிக்கூடத்திற்கு போகாதுவிட்டான்.

கோழிக் குஞ்சுகளை மேயவிட்டு, ஒளித்து ன்று அவன் பார்த்துக் கொண்டிருக்க, குஞ்சுகளிற்கு என்ன நடக்கிறது என்று அறியும் ஆவலில் நானும் அவனைச் சேர்ந்து கொண்டேன். மணி பத்தாகியும் குஞ்சுகளிற்கு ஒன்றுமே நடக்கவில்லை. தன் முயற்சியில் சற்றுமே மனந் தளராத விக்கிரமாதித்தன் போல என் பேரனும் மனந்தளரவில்லை. மத்தியான வெய்யில் தன் அகோரத்தை காட்டிய வேளையில், முருகேசர் வீட்டு கறுப்புப் பூனை பதுங்கிப் பதுங்கி வந்து ஒரு குஞ்சை லபக் என்று வாயால் கெளவியபடி ஒரு கண நேரத்தில் ஓடி மறைந்தது.

ஒரு குஞ்சு போனாலும் அந்தப் பிஞ்சின் முகம் மகிழ்ச்சியில் நிறைந்திருந்தது. தன் குஞ்சுகளைக் கவருகின்ற இயமனைக் கண்டு கொண்டதால்தான் அந்த மகிழ்ச்சி என்று என்னால் தெளிவாக உணர்ந்து கொள்ள முடிந்தது.
அன்று பிந்நேரம் வீட்டால் வெளிக்கிடாமல் ஒரு மூலைக்குள் ஒடுங்கிக் கொண்டிருந்தான். முகமெல்லாம் வேர்த்துக் கிடந்தது.

"என்ன ராசா... ஏதேனும் வருத்தமோ? என் உப்பிடி இருக்கிறாய்? விளையாடப் போகேல்லையோ?" என்று அவனது தலையைத் தடவிக்கொடுத்தவாறே கேட்டேன்.

அந்தப் பிஞ்சு நாலு பக்கமும் பார்த்துவிட்டு,
"ஒருத்தருக்கும் சொல்லாதையணை அப்பு... என்ரை கோழிக்குஞ்சுகளை பிடிக்கிற பூனைப்பிள்ளம் சின்னம்மா வீட்டுக்குப் பின்னாலை நல்ல நித்திரையாகக்கிடந்தார். ஒரு கொங்கிறீற்றுக்கல்லை எடுத்து அவருக்கு மேலை போட்டுட்டன். அவர் ஆடாமல், அசையாமல் கிடக்கிறார்; நான் ஓடியந்திட்டன். எணை அப்பு, பூனையின்ரை ஒரு மயிரை கொட்டினால் ஆறு பிராமணர்களைக் கொன்ற பாவங்கிடைக்கும் எண்டு பள்ளிக்கூடத்திலை பெடியள் எல்லாம் சொல்லுறவங்கள். அது உண்மையோணை?"
பயந்து பயந்து கேட்ட பேரனைப் பார்க்கும்போது எனக்கு ஒரே நேரத்தில் பாவமாகவும் இருந்தது; சிரிப்பாகவும் இருந்தது.

"அதுக்கே மோனை நீ உப்பிடி யோசிக்கிறாய்? வாய் பேசாப் பிராணிகளை தொந்தரவுபடுத்தக் கூடாது எண்டு உப்பிடித்தான் எங்கடை பழைய ஆக்கள் கதையளை பரப்பிப்போட்டினம். ஆபத்துக்குப் பாவமில்லை! சரி ராசா... நீ விளையாடப்போ. கட்டையன் உன்னை தேடிக்கொண்டிருந்தவன். நான் போய் அந்தப் பூனை செத்துப்போச்சோ இல்லையோ எண்டு பார்த்து கொண்டு வாறன். "என்று சமாளித்தபடி அங்கு போனபோது கல்லுமட்டுந்தான் கிடந்தது; பூனையைக்காணவில்லை.

அன்றிரவு சுடுதண்ணிக் கேத்திலோடு எங்கேயோ ஓடினான். மறுநாள் அந்த பூனையின் தோல் பொசுங்கி இருந்ததைக்கொண்டு என்ன நடந்தது என்று என்னால் ஊகிக்க முடிந்தது.

இவன் இவ்வளவு ஆக்கினைகள் செய்தும் அந்தப்பூனை மீண்டும் ஒரு குஞ்சை பிடித்துவிட்டது. வயசு போன காலத்திலை என்னால் மட்டும் என்ன செய்ய முடியும்?

"உவருக்கு இண்டைக்கு நான் நல்ல பாடம் படிப்பிக்கிறன். அடியாத மாடு படியாது" என்று முணுமுணுத்துக்கொண்டு வெளியே போனவன் ஏழெட்டுப் பெடியளோடை வீட்டுக்கு வந்தான். அவனையும், அவனது சிநேகிதர்களையும் பார்க்கும்போது காரணம் புரியாமல் சிரிப்பு வந்தது.

ஓடியோடித்திரிந்து காலமை வெளிக்கிட்டவர்கள் மத்தியானம் போல் அந்தப்பூனையோடு வந்தார்கள். பூனைக்காக ஊரெல்லாம் அலைந்திருக்கிறார்கள் என்பதற்குச் சாட்சியாக அவர்களது உடல்களில் புழுதி மணல் அப்பிக் கிடந்தது. ஒரு பெடிப்பிள்ளையார் என்னிடம் ஓடிவந்து,
"எணை அப்பு... உன்ரை பேரன் ஒரு பழைய சாக்கு வாங்கிவரட்டாம்" என்று கேட்டார். என்னதான் நடக்கப் போகின்றது என்று அறியும் ஆவலில் நானும் அவர்கள் கேட்டதைக் கொடுத்தேன்.

விறு, விறு என்று பூனையை சாக்குக்குள் போட்டுக்கட்டினார்கள். எல்லாப் பெடியளும் கைதட்டிக் கொண்டிருக்க என்ரை பேரன் ஒரு கையால் நழுவிக் கொண்டிருந்த காற்சட்டையை இழுத்துப்பிடித்தவாறே அந்தச்சாக்கை வேம்போடு சேர்த்து அடிக்கத்தொடங்கினான். என்ன செய்தும் அவனை தடுக்கேலாது எண்டபடியால் நானும் பேசாமல் இருந்தேன்.

இவனது கண்களோ சிவந்திருந்தன. உடலில் இருந்து வேர்வை ஆறாக ஓடத்தொடங்கியது. பூனை கீச்சிட்டு அலறுவது இப்போது பெரிதாகக்கேட்டது.
"எடே...! என்ரை குஞ்சுகள்தான் சத்தம் போடுதுகள். அடியாத மாடு....இல்லை இல்லை; அடியாத பூனை படியாது" குரலை உயர்த்தியவாறே பூனையைக்கொன்றுவிட்டான்.

நேரே என்னிடம் ஓடிவந்து, "அப்பு! என்ரை குஞ்சுகளிலை இனி ஒருத்தரும் கைவைக்கேலாது!" உரத்துக் கூக்குரல் இட்டான்.

இது நடந்து கிட்டத்தட்ட இரண்டு மாசங் கழித்து, வழமையைப்போலவே சூரியன் கிழக்கே உதித்த நாளொன்றில் சிறீலங்கா இராணுவத்தின் குண்டு வீச்சுவிமானம் போட்ட குண்டில் பதினாறு குஞ்சுகள் ஒரேயடியாக செத்துப்போயின.

குஞ்சுகளின் சிதிலங்கள் விசிறிக்கிடக்க, செட்டைகள் காற்றில் அசைந்து கொண்டிருந்தன. பேரனிற்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று நான் கவலையோடு யோசித்துக்கொண்டு அவனது முகத்தைப் பார்த்தேன். அன்று அந்தப்பூனையை கொன்ற போதும் உப்பிடித்தான் இருந்தது.

"சாப்பிடன் ராசா..! படுக்கைக்கு வெறும் வயித்தோடை போகக்கூடாது".
"எனக்கு பசிக்கேல்லை...!"
சிணுங்கியவாறே சொன்னவன் அந்த விடயத்தைப்பற்றி ஒன்றுமே கதைக்காமல் விட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. காவோலை ஒன்று விழுஞ்சத்தம் கேட்க, அந்த நேரத்திலும் காகம் ஒன்று கரைந்து விட்டுப்போனது.

காலமை எழும்பியவுடன் அவனது முகத்தைப்பார்த்தேன். இரவு முழுவதும் அழுதிருக்கிறான் போலை; முகம் கன்றிப்போய் இருந்தது. "அப்பு..." என்று ஏதோ சொல்லவந்தவன் ஒன்றுமே கூறாமல் பள்ளிகூடம் போனான். போனவன் திரும்பி வரவில்லை. முருகேசரின்ரை பேரப்பெடியள் எல்லாம் வந்துட்டுதுகள்; இவனை மட்டுங் காணவில்லை.

"எணை அப்பு...! உன்ரை பேரன் இயக்கத்திற்கு போட்டானாம்." பக்கத்துவீட்டுப் பெடியன் சொல்லிவிட்டுப்போனான்.

"என்ரை ராசா..." எனக்கு மெய் சிலிர்த்தது. கூடவே பெருமிதமாகவும் இருந்தது. பிஞ்சுகளிற்கு உள்ள ரோசம், மானம், துணிவு கூட எனக்கு இல்லாமல் போய் விட்டது. அடியைப்போல் அண்ணன் தம்பி உதவமாட்டான் என்பது எவ்வளவு உண்மை.

என் முதுகைப்போலவே என் உள்ளமும் கூனிக்குறுகி இருந்தது. மனசுக்குள்ளும் வெளியேயும் ஒரே நேரத்தில் புழுக்கமாக இருக்க, வீட்டைவிட்டு வெளியே வந்தேன். முற்றத்தில் நின்ற வேப்பமரத்தை தாண்டி வருங்காற்று தண்ணென்றிருந்தது

(யாவுங் கற்பனையல்ல)


...........................................................................
இக்கதை எட்டு வருடங்களிற்கு முன்னால் (1997) எழுதப்பட்டது. மேலும், இதுவே எனது முதலாவது சிறுகதை. unicode அறிமுகமாத காலத்தில் முரசு அஞ்சல் மூலம் தட்டச்சு செய்து பின்னர் webTamil எழுத்துருவுக்கு மாற்றித்தான் வைத்திருந்தேன். தற்போது எழுத்தெல்லாம் மாறியிருக்கின்றது. XPக்கு webTamilஐப் பிடிக்கவில்லை என்று நினைக்கின்றேன். எனவே எழுத்துப் பிழைகள் இருந்தால் என்னை மன்னித்து XPஐச் சாடவும்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, June 07, 2005

நாய் கடிக்கும் கவனம்

நாய் ஒரு அமைதியான மிருகம். எந்தவீட்டு நாய் என்று தயவு செய்து கேட்க வேண்டாம்.

நாய் வள் வள் என்று சத்தமிடும்; நேரங்கெட்ட நேரத்திலை ஊளையிடும். என்ன காரணம் என்று அதற்கு மட்டுமே புரியும்.

செல்வரூபன் ரதியக்காவுக்கு ஏதோ கடிதங் கொடுக்க அவா அவரை "நாயே, நீ உதுக்கெல்லாம் நீ ஒருகாலம் அனுபவிப்பாய்" என்று திட்டிச் சாபமிட்டார். அதே ரதியக்காவை அதே செல்வரூபன் கல்யாணங் கட்டி இப்ப நல்லா கஸ்ரப்படுகிறார்.

குரைக்கிற நாய் கடிக்காது; கடிக்கிற நாய் குரைக்காது. ஆனால், செல்லமக்காவீட்டு நாய் மட்டும் விதிவிலக்கு. என் காலே இதற்குச் சாட்சி.

நாய் ஒரு நன்றியுள்ள மிருகம். ஆனால், செல்லமக்காவீட்டு நாய் மட்டும் விதிவிலக்கு.

நாய் வித்த காசு குலைக்காது.

குழந்தைப் பிள்ளைக்கும் குட்டிநாய்க்கும் செல்லங் கொடுக்கக் கூடாதென்று சில சொறி நாய்கள் வவ்வும்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

சின்னதாய் சில வரிகள்

சோகத்தை மனசுக்குள் புதைக்கின்றேன்.
அது இடமில்லாமல்
கண்களால் கசிகின்றது.

அடுத்த பிறப்பிலாவது
சேர்வோம் என்றவளே,
போன பிறப்பிலும்
இதைத்தானே சொல்லியிருப்பாய்.

சனியனே,
சனியனே என்றெவரையும்
ஏசாதே.

பல்லைக் கடித்துக் கொஞ்ச நாள்
கவலையை மறக்க முயல்;
பின்னர்?
பல்லுக் கொட்டுப்பட்டுப் போம்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

போரின்றிப் போனால்...?

ஈழவிடுதலைப் போராட்டம் மலர்ந்திருக்காவிடின், சிறிலங்காவின் கல்வித் திணைக்களத்தால் வெளியிடப்படும் பாடப் புத்தகங்கள் மாற்றி எழுதப்பட்டிருக்கும். சிறீலங்காவின் வடக்குக் கிழக்குப் பகுதியில் "தெமிலர்" என்ற காட்டுவாசிகள் இருந்தார்கள்; அவர்கள் மனிதர்களைப் பிடித்துத் தின்பவர்கள். அந்த இடத்தை முதலாம் பராக்கிரமபாகு தனது ஏழாவது சின்னவீட்டின் நான்காவது பிள்ளைக்கு பரிசாக வழங்கினான் என்றவாறெல்லாம் பாடப் புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கும்.

மளமளவென்று வடபகுதியெல்லாம் பௌத்த விகாரைகள் கட்டுவார்கள். பின்னர், அதனை இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கள மன்னன் ஒருவன் கட்டியதாகப் பூச்சுற்றியிருப்பார்கள். கந்தரோடை ஒன்றே அதற்குச் சாட்சி.

மேலும்...

பிறகென்ன, உலகமும் ஆகா...ஓகோ என்று தாளம் போட்டிருக்கும்.

நல்ல காலம் அப்படியெல்லாம் நடக்கவில்லை. போர் இல்லாதிருந்தால் பாவம் மனிதநேயம் பற்றிக் கதைப்பவர்கள்...அவர்களுக்கு ஒரு பேசுபொருளும் இல்லாமல் போயிருக்கும்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, June 06, 2005

ஒரு கூரையும், இரண்டு படிகளும்

பனையால் விழுந்தவனை மாடேறி மிதிச்சது போல்
போரால் நொந்தவரை கடலேறிக் கொன்றதுவே.

......

சொந்தமாய் ஒருவீடு வேண்டுமென்பதே -எம்
சொந்தங்களின் கொள்கையாய் இருந்தது.

......

ஐந்து பத்தாய் மிச்சம் பிடிச்சு
கந்து வட்டிக்கு கடனும் வாங்கி
கட்டி வைத்தார் வீடொன்று.
இன்று சுனாமி வந்து
தன் கோர முகங்காட்ட
இடிந்து போனது அவர் வீடுகள் மட்டுமா?

......

வீடென்பது வெறும் வீடல்ல.
வீடென்பது மழையிலும், வெய்யிலிலும் இருந்து
எம்மவரைப் பாதுகாக்கும்
ஒரு வதிவிடம் மட்டுமல்ல.

......

என்வீடு என்பதற்குள் என் வாழ்வே நிறைந்துள்ளது.
என் வீட்டுச் சுவரில் நான் கிறுக்கி வைத்தேனே
அதைப் பார்த்து என் அம்மா அன்னை அடிக்க வந்தாவே.
நான் பயந்து என் அப்பா பின் ஒளிந்து நின்றேனே.
அந்த ஞாபகமும் கடலோடு போயிற்றே.

மரித்துப்போன பாட்டியின் பழைய படமொன்றை
சுவாமியறையில் மாட்டி வைத்தோமே.
அதனையும் கடல் அடித்துப் போயிற்றே.

......

ஆம்... வீடென்பது வெறும் சீமெந்தும், மணலும் கொண்டு
கட்டப்பட்ட ஒரு கட்டடம் அல்ல.
அது இரத்தமும் சதையுங் கொண்ட ஒரு உயிர்ப்பான ஒரு உறைவிடம்.

ஒருவீடு ஓர் ஈழத்து வறிய தந்தையின் 25 வருட உழைப்பின் பயன்.
ஒரு தியாகத்தின் பயன்.

......

எமக்கு ஒரு மாளிகை வேண்டாம்
வீடுகள் கட்டித் தருவோம் என்ற
சிறீலங்கா அரசின்பொய்யான வாக்குறுதிகள் வேண்டாம்.

நாம் கேட்பது ஒரு கூரையும், இரண்டு படிகளும்.
தருவீரா... எம் தொப்புள்கொடி உறவுகளே.
தருவீரா... எம் கனேடியத் தமிழ் உறவுகளே!

......................................................
*அடுத்த ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் நடைபவனிக்காக இது கனேடியத் தமிழ் வானொலியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை வாசிக்கப்பட்டதன் ஒரு பகுதி.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

நான் + நீ =?

நான் + நீ =?
நாலு நாளாய் நான் முயன்றும்
நல்ல பதில் கிடைக்கவில்லை.
நல்லதம்பி வாத்தியாரும்
இல்லைக் கணிதஞ் சொல்ல.

சயன்ஸ் படிக்கிற தம்பியும்
நயண்டையாய்ச் சிரிக்கின்றான்.
அண்டை வீட்டுப் பெட்டையிடம்
ஒண்டியாய் போய்க் கேட்கட்டாம்.
வண்டி வண்டியாய் ஆவலுடன்
நான் + நீ =? என வினவ
நாசமாய்ப் போவாய் என்று -அந்த
பேயே சொன்னதையோ!

நான் வணங்கும் முருகனிடம்
நான் + நீ =? என்றேன் -அவனோ
வள்ளி, தெய்வானை நோக்கி
நான் + நீர் =? என்றான்.
வள்ளி நிலம் பார்க்க,
தெய்வானை எனை முறைக்க
ஐயோ தெய்வக் குற்றமெல்லோ!

பக்கத்துவீட்டுப் பாட்டியிடம்
பாக்குச் சில கொடுத்து
நான் + நீ யாதென்றேன்.
பாட்டி முகஞ் சிவந்து
தாத்தாவின் முகம் பார்க்க
தாத்தா பதில் சொன்னார்.
தான் + பாட்டி என்றால்
நான்கு பெடியங்களும்,
மூன்று பெட்டையளும்,
இன்னுங்கொஞ்ச மோகமுமாம்.

என்ரை கடவுளே
என்ரை கடவுளே...
நான் + நீ என்றால்
இதுதானோ மெய்யர்த்தம்?
நாசமாய்ப் போற தம்பி
நில்லடா உனக்கிருக்கு!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

நான்...?

எனக்கு சின்னனிலை இருந்தொராசை. எப்படியாவது ஒரு சினிமா நட்சத்திரமா வரவேண்டுமென்று. அது நடவாது என்று திண்ணமாகத் தெரிந்த போது நம்பிக்கை நட்சத்திரமாக என்றாலும் வரவேண்டுமென்று கொஞ்ச நாள் முயன்று பார்த்தேன். கடைசியாய் அதுவும் போய், ஒருவாறு தமிழ்மணத்தின் இவ்வார நட்சத்திரமாக வந்திருக்கின்றேன். பராக்! பராக்!

இப்ப நான் என்னைப் பற்றிச் சற்றுச் சொல்லியாக வேண்டும். நான் எப்போது பிறந்தேன் என்பதிலிருந்து ஆரம்பிக்கவா?

நான் பிறக்கேக்கை சரியான சின்னக் குழந்தை. அதனாலை எப்ப பிறந்தநான் எண்டதை சரியா ஞாபகம் வைச்சிருக்க முடியாமல் போச்சு. அதை தெரிஞ்சு வைச்சு நீங்களும் என்னதான் செய்யப் போறீங்கள்!

நான் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள கரவெட்டியென்னும் ஊரிலை 1995ஆம் ஆண்டுவரை வாழ்ந்து, 1995 சித்திரை மாசத்திலை கனடாவுக்குக் குடிபெயர்ந்தேன். எனக்கு நினைவு தெரிஞ்ச நாளிலையிருந்து படிச்சுக் கொண்டிருக்கிறன்.

தற்போது University of Western Ontarioவில் புள்ளிவிபரவியல் துறையிலை பட்டப்படிப்பைத் தொடர்கின்றேன். காட்டுத்தீயை இலாபகரமாக* அணைப்பது எப்படி என்பது சம்பந்தமாகவே எனது ஆராய்ச்சி.

இலக்கிய உலகில் இளைத்த என் பாதங்களை எப்போது பதித்தேன் என்பதனை இளகிய மனம் படைச்ச உங்களுக்குச் சொல்கின்றேன்...யாவரும் கேளுங்கள்.

ஈழத்தில் கலைபண்பாட்டுக் கழகமானது மாணவர்களிற்கு இடையில் வருடாந்தம் கவிதைப் போட்டியொன்றினை ஒழுங்கு செய்யும். எமது தமிழாசிரியர் கேட்டார் யாருக்கு கவிதைப் போட்டியில் பங்குபற்ற விருப்பமென்று. பக்கத்திலை இருந்தவன் "கிஸோ தன்ரை பெயரைப் போடட்டாம்" என்று பகிடியாகச் சொல்ல அதுவே வெற்றியாகி போனது (யாருக்கு?). அந்தக் கவிதைப் போட்டியில் மூன்றாம் இடத்தை (1994?) பெற்றேன்.

முதல் கவிதைக்கே மூன்றாம் பரிசு கிடைச்சால், மூன்றாம் கவிதைக்கு எத்தனையாவது பரிசு கிடைக்கும் என்று கணக்குப் பார்த்தேன். இப்படியாக ஆஆஆஆ ரம்பமானது எனது எழுத்துலக வாழ்க்கை.

இந்தப் படம் மக்மாஸ்ரர் பல்கலைக்கழக தமிழ் மாணவர் மன்ற நிகழ்வொன்றில் - 2 வருடங்களுக்கு முந்தி - ஒரு சிறுஉரையினை வழங்கியபோது எடுக்கப்பட்டது. அந்த உரையில் நான் இறுதியாய்ச் சொன்னது:

மிச்சம் ஏதுமின்றி -எம்
இருப்புகள் போனாலும்
கொச்சை மொழியொன்றாய் -தமிழ்
உருக்குலைந்து போகாது.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
statistics