வேலைதேடு படலம்
... சற்று வளர்ந்து அந்நிய மண்ணில் திசைகளெதுவும் தெரியாமல் திகைத்து நின்றது கொஞ்சக் காலம். பின் மற்றவரின் தடம் பற்றி படித்துப் பட்டம் பெற, தொடங்கியது கவலைதரு(ம்) படலம். அது வேலை தேடு(ம்) படலம்.
அந்த வேலைதேடு படலம் பற்றிச் சற்றுச் சொல்வேன் கேள்மின்:
பட்டமளிப்பு விழாவுக்கு பாட்டியும் வந்து தன்ரை பொக்கைவாயாலை கொஞ்சி பெருமைப்பட்டதுவும்,
"...சான்றோன்" எனக்கேட்டு அன்னை என்னை அரவணைத்து நின்றதுவும்,
அண்ணா பரிசாய்த் தந்த நாற்சக்கர ஊர்தியும்,
எஞ்சினியர் மாப்பிள்ளை! எந்த ஊரிலையும் இனி சம்மந்தம் பேசலாம் என்ற அக்காவின் நிலத்தில் நிற்காத கால்களும்
என்று எல்லாம் நன்றாய்த்தானிருந்தது தற்போது வேலை எடுக்கிறது "கொஞ்சம்" கஸ்ரம் என்று என் பாழாய்ப்போன உள்ளறிவு புரிந்து கொள்ளும்வரைக்கும்.
கால்மேலே கால்போட்டு வீட்டிலே நானிருக்க, "தயவு செய்து எங்களது நிறுவனத்திலை வேலை செய்ய வாங்கோ" என்று ஒரு ஆங்கிலேய முதலாளியும் என்வீட்டுக் கதவு தட்டிக் கெஞ்சப் போவதாகக் கனவு காணவில்லைத்தான். அத்துடன், இருநூற்றியைந்து வேலைக்கு முயன்று ஒரு வேலைதனினும் கிடைக்காமல் போகுமென்றும் நான் கனவிலும் நினைக்கவில்லை.
பாட்டியும் பாவம். இப்பதான் உலகம் விளங்கியிருக்கும்... "மோனை எனக்கு எப்ப உளைச்சுத் தரப் போறாய்?" என்று ஒரு பேச்சுக்குத்தானும் கேட்பதில்லை இப்போ.
ஈன்ற பொழுதில் பெரிது உவந்த அன்னைகூட இப்போ சாப்பாடு போட்டுத் தருவதில்லை. வேலையில்லாமல்தானே இருக்கிறான் பெடியன்; போட்டுச் சாப்பிட்டா என்ன என்று அவவும் நினைத்திருக்கலாம்.
நான் சும்மா வீட்டிலை இருப்பதாயும், தன்ரை மனிசிக்கு பேருந்தில் பயணஞ்ச் செய்யகளைப்பதாயும் சொல்லி பெருமையாத் தந்த ஊர்தியின் திறப்பினை தனக்குத் தெரிந்த நாகரீகமான முறையில் கேட்டான் என் அன்பான அண்ணா.
அப்பாவும் எத்தனை காலம்தான் ஓடாய்த்தானுழைப்பார். தனக்குத் துணையாய் வேலைக்கு ஒருநாள் வாவென்றார். பின்னர், படிச்ச படிப்புக்கொரு வேலை கிடைக்குமட்டும் தன்னோடு வரச் சொன்னார். என்ரை பொடியன் எண்டைக்கும் ஒரு எஞ்சினியர் என்ற அன்னையும் பெரிதாகவோ சிறிதாகவோ ஆட்சேபிக்கவில்லை.
"இப்ப படிக்கிறேல்லைத்தானே. உன்ரை அறையை எனக்குத்தா". தங்கையும் தான் படிப்பதாய் என்னை "வாழும் அறையின்" ஓரத்திற்கு ஒருவறாய் என்னை அனுப்பி வைத்தாள். மகிழ்ச்சிப் பெருநதி ஆரோகரித்தோடியது... தங்கைச்சியும் வளர்ந்திட்டாள்.
"வாழும் அறையில்" நான் பட்டம் வாங்கும் படத்தைப் பத்திரப்படுத்தி வைத்திருந்தாள் அக்கா. இப்ப அதிலை பாபா பக்தியோடு நிற்கிறார்.
வேலை தேடுவதே இப்போ வேலையாகி போய்விட்டது.
"வேலை கிடைச்சிட்டுதோ?" என்று வேலைமினக்கெட்டு கேட்பவரிடமிருந்து தப்பிக்கவாவது அவசரமாய் வேலை வேண்டும்.
"** அண்ணாவுக்கே வேலை கிடைக்கேல்லையாம்; எங்கடை கெதி என்னவோ" என்கின்ற அடுத்த வருடம் பட்டம் வாங்கப் போகும் தம்பிகளின் தங்கைகளின் பெருமூச்சைக் குறைக்கவேனும் எனக்கொரு வேலை வேண்டும்.
ஓய்விலிருக்குமொரு பொருள் புறக் காரணிகளால் தூண்டப்படும்வரை ஓய்விலேயே இருக்குமாம். இவ்வளவு புறக் காரணிகள் என்னைத் தீண்டியும் நான் இன்னும் ஏன் "சும்மா ஓய்வில்" இருக்கின்றேன்.
திடங்களிற்கு மட்டுமே அது பொருந்துமா? அல்லது படிச்ச விதியே பிழையா? அல்லது படிச்சதே தப்பா?
விடையெதுவும் கிடைக்கவில்லை. விடை கிடைக்கும்போது எவையெவையெல்லாம் இழக்கப்பட்டிருக்குமோ!
7 Comments:
நல்ல பதிவு கிஸோக்கண்ணன்.
இப்பதிவுக்கு முதலாவது பின்னூட்டத்தினை இட்ட உங்களுக்கு பின்னூட்ட சிகாமணி என்ற பட்டத்தினை பேருவகையுடன் வழங்குகின்றேன்.
அட பின்னூட்டங்கள் வராட்டி என்ன?
தொடர்ந்து எழுதுங்கோ. நாங்கள் வாசிப்பம் தானே.
நன்றி வசந்தன்.
நல்ல பதிவு கிஸோ!
வார்த்தைகள் சரளமாக வந்து விழுகின்றன உங்கள் வரிகளில்.
தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் பதிவுகளில்.
ஒரு சைட் மீற்றரை உங்கள் வலைப்பக்கத்தில் இணைத்தீர்கள் ஆனால்
எத்தனை பேர் வருகின்றனர் என்பதனை அறியலாம் தானே.அது உங்களுக்கு தரும் உற்சாகத்தினை.
வாருங்கள் கரிகாலன். நான் இந்த சைட் மீற்றரைப் போட்டுத்தான் இந்தப் பிரச்சினை. :-)
சக்தி, ஒண்டுக்கும் யோசிக்காதையுங்கோ. இழப்பதற்கு ஒன்றுமே இல்லையென்னும் அளவுக்கு யார் முயன்றார்?
Post a Comment
<< Home