Saturday, April 02, 2005

தெற்காசிய பேராசிரியர்

பல்கலைக்கழகத்தில் எனக்கென்று ஒதுக்கப்பட்ட அறையினை ஒட்டி ஒரு hall way உள்ளது. கிட்டத்தட்ட அது கட்டடத்திற்குள் அமைந்துள்ள ஒரு நடைபாதை போல. அந்த hall wayஇல் அன்று போய்க்கொண்டிருந்த போது ஒரு தெற்காசிய பேராசிரியர் தனது மாணவன் ஒருவனுக்கு பரீட்சை பற்றி அறிவுறுத்திக்கொண்டிருந்தார். வழமையைப் போல நாகரீகமான முறையில் ஒட்டுக் கேட்டேன்.


இதுதான் நடந்தது. அந்த மாணவன் அந்தப் பரீட்சையை முதல் வாரமே எல்லா மாணவர்களுடனுஞ் சேர்ந்து எழுதியிருக்க வேண்டும். ஆனால், ஏதோ காரணத்தால் அவனால் அப்படி எழுத முடியாமல் போக, இந்த நாளன்று தனிய பரீட்சை எழுத வந்துள்ளான்.

பேராசிரியரும் பாவம்...overtime ஊதியம் இல்லாமலே இந்த மாணவன் பரீட்சை எழுதுவதை மேற்பார்வை செய்ய வேண்டுமே. அந்த ஒரு மாணவனுக்கென்று ஒரு பரீட்சை அறையினை ஒழுங்கு செய்தால் முழுநேரமும் தானும் அங்கு நிற்கவேண்டுமே. அதுதான் அந்த hallஐத் தெரிவு செய்தார். அது ஒரு மறைவான இடமில்லையென்பதனால் அங்கு மேற்பார்வை செய்யத் தேவையில்லை என்பது அவரது எண்ணம்.


எனக்கென்றல் அவர் செய்வது பிழையாகத் தெரிந்தது. அப்பாதையால் போகின்றவர்களால் மாணவனின் கவனஞ் சிதறுமல்லவா! அந்த மாணவன் இதனை மேலிடத்தில் முறையிட்டால்...?


"விறாந்தையில் பரீட்சை எழுதச் சொன்னால் முறையிடுவார்களே"

"என் மடியில் இருந்து எழுதச் சொன்னாலும் மடி ஆடியது என்று முறையிடுவார்கள். எப்படியோ முறையிடத்தான் போகின்றார்கள். இந்த முறைப்பாடு பரவாயில்லை. எதிர்பாராத முறைப்பாட்டை விட எதிர்பார்த்திருக்கும் முறைப்பாடு பரவாயில்லை."

ஏதோ எக்கச்சக்கமா அவர் நொந்து போனது போல அவரது வார்த்தைகள் வந்து விழுந்தன. என்ன நோவென அறிய கேள்வியொன்றைத் தொடுத்தேன்.

கிறிஸ்மஸ் இரவொன்றின் இடைவிடாத பனிதூவலாய் அவர் பேசத் தொடங்கினார்.


"ஆங்கிலம் எனக்கு இரண்டாம் மொழிதான். ஆனால் நான் புரிந்து கொண்ட விடயத்தை மற்றவருக்குப் புரிய வைக்க அது என்றும் தடையாய் இருந்ததில்லை. தாங்கள் பரீட்சையில் நன்றாகச் செய்தால் வந்து சொல்வார்கள் நான் ஒரு திறமை மிக்க பேராசிரியர் என்று. பரீட்சையில் கோட்டைவிட்டால், மேலிடத்தில் போய் முறையிடுவார்கள் நான் கதைக்கும் ஆங்கிலம் தங்களுக்கு விளங்கவில்லையென்று. இதிலை வேதனை என்னவெண்டால் வெள்ளைக்கார மாணவர்களைவிட தெற்காசிய மாணவர்கள்தான் கூடுதலாக இப்படிப் பிரச்சினை கொண்டுவருவார்கள். அவர்களது (தெற்காசிய) பெற்றோரைவிட எனது ஆங்கிலம் மிகச்சிறந்தது என்று சொல்லவேண்டும் என்று ஆசை. ஆனால் நான் அப்படிச் சொன்னால் அதையே இன்னுமொரு பிரச்சனையாகக் கொண்டுவருவார்கள். மேலிடத்திலை உள்ளவர்களுக்கு என் புலமை தெரியும். எனவே, மேற்குறிப்பிட்ட முறைப்பாடுகளால் எனக்கு இதுவரை ஒரு பிரச்சனையும் வந்ததில்லை. எனினும், இப்ப ஒலிவாங்கியின் உதவியோடுதான் வகுப்பு நடத்துறனான்.


வகுப்புகளிலை படிப்பிக்க விடமட்டுதுகள். கதைக்குங்கள். அஞ்சு நிமிசத்துக்கொருக்கால் கைத்தொலைபேசி அடிக்கும். சிலவேளை சத்தம் போடுறவர்களை வகுப்பைவிட்டுக் கலைத்திருக்கின்றேன். எல்லா மாணவர்களுக்கும் முன்னாலை நான் தங்களை நாகரீகக் குறைவாக ஏசிப் போட்டேன் என்று ஒரு முறைப்பாடு. வெள்ளையின பேராசிரியர் எண்டால் எவ்வளவு அமைதியா இருக்குங்கள்!


எப்பிடித்தான் multiple choice கேள்விகளுக்குரிய விடைத்தெரிவுகளைக் கொடுத்தாலும், அதுக்குள்ளை சரியான விடை இல்லையென்பார்கள். அதனாலை, இப்ப "None of the above" என்ற தெரிவை ஐந்தாவதாகப் போடுறனான்.


கூட்டல் கழித்தலிலேயே பிழைவிடுவார்கள். ஒரு step பிழையெண்டால் அதுக்குப் பிறகு வாற எல்லாம் நான் வைத்திருக்கும் பதிலைவிட வேறானதாகத்தானே இருக்கும். அதனாலை அந்தப் பிழையான கூட்டல் கழித்தலுக்கு புள்ளிகளை எடுப்பேன். உடனே, இது கூட்டல் கழித்தலை சோதிக்கும் பாடம் இல்லையென்று பெரிய கருத்துரையே நடாத்துவார்கள்."


இவ்வாறாக அவர் சொல்லிமுடிக்க எனக்கு வாழ்க்கையே வெறுத்துப் போச்சு. நான் என்னமோ நினைச்சிருக்க இந்தாள் என்னன்னமோ சொல்லுது. இதனைவிட வேறென்ன பிரச்சனைகள் இருக்கும் என்று கேட்டேன்.


மற்றைய பேராசிரியர்களோடு உணவுச் சாலைக்குச் சென்று மதிய உணவு கொள்ளும் போது அவர்களுடைய சம்பாசணையில் தானும் இணைவது லேசுப்பட்ட காரியம் இல்லையாம். தனிய தெற்காசிய செய்திகளை மட்டும் வாசிக்காமல், கனேடிய/அமெரிக்க/ உலகச் செய்திகளையும் நாங்கள் வாசித்திருக்க வேண்டுமாம். பிடிக்காட்டிலுங்கூட தென்னமெரிக்க விளையாட்டுகள் பற்றியும், அந்த விளையாட்டு வீரர்களின் ஊதியம் பற்றியும் கொஞ்சமெண்டாலும் தெரிஞ்சிருக்க வேணுமாம்.


அவருக்கு நானென்ன புத்தி சொல்ல முடியும். ஆறுதலாக நாலு வார்த்தை சொன்னேன். அந்த நாலு வார்த்தையை எனக்குஞ் சொல்லிக்கொண்டேன். யாரறிவார், அந்த வார்த்தைகள் எனக்கும் ஒருநாள் தேவைப்படுமோ என்னவோ!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
statistics