Thursday, July 15, 2004

How to comment in Tamil:

To comment in Tamil, go to Puthuvai tamil writer and type what u want to say in the upper box. Then copy and paste the Tamil comments in the comment window. (If u want to say "அம்மா", just type "ammaa")

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

வாசித்த சிலவும் பாதித்த சிலவும்:

கடந்த ஆண்டு ஊருக்குப் போய்வந்த நண்பன் ஒருவன் வன்னியின் தற்போதைய தோற்றம் பற்றிச் சில விடயங்களையும் படங்களையும் பகிர்ந்ததுண்டு. அந்த நண்பனுக்குப் 'பழைய' வன்னி பற்றிப் பெரிதும் தெரியாது.

முழக்கம் வார இதழில் "வன்னிப் பயணம்" என்ற தலைப்பில் ஒரு பெரியவர் பயணக் கட்டுரை எழுதி வருகின்றார். அவர் வயதாலும், அறிவாலும் பெரியவர். எனவே பழைய-புதிய என்று ஏதாவது ஒப்பிட்டு எழுதுவார் என்ற எதிர்பார்ப்பில் வாசிக்கத் தொடங்கினால் ஒரே ஆச்சரியம்! அதில் பத்து சவீதங் கூட அவர் வன்னி பற்றிக் குறிப்பிடவில்லை.

பயணத்திற்கு முதல் தான் வாதநோய் மருத்துவரைப் போய்ப் பார்த்ததாகச் சொல்கின்றார்.... வாதம் பற்றி தான் இணையத்தளத்தில் தேடியதாகச் சொல்கின்றார்... பிறகு, "நல்லதம்பி" என்ற திரைப்படம் பற்றிச் சொல்கின்றார்...

ஏயர் லங்கா விமானப்பணிப் பெண்கள் சிங்களத்தில் மட்டும் (ஆயுபோவன் சொல்லி) வரவேற்றதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழர்கள் சிறீலங்காவில் சம உரிமையுடன் வாழவில்லை என்பதைப் பற்றி இப்ப எவரும் சொல்வதில்லைத்தானே! பூமி தட்டை இல்லை என்பதை எத்தனை நாளுக்குத்தான் சொல்லிக் கொண்டிருப்பது!
ச்சை! நான் சொல்ல வந்தது அதில்லை. பயண அனுபவம் எழுதும்போது வரலாற்று நிகழ்வுகளைக் குறிப்பிடுவதும், பழைய நாட்களை இரை மீட்பதும் நல்ல விடயம்தான். ஆனால் அதுவே அளவுக்கு மீறினால்...?
======================

குமுதம் இதழில், இருமனைவிகளுடன் முதலிரவு என்று ஒரு கட்டுரை. அடடா, தமிழநாட்டிலும் இப்படியா? ஒருவனுக்கு ஒரு மனைவி அல்லது ஒருமனைவிக்கு ஒரு கணவன் என்பது அங்கு சட்டம் இல்லையா? சரி, அப்படி இருந்தாலும் இந்த விடயத்தை தமிழ்நாட்டுக்கே முரசறைந்துவிட்டுச் செய்வானா ஒருவன்?

ஒண்டுமில்லையாம். திரைப்படமொன்றுக்கான காட்சியாம் அது. அக்கட்டுரை பின்வருமாறு போகின்றது. "...இங்கே மனைவியுடன் பாடும்போது காதலியின் நினைவு வந்துவிடுகிறது. அதனால் மனைவிக்கு ஒரு பல்லவி காதலிக்கு ஒரு பல்லவி என்று டூயட் போகிறது"

முதலமைச்சருக்குத் தீவிரவாதிகளுடன் தொடர்பென்று ஒரு படத்தில் காட்சி வந்தால் அதையே ஒரு கட்டுரையாகப் போட இவர்களுக்குத் துணிவு இருக்கா?

போனால் போகின்றது; அவர்களது எழுத்துச் சுதந்திரம் என்று விட்டுவிடலாம் என்றால், அதன் இறுதிவரிகள் கடுங்கோபத்தை உண்டாக்குகின்றன. அது இதுதான்:
"இந்தக் காட்சிகள் படமெடுக்கப்பட்டது பாண்டிச்சேரியில் பாரதியார் வாழ்ந்த வீட்டுக்குப் பக்கத்தில். செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே"

பாரதியின் பெயரைப் போகிற போக்கில் எடுத்துவிடுவது பாரதி இனி உயிர்த்துவர மாட்டார் என்ற துணிவிலன்றி வேறெதுவாக இருக்கப் போகின்றது!

உண்மையைச் சொல்லுங்கள். இப்படியான கட்டுரை சமுதாய விழிச்சிக்காகவா எழுதப்பட்டது? எனக்கென்னமோ இக்கட்டுரையின் நோக்கத்தை விட அக்காட்சி பரவாயில்லைப் போலுள்ளது!

நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்?

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, July 14, 2004

என்னை வாழவிடு

உன்னை நான் காதலிக்கத் தொடங்கி பதினாறு தடவை பௌர்ணமி வந்துவிட்டது...! ஏனோ எனக்கு அமாவாசைகளைப் பிடிப்பதில்லை... அதிருக்கட்டும் உனக்கேன் என்னைப் பிடிப்பதில்லை...?

இந்தப் பௌர்ணமி நிலவு வட்டமாக இருக்கிறது. அதனைப் பார்க்கும்போது உந்தன் நினைவுகள் அலைகளாய் என்னை அலைக்கழிக்கின்றன...! இருந்தும் இந்தக் கொட்டும் பனி இரவில் நிலவை -பஞ்சுமிட்டாய் பார்க்கும் ஒரு பாலகனாய்- பார்த்துக் கொண்டிருக்கிறேன்...!

சின்னஞ் சிறு வயதுகளில், சின்னஞ் சிறு வகுப்புகளில் படித்த(?) நாட்களில் எனக்கு உன்னைப் பிடிப்பதில்லை. அப்போது உனக்கு என்னைப் பிடித்திருக்கலாம். ஆனால் நான் அதனை அறியாமல் விலகியே நடந்தேன்.

அந்த நாட்களில் என்னோடு படிக்கும் குட்டி, சிவா இருவரும் சந்தோசத்தில் பாட்டெல்லாம் பாடுவார்கள்...! நீ எப்போது வகுப்புக்கு வருவாய் என்று ஆவலோடும், ஆசையோடுங் காத்திருப்பார்கள். அப்படியே இப்போதெல்லாம் நானும் உன் வருகையை எதிர்பார்க்கத்தொடங்கி விட்டேன். ஆனால்...அந்தக் குட்டிக்கும், சிவாவுக்கும் நீ தொடர்ந்து கண் காட்டுவதை என்னால் உணர்ந்து கொள்ள முடிகின்றது. என்னில் மட்டும் ஏனிந்த ஓரவஞ்சனை...?

அவன் போட்ட எந்த மந்திரத்தில் நீ அவனது வலையில் விழுந்தாய் என்று இந்தப் பதினாறு பௌர்ணமிகட்கும் முந்திய ஒருநாளில் சிவாவையே கேட்டேன். நான் உன்னைக் காதலித்தால் நீயும் என்னைக் காதலிப்பாய் என்று அவன் சாதாரணமாய்ச் சொன்னான்.

நீ என்னைக் காதலிக்காவிடின் என் கல்வியே குழம்பிவிடும். ஏன், என் இளமையே வீணாகிப் போய்விடும். வாலிபன் ஒருவனின் வாழ்க்கையைக் கெடுத்த பாவி என்ற பட்டத்தை தயவு செய்து நீ பெற்று விடாதே...!

என் காதலே உன்னைப் புரிந்து கொள்ள என்னால்தான் முடியவில்லை. நீயாவது என்னைப் புரிந்து கொண்டு, என்னில் இரக்கங் காட்டு...! என்னோடு படிக்கும் சக மாணவர்கள் என்னைக் கேலி செய்வதைப் பார்த்தும் உன் மனம் இளகவில்லையா? நீ எனக்கு ஒரு தடவை கண் காட்டினாலே போதும் மீதியை நான் பார்த்துக் கொள்வேன்.

ஓ என் கணித பாடமே...! நாளைய வகுப்பிலாவது நான் உன்னைப் புரிந்து கொள்வேன். அல்லது நீ என்னைப்புரிந்து கொள்வாய். அந்த நம்பிக்கையில் விடியலிற்காய் காத்திருக்கிறேன். கணிதமே, கண் திறந்து என்னை வாழவிடு...!

-கிஸோக்கண்ணன்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, July 13, 2004

குழந்தாய்...!

நரகத்திலும்
குழந்தையுண்டாம்.
பாவம் செய்தார்க்கு
நரகமெனின்
குழந்தையும் பாவிதானோ?

குழந்தை அழுகையில்
கூடவே
பெரியாளாய்
பெரிதுமழும் மனசு.
'பாவங் குழந்தை,
என்ன வலியோ
என்ன குறையோ?'

குழந்தையாய் மாற
எனக்கும்
ஆசைதான்!
ஆனாலும்
பிடிக்காத மூஞ்சையெலாம்
செல்லங் கொஞ்சுமென
மனம் நினைக்க
ஆசை கரைந்து போம்.

தயவு செய்து
நீங்கள் யாவரும்
குழந்தையாய் மாறுவீர்.
நீவிர் அப்போ
தீது செய்யினும்
வலியெடுக்காதே...!

எவரேனும்
நிலத்தினில் துப்பினும்
சுள்ளென்று கோபமெழும்.
குழந்தை
முகத்தினில் துப்பினும்
இன்னும் மனமேங்கும்.
எனவே
குழந்தையாய் மாறுவீர்.

குழந்தையெனின்
கெட்டது தவிர்த்து
கேட்டது கிடைக்கும்.
கேளாததுங் கிடைக்கும்.

குழந்தைப் பிள்ளைக்கும்
குட்டி நாய்க்கும்
செல்லம்
கொடுத்தல் தவறென
பெரிய
சொறி நாய்கள் வவ்வும்.

இல்லாதொருவனுக்கு
குழந்தை மனம் சமமென்று
சிலது
அலம்பித் திரியும்.
அப்போ
மனிதர்களெல்லாம்
பெரிய்ய்ய்ய கடவுளெல்லோ...!

நஞ்சில்லாப் பாம்புகளும்
நல்மனத்து
வஞ்சிகளும், ஆடவரும்
பிஞ்சுக் குழந்தைகள்தான்;
யாவரும்
குழந்தையாய் இருந்தவர்தாம்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

முகமூடிகள்

        ஆடிக்காற்றின் வேகத்திற்கு முகங் கொடுக்க முடியாமல் காவோலை ஒன்று தன் கட்டவிழ்த்து மண்ணிற்கு வந்தது. அது வெறுங் காவோலை என்பதனாலோ என்னவோ பெரிதாக ஒருவருமே அலட்டிக் கொள்ளவில்லை. மாடு ஒன்று மட்டும் மோர்ந்து பார்த்து, முறைத்து விட்டுப் போனது.

        அம்மாவினதும், சின்னம்மாவினதும் ஒப்பாரி எல்லோரையும் உருக்கிக் கொண்டிருந்தது. அவர்களுடன் போட்டியிட்டுக் களைத்து பறை மேளங்கள் கூட சற்று ஓய்ந்துபோய் இருந்தன.

        வெற்றிலையைச் சப்பிக்கொண்டிருந்த ஆச்சி ஒருவர் வெறும் சுண்ணாம்பிற்காய் யாரையோ திட்டிக் கொண்டிருந்தார். சிறுசுகள் "அம்மா ஒரு கடைக்குப் போனா..." என்று ஏதோ விளையாட்டில் மூழ்கியிருந்தன.

        "குமாரின்ரை அம்மாப்பா செத்துப் போச்சுது. பாவம் குமார்" பக்கத்து வீட்டுப் பரமக்காவின் மகன் வாக்குக் கண்ணன் யாருக்கோ சொல்லியது என் காதிலும் விழுந்தது. பாவப்படுவதுபோல் அவன் என்னை பழிப்பது உள்ளங்கை நெல்லிக்கனியாய் புரிந்தது. எப்போதோ ஒருநாள் கிளித்தட்டு விளையாடும்போது அவனோடு நான் அடிபட்டதற்காய் சமயம் பார்த்து பழிவாங்கிக் கொண்டான்.

        அதனைக் காதில் விழுத்தாதது போல் மறுபக்கம் திரும்பினேன். "நாம் என்ன குற்றம் செய்தோம். எம்மை ஏன் கட்டித் தூக்கியுள்ளீர்கள்?" என சொல்லாமல் சொல்லி தோரணங்கள் காற்றோடு வீணாகச் சண்டை போட்டன.

        அவற்றின் மீது காரணம் புரியாமல் வெறுப்பு வர அப்புவின் பிரேதம் உள்ள பக்கம் பார்வையைத் திருப்பினேன். அங்கு அண்ணா அப்புவின் முகத்தருகே வரும் இலையான்களைக் கலைக்க விசிறி ஒன்றால் விசிறிக்கொண்டிருந்தான்.

        "நாங்கள் வெறும் விசிறிக்கெல்லாம் பயப்படமாட்டோம்" என்பது போல் இலையான்கள் மல்லுக்கு நின்றன. தன்னோடை படிக்கிற பெட்டையள் நிக்கிறதாலை அழலாமோ, வேண்டாமோ என்று யோசித்துக்கொண்டிருந்த அண்ணா நான் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் என்னை தன்னருகே கூப்பிட்டான்.

        "அழாதை குமார்...நீ அழுகிறது அப்புவுக்கு பிடிக்காது..."
இதுக்குமேல் எதுவுமே சொல்லத்தோன்றாமல் அவன் என் தலையை தடவத் தொடங்கினான்.

        தன்னைச்சுற்றி நடப்பது எதுவுமே தெரியாமல்... தனக்காக இத்தனை பேர் அழுவதைக்கேளாமல்... அப்பு அமைதியாகப் படுத்திருந்தார்.

        "பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு போகட்டோ எண்டு கேட்க, எனக்கு ஒண்டுமில்லை; நாளைக்கு எழும்பி நடப்பன் எண்டு சொன்னியேணை. இப்ப ஒண்டுஞ் சொல்லாமல் போட்டியே. என்னைப்பெத்த ராசாவுக்கு என்னணை அவசரம்?" அப்புவின் பாதங்களைப் பற்றியவண்ணம் அம்மா தொடர்ந்துங் குமிறினார்.

        ஊர்ப்பெருசுகள் இதனைச்சாட்டி ஓசியில் கிடைத்த கள்ளைக் குடித்துவிட்டு அரசியல் பற்றி ஏதோ அலம்பிக் கொண்டிருந்தார்கள்.

        "கிழடு நேரம் பார்த்துச் செத்துப் போச்சு! இந்த முறை திருவிழாவுக்கும் போகேலாமல் வந்திட்டுது" சித்தப்பா புறுபுறுத்தபடி தனது குறையினை யாரிடமோ முறையிட்டுக் கொண்டிருந்தார்.
        நேற்றுவரைக்கும் சுவாசித்துக்கொண்டிருந்த அப்பு இப்போது பிணமாகிக் கிடந்தார். கடவுளே இது கனவாக இருக்கக்கூடாதா என்று என் உள்மனம் ஏங்கியது.

        முன்பொருநாள் அம்மா போட்டுத்தந்த தேத்தண்க்கு சீனி காணாது எண்டு நான் சிணுங்கியபோது அப்பு தன்னருகே என்னை கூப்பிட்டார்.
"எடை மோனை...! நீ தேத்தண்க்கு சீனி காணாது எண்டு அழுகிறாய். இந்த உலகத்திலை எத்தினைபேர் ஒரு நேரச் சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் இருக்குதுகள். காலுக்கு சும்மா போடுற செருப்புக்கு வழி இல்லாமல் சில சனம் கவலைப்படும்; ஆனா காலே இல்லாமல் எவ்வளவு சனம் கஸ்ரப்படுகுதுகள். கிடைச்சதை வைச்சு சந்தோசப்பட வேண்டும் ராசா. சும்மா எந்த நேரமும் புறுபுறுக்கக்கூடாது" என்று எப்போதோ அவர் சொன்னதுக்கு இப்போது இலேசாக அர்த்தம் புரிந்தது.

        செல்லமக்கா வீட்டு நாயோடை நான் சேட்டைவிட அது என் விளையாட்டுப் புரியாமல் கடித்துக்குதறியது. அப்போது என்னை மந்திகை ஆஸ்பத்திரியில் சேர்த்த போது ஒரு நொடியும் விலகாது அப்பு என்னை பார்த்து சிந்திய கண்­ர் இன்னும் மனசுக்குள் ஈரமாய் இருக்கின்றது. பிறகு வாற போற ஆக்களட்டை எல்லாம், "நாயின்ரை சாப்பாட்டை எடுத்துக்கொண்டு ஓடினால் அது கடிக்காமல் என்ன செய்யும்?" என்று பகிடிவிட்டது இன்னும் நினைவில் இருக்கிறது.

        ஒவ்வொரு தரமும் வன்னியிலை இருந்து வரும்போது தேனும், நெய்யும் கொண்டு வரும் என்ரை அப்பு...
        நான் சோதினையிலை பாஸ் பண்ணும் போதெல்லாம் அதனை ஊரெல்லாம் முரசறைந்து, பிறகு எங்கடை அம்மன் கோவிலை சுற்றி அங்கப்பிரதட்சணை செய்யும் என்ரை அப்பு...
        "அப்பு எண்டு சொல்லக்கூடாது! அம்மாப்பா எண்டுதான் சொல்லவேணும்" என்று அம்மா எனக்கு அடிக்கின்ற வேளைகளில் எல்லாம் என் கண்­ரை ஆதரவாகத் துடைக்கும் என்ரை அப்பு...
        தன்ரை காசிலை எனக்கு சைக்கிள் வாங்கித்தந்த என்ரை அப்பு இனி இல்லை என்பதை எண்ணிப் பார்க்கையில் மனசுக்குள் சோகம் இலேசாக ஊற்றெடுக்கத் தொடங்கியது; அது கண்களால் அருவியாக கசிந்து...சிந்தி...தரையைத்தொட்டது.

        ஒப்பாரிகளுக்கு மத்தியில் மாட்டிக்கொண்டு வாயைச்சற்று பிளந்தபடி கட்டிலில் கிடத்தப்பட்டிருந்த அப்புவின் பிரேதத்தைப் பார்க்கையில் நேற்றுப் பிந்நேரம் வீட்டில் நடந்தது கண்ணிற்குள் வந்து போனது.

        பேச்சு எதுவுமின்றி தன் மூச்சினை இழுத்து, இழுத்துவிடும் அப்புவின் முகத்தையே நான் பார்த்துக் கொண்டிருக்க... முருகேசண்ணருடன் அறைக்குள் நுழைந்த அப்பா என்னை விளையாடப்போகும்படி கலைத்தார். "ஓம்" என்றுவிட்டு அவர்களுக்கு தெரியாமல் கதவிடுக்கால் நோட்டம் விட்டேன்.

        "என்ன முருகேசண்ணை! கிழவன் இப்போதைக்கு சாகாது போலை கிடக்கு. ஒரு மாசத்துக்கு மேலை ஆச்சு; கிழவன் பேச்சு மூச்சு இல்லாமல் கிடக்கு" என்று கேள்விக்குறியோடு அப்பா முருகேசண்ணரின் முகத்தைப் பார்த்தார்.

        "நான் சொன்னனாந்தானே...மனிசன் இனி பிழைக்கமாட்டுதெண்டு. அம்பது வருசமா தோட்டம் செஞ்ச உடம்பு அதுக்குன்னம் சரியாது" அப்புவின் தேகபலத்தையும், மனபலத்தையும் மெச்சிய முருகேசர் அப்பாவின் பதிலிற்குக் காத்திராமல், தன்னோடு கொண்டு வந்த ஸொப்பிங் பாக்கை திறந்தார். அதற்குள் ஒரு கள்ளுப்போத்திலும், கடதாசியில் சுத்தி கொஞ்ச புழுதி மண்ணும் இருந்தது.

        அப்பா அப்புவின் வாயைத்திறக்க முருகேசண்ணர் கள்ளை அப்புவுக்குப் பருக்கினார். அது தொண்டைக்குழி தாண்டிச்செல்லாமல் அப்புவுக்கு பிலக்கெடுத்தது. பருக்கப்பட்ட வேகத்திலேயே கள்ளு வெளியே முருகேசண்ணரின் முகத்தில் தெறித்தது.

        "அரியண்டம் பிடிச்ச கிழவனுக்கு சாகவே விருப்பமில்லை..." சொல்லியவாறே தொடர்ந்து மண்ணை அப்புவின் வாய்க்குள் இட்டார். "க்கும்" என்ற ஒலியை விட்டபடி அப்புவின் உடல் துள்ளிச்சரிந்தது. நிலமையின் விபரீதம் அப்போதுதான் எனக்கு இலேசாகப்புரிந்தது.

        "ஐயோ...! என்ரை அப்புவை என்ன செய்யிறீங்கள்...?" எண்டு கத்திக் கொண்டே அறைக்குள் நுழைந்தேன்.

        "டேய் குமார்... உன்னையெல்லோ விளையாடப்போகச் சொன்னனான்" அப்பா பளார் என்று என் முதுகில் விளாசினார். அடியின் வீரியந் தாங்க முடியாமல் வெளியே போய் விழுந்தேன்.

        இது நடந்து சற்று நேரத்தில் சொல்லிவைத்ததுபோல் அம்மாவின் அழுகுரல் ஊரையே கூட்டியது. "பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு போகட்டோ எண்டு கேக்க வேண்டாம் வேண்டாம் எண்டு சொன்னியேணை". என்னைப் பெத்த ராசாவுக்கு என்னணை அவசரம்?"

        அம்மாவின் பசப்பு வார்த்தைகள் என் நெஞ்சைக்கூறு போட்டன. எல்லோருமாகச் சேர்ந்து என் அப்புவை கொண்டு போட்டு இப்ப பாசாங்கு விட்டுக் கொண்டிருக்கினம்.

        எனக்கு எங்கிருந்து அந்த தைரியம் வந்ததோ தெரியவில்லை. மனசுக்குள் கருக்கொண்ட எரிச்சல் உதடுகளால் பிரசவமானது. "நீங்கள்தானே அப்புவுக்கு கள்ளை பருக்கி சாக்கொண்டனீங்கள்" விசும்பியவாறே ஓலமிட்டேன். எல்லோரும் என்னையும், அம்மாவையும் மாறி மாறிப் பார்த்தார்கள். அம்மாவின் கறுத்துப்போன முகம் அவமானத்தில் சற்று சிவந்தது. ஒன்றுமே சொல்லத்தோன்றாமல் திருதிருவென முழித்தார்.

        அங்கு ஊர்ப்பெரிசுகளோடு கதைத்துக்கொண்டிருந்த அப்பாவுக்கும் நான் கத்தியது கேட்டிருக்கவேண்டும்.
        "குமார் இங்காலை வா!"
இலேசாக உறுமியவர் வீட்டுக்குப் பின்னால் கூட்டிச்சென்று...பூவரசந்தடி ஒன்றைப் பிடுங்கி கண்மண் தெரியாமல் என்னை அடிக்க ஆரம்பித்தார்.

        "என்ன, உமக்கு நீர் பெரிய ஆள் எண்டு நினைப்போ?" சீறிய அப்பாவின் முகத்தைப் பார்க்க பயமாகவும் இருந்தது; அசிங்கமாகவும் இருந்தது.

        நான் பெரியாளாக இருந்தால் அப்புவுக்கு கள்ளை பருக்கி சாக்கொண்டதைப் பற்றி கதைக்கலாம் போலை எல்லோ கிடக்கு. அப்ப அம்மா ஏன் எல்லாம் தெரிஞ்சும் ஒன்றும் தெரியாதவராக இருக்கிறார். ஒருவேளை அம்மா பெரியாள் இல்லையோ..? அப்பாவும், முருகேசரும் மட்டுந்தான் பெரியாக்களோ...? எனக்கு குழப்பமாக இருந்தது.

        மனசில் இருந்த வலியோடு அவர் அடித்த வலியும் சேர்ந்து கொள்ள மனசு ரணமாகியது. வற்றிப்போனதோ என்னவோ எனக்கு கண்­ரே வரவில்லை.

        எல்லாமே முடிந்து அப்புவின்ரை பிரேதத்தை வேரக்கழிச்சுடலையில் கொண்டு போய் எரித்துமாகிவிட்டது. அடுத்த நாள் காலையில் எழும்பவே முடியாது தலையிடி பிய்த்துத் தின்றது.

        கண்களை மூடிகொண்டு 'அப்பு...அப்பு' என்று அனுங்கியபோது அம்மா வந்தார். எழும்பச் சொல்லியும் முடியாமல் 'உம்' கொட்டினேன். என் நெற்றியில் கைவைத்துப் பார்த்துவிட்டு, "என்னங்கோ...குமாரின்ரை உடம்பு நெருப்பா கொதிக்குது. எழும்ப மாட்டாமல் கிடக்கிறான். ஒருக்கா டொக்டர் முருகானந்தாவட்டை காட்டிப்போட்டு வாங்கோ" அம்மா அக்கறையோடு சொல்ல, அப்பா தலையாட்டிவிட்டு தன் சிகரெட்டில் கவனஞ் செலுத்த ஆரம்பித்தார்.

        அந்த காலைநேரத்திலும் சின்னம்மா வந்து அம்மாவோடு கதைப்பது தெளிவாகக் கேட்டது. நேற்றிரவு அப்பு வந்து கதவை தட்டினவா எண்டும் தன்ரை பேரை சொல்லி கூப்பிட்டவா எண்டும் அம்மா சொல்ல, அதனை நம்பாமலோ என்னவோ சின்னம்மா மௌனத்தில் ஆழ்ந்தார்.

        அம்மாவுக்குப் பக்கத்திலைதான் நான் ராத்திரி படுத்தனான். அவா சொல்வது போல் அப்படி ஒன்றுமே நடக்கேல்லை. அம்மாவால் எப்படி கூசாமல் பொய் சொல்ல முடிகின்றது?

        "தோட்டக்கா எனக்கெண்டுதான் அப்பு சொல்லிக் கொண்டிருந்தவர். நீ என்னண்டா உனக்கெண்டு சொல்லுறாய். எங்கை உறுதியை காட்டு பாப்பம்?" சின்னம்மா அம்மாவிடம் உக்கிரத்தோடு கத்தினார். அம்மாவும் விடவில்லை. தானும் பதிலுக்கு இரைந்தார்.

        'அப்பு...அப்பு' எண்டு வெளியே பாசாங்கு செய்தவர்கள் இப்போது சொத்துக்காய் சண்டை பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

        அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் எண்டு கணபதிப்பிள்ளை மாஸ்ரர் சொன்னதெல்லாம் இவர்களுக்கு தெரியாதா...?

        வளர்த்த கடா மார்பில் பாய்வது எண்டதுக்கு இதுவா அர்த்தம்..? நெஞ்சுக்கடியில் இருந்து கேள்விகள் அடுத்தடுத்து எழுந்தன.

        "டேய் குமார்...! வளவுக்கை கிடந்த இது எப்படி வீட்டுக்கை வந்தது?" கத்தியவாறே அப்பா என்னருகில் வந்தார். அவரது கையில் வெறும் போத்தில் ஒன்றிருந்தது.
        "ஓ உந்தப்போத்திலோ...? நான்தான் எப்பாலும் ஒருக்கா எனக்கு தேவைப்படும் எண்டு எடுத்து வைச்சனான்" என் நான் குத்தலாகச் சொன்னது அவருக்கு புரிந்திருக்க வேண்டும்.

        "சரி சரி! வெளிக்கிடு; டொக்டரட்டை போவம்" என்று தேவை இல்லாமல் சினந்தார்.

        "ஏன் டொக்டரடைப் போய் வீணாக் காசைச் செலவழிப்பான்? அப்புவுக்குப் பருக்கின கள்ளிலை மிச்சமிருந்தா எனக்குப் பருக்குங்கோவன்...!" உள்ளத்தில் உள்ளதை நான் கொட்டியதும் "என்னடா சொன்னனீ...?" கையை ஓங்கியவர் பின் தயங்கி...தலை குனிந்து...மீண்டும் தன் சிகரெட்டில் மூழ்கினார்.

        ஒருவிதத் திருப்தியோடு மறுபக்கந் திரும்பினேன்; சுவரில் மாட்டப்பட்டிருந்த படத்தில் அப்பு ஒன்றுமே தெரியாதவராக சிரித்துக் கொண்டிருந்தார்.

        யாராலோ தோற்கடிக்கப்பட்டது போல் உள்ளுணர்வு ஓங்கி அலற...கற்பூரம் காற்றிலே கரைவதுபோல் சோகத்தில் கரைந்தேன்.

        இலை துளிர்த்து, பச்சை காட்டி, வானம் பார்த்த ஒரு சிறுசெடியை வேரோடு பிடுங்கி எறிந்தது போல் என் சந்தோசங்கள் ஏன் சிதைந்து போயின...? என் கேள்விகளுக்குப் பதில் அளிக்க அங்கு எவருமே இருக்கவில்லை.

        அப்பு என்னைஅழைப்பது போல் உணர்ந்தேன். அம்மாவினதும், சின்னம்மாவினதும் கூச்சல் இப்போது பெரிதாகக்கேட்டது.
(யாவுங் கற்பனையல்ல)

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
statistics