Sunday, June 12, 2005

பிரிவே என்னைப் பிரிந்து போ

'ஒண்டின்ரை அருமை அது இருக்கேக்கை தெரியாது; பிரிந்து போன பின்புதான் தெரியும்' என்று சொல்லிக் கொண்டே எல்லாவற்றையும் பிரிந்து போகச் செய்யும் அதிசயமான இரண்டுகால் பிராணிகள் நாங்கள்.

'இருக்கேக்கையே அருமை தெரியேல்லையாம்; பிரிந்து போன பின்பா தெரியப் போகின்றது' என்று சொல்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

சொந்தங்களையும், பிராணிகளையும், பொருட்களையும் பிரிவதைத்தான் பிரிவென்று யாவரும் சொல்கின்றார்கள்.

எனது அடையாளங்களை நானே இழந்துபோவது பிரிவில்லையா?

என்னை நானே பிரிவது பிரிவில்லையா?

எனது சின்னஞ்சிறு பிராயத்தை விலகி மூப்படைந்து செல்வது பிரிவில்லையா?

பரிவுக்குரிய ஒன்றை விலகிச் செல்வது கட்டாயம் பிரிவாகத்தான் இருக்க முடியும். சின்னஞ்சிறு பிராயத்தை நினைச்சுப் பார்க்கவே என் சந்தோச வானத்தில் பட்டம் பறக்கிறது.

பள்ளிகூடத்துக்கு கள்ளம் போட்டுவிட்டு, அம்மா ஏசப் போகின்றாவே என்ற பயத்தில் அம்மாவுடன் சேர்ந்து சட்டி பானை கழுவி, வீடெல்லாம் துப்பரவு செய்து, அம்மாவுக்கு ஐஸ் வைத்தது ஏன் இப்போ கரைந்து போயிற்று?

சீனிப் போத்தலைத் திறக்க முடியாமல் அதனை உடைச்சு சீனி தின்ற அந்த இனிப்பான பொழுதுகள் ஏன் உடைந்து போயின?

அக்காளுடன் அடிபட்டு அடிப்பாளே என்ற பயத்தில் வேப்பமரத்தில் நாள் முழுக்க ஏறியிருந்த பொழுது ஏன் இறங்கிப் போயிற்று?

அழகமக்காத்தை வீட்டுக் காணியிலை சும்மா விழுந்து கிடந்த ஒற்றை மாங்காயை எடுத்துக் கொண்டு ஓடிவர, அது களவு என்று கடிந்த அக்கா இன்று கனடாவில் சொல்கின்றாள், "தம்பி, உனக்கொன்றும் தெரியாதடா. பிடிபட்டால்தான் களவு; மற்றபடி களவில்லை". அக்காவை மாற்றியது எது? காலமா? குளிரா? பணமா? மற்ற மனங்களா?

பிரிந்து போன சின்னஞ்சிறு பிராயமே, நீ திரும்ப வாராயோ?

சின்னனிலை மனசிலை கள்ளமில்லை; வஞ்சமில்லை. பிள்ளையார் எண்டு சொன்னாலே மூன்றுமுறை தோப்புக்கரணம் போடுவம். இன்று...? இன்று பிள்ளையார் பால் குடிக்கின்றார் என்று பகிடிவதை செய்கின்றோம்.

வஞ்சனை. மனசுபூராவும் வஞ்சனை இன்று. பொய், களவு, ஏமாற்று, காட்டிக் கொடுத்தல், முன்னே நின்று அனுதாப மொழிபேசிப் பின்னே அவன் அப்படியாம் இவள் இப்படியாம் என்று புறம் பேசுகின்றோம்.

இது சந்தோசமா? மற்றவரின் துன்பத்தில், இழப்பில், குறைபாடுகளில் சிரிப்பது ஆனந்தமா? ச்சை...என்ன மனிதர்கள் நாங்கள். புண்ணைச் சொறிவதில் எவ்வளவு பேரின்பம் எமக்கு.

கெட்ட எண்ணங்களே, வஞ்சகப் பொழுதுகளே, தீய கனவுகளே யாவும் என்னைவிட்டுப் போங்கள். கெட்டவை விலகுவது பிரிவில்லைத்தானே.

பிரிந்த உறவுகளே! இன்னும் 10, 20 அல்லது முப்பது ஆண்டுகளின் பின் நாம் சந்திக்கலாம்; சந்திக்காதும் போகலாம். ஒருவேளை சந்திச்சாலுங்கூட அடையாளம் மாறி அடையாளங் காண மாட்டோம். இவரை முந்தி எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று யாரைப் பார்த்தாலும் தோன்றுவது போல யாரோ ஒரு நபர் என்றி விலகிச் செல்வோமோ யாரறிவார்.

சேர்ந்து பிரிவதும்
சேராமே பிரிவதும்
பிரியாமலே பிரிவதும்

எங்கே, எப்போ, யாருக்கு, எவருடன், ஏன் நடக்கும் என்று தெரியாத காரணத்தால்...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

7 Comments:

At 3:07 PM, June 12, 2005, Blogger Muthu said...

கிஸோக்கண்ணன்,
இப்பதிவு அருமை. எனக்கு இக்கவிதையை ஞாபகப்படுத்துகிறது.
http://muthukavithai.blogspot.com/2003_12_14_muthukavithai_archive.html#107161531395127240

 
At 7:17 PM, June 12, 2005, Blogger கிஸோக்கண்ணன் said...

முத்து, உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி. இப்பதான் தொலைதூரத்திலிருந்து வந்தேன். நன்றியுரை எல்லாம் எழுத வேணுமாம். மதி சொன்னார். அதனை எழுதிவிட்டு அந்தக் கவிதையைப் பார்க்கின்றேன்.

 
At 6:19 PM, June 13, 2005, Blogger கிஸோக்கண்ணன் said...

\\அதை நினைத்தால் அழகாயிருக்கிறது..
ஆனால் அது அன்றைக்கென்னவோ
அவ்வளவு அழகாயில்லை//

உண்மைதான். ஒன்று இருக்கும்போது அதன் அருமை புரிவதில்லை என்பதும் உண்மைதான்.

 
At 11:28 PM, June 16, 2005, Blogger முகமூடி said...

பிரிந்து போன சின்னஞ்சிறு பிராயமே, நீ திரும்ப வாராயோ?
-- நான் தனியனில்லை போலிருக்கே...

 
At 9:40 AM, June 17, 2005, Blogger கிஸோக்கண்ணன் said...

நானும் அப்ப தனியனில்லை.

 
At 10:54 AM, July 20, 2007, Anonymous Anonymous said...

Excellent thoughts!!! Kiso, you should write more stories... They are very inspiring, and makes everyone laughs...

 
At 8:36 PM, November 25, 2010, Anonymous Anonymous said...

Brillient!

 

Post a Comment

<< Home

statistics