Saturday, February 05, 2005

ஆசிரியர்கள் வாழ்க!

நானொரு ஆராய்ச்சி மாணவன்.

தமக்கென வாழ்க்கையும், குடும்பமும் உள்ள சக மாணவர்கள் தமது வீட்டிலேயே தங்கி இன்புற்றிருக்க, ஆராய்ச்சியின் மூலம் எதையாவது இப்பிறப்பில் கண்டுபிடித்தாகிவிட வேண்டுமென்ற ஆர்வக் கோளாற்றால் பீடித்திருக்கும் என்னைப் போன்ற சில பேர் மட்டுமே வாராந்த இறுதிகளில் பல்கலைக்கழகத்திற்குச் செல்வதுண்டு.

அதைவிட இன்றைக்கு வேலையுமாகிப் போய்விட்டது. என்ன வேலை? TA (teaching assistant) வேலை. ஆனால் எல்லாம் செய்ய வேண்டும். சில முதலாம் ஆண்டு வகுப்புகளில் 700ற்கு மேற்பட்ட மாணவர்கள் படிப்பார்கள். அவ்வளவு பெரிய தொகையினருக்கு சனிக் கிழமைகளில் பரீட்சை வைப்பதுதான் வசதி. சனிக்கிழமையில் வகுப்புகள் இல்லாத காரணத்தால் எந்த வகுப்பறைகளிலும் (lecture halls) பரீட்சையை வைக்கலாம் என்ற காரணம்தான். என் வேலை அவர்கள் நியாயமான முறையில் பரீட்சை எழுதச் செய்வதுதான் (invigilation / proctoring). மாணவர்களுக்கு ஒண்டுக்கு/இரண்டுக்கு வந்தால் பத்திரமாக மலசல கூடத்திற்கு அழைத்துச் சென்று பின்னர் இலேசாக வரும் அவர்களை பரீட்சை அறைக்குக் கொண்டு வருவதும் அதனில் அடக்கம்.

இதனைவிட இன்னுமொரு வேலையுமுண்டு. Tutorial நடாத்துவது. பேராசிரியர் வீட்டுவேலை (assignment) கொடுப்பார் ஒரு வகுப்புக்கு. அவர்களது வீட்டுவேலையில் உதவுவதும், மற்றும் பாடப் புத்தகத்திலிருந்து அவர்கள் கேட்கும் ஏனைய கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டியதுமுண்டு. அவர்களாது பாடப் புத்தகத்தில் chapter 5 இல் 5.1இல் இருந்து 5.52 வரை வினாக்கள் இருக்கும். 5.1, 5.2,...,5.10 போன்ற கேள்விகள் சுலபமாகவும், 5.50, 5.51, 5.52 என்பன கடினமாகவும் இருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சிலர் வருவார்கள். வினா 5.51 என்ன விடையென்று கேட்பார்கள். நானென்னத்தைச் சொல்ல. சில வேளைகளில் புத்திசாலித்தனமாய் விடை கொடுப்பதும், புத்திசாலித்தனமாய் பின்வாங்குவதும் உண்டு.

ஆனால் கடந்த கிழமை முட்டாள்தனமாய் மாட்டுப் பட்டுப் போனேன். அதுவே பெருங்கதை. நிற்க! ஆசிரியர்கள் மீதுள்ள மரியாதையும், மதிப்பும் அன்று என்னையறியாமலே கூடின. நாங்கள் கேட்கும் மொக்குத்தனமான கேள்விகளுக்கு அமைதியாகவும், அறிவுத்தனமாகவும் , கிட்டத்தட்ட எல்லா வேளைகளிலும் சரியாகப் பதில் சொல்வது என்ன அவ்வளவு சுலபமா! ஆசிரியர்கள் வாழ்க!

--- ---- ---------
தெற்காசிய நாடொன்றினைச் சார்ந்த பேராசிரியர் ஒருவர் தனது கற்பித்தல் அனுபவத்தைச் சொன்னார் இன்று. ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்கள் கனடாவில் கற்பிக்கும் போது எதிர்நோக்கும் பிரச்சினைகளைச் சொன்னார். உண்மையில் அதனைப் பற்றித்தான் பதிய வந்தேன். பின்னர் என் கதையைப் புலம்பிவிட்டேன். சிலவேளை அடுத்த வாரம்...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
statistics