சில லூசுகள் சீதனம் வாங்க மாட்டினமாம் (பகுதி 1)
தமிழ் என் உயிருக்கு நேர். ஆம் நான் ஒரு தமிழன். எமக்கென்று சில கலாச்சாரக் கூறுகள் உள்ளன. அவற்றை எமது அடுத்த சந்ததிக்கும் எடுத்துச் செல்வேன். ஒவ்வொரு தமிழனதும் கடமையிது என்பதனை உரத்துச் சொல்வோம் உலகுக்கு.
பெண்ணடிமை, பெண்ணியம், சீதனம் பற்றி இன்று இலக்கிய ஆக்கங்கள் தொட்டு இருபத்துநான்கு மணி நேர வானொலி தாண்டி, இலவசப் பத்திரிகை வரை எல்லாம் தம்மால் முடிந்தவரைக்கும் முழக்கமிடுகின்றன.
இது பற்றிய விழிப்புணர்வு இன்றைய இளைஞர்களிடையே இல்லாமல் போனதன் நிமித்தம் நான் இன்று இந்தச் சபையோருக்கு சீதனம் பற்றியும், பெண்ணடிமைத்தனம் பற்றியும் சற்றுச் சொல்லலாம் என்று வந்திருக்கின்றேன்.
உன்னாணைக் கேக்கிறன் சீதனம் வாங்கிறதிலை என்ன பிழை இருக்கு? என்ரை அம்மா சாணகம் அள்ளி, மிளகாய்க்கண்டு வைச்சு என்னைப் படிப்பிச்சவா. என்னை இப்படி ஒரு டாக்குத்தராக்குவதற்கு எவ்வளவு கஸ்ரப்பட்டிருப்பா என்று எனக்கு மட்டும்தான் தெரியும். அப்படியான எனது அம்மா கேட்கும் சீதனத்தை எனக்கு வாறவள் தாறதுதானே நியாயம்.
சில லூசுகள் சீதனம் வாங்க மாட்டினமாம். பாவம் அவை. பிழைக்கத் தெரியாததுகள். நான் நினைக்கிறன்அவையளுக்கு சீதனம் வாங்கிற அளவுக்குத் தகுதியில்லைப் போலை.
மற்றது கதையோடை கதையா எனக்கு ஒரு வடிவான, வெள்ளை நிறப்பெண்தான் மனைவியாக வர வேண்டும். வெள்ளை நிறத்திலை பெண்ணெடுக்கிறது அப்படியொன்றும் பெரிய காரியமில்லைப் பாருங்கோ. ரொறன்ரோவிலை ஒரு தமிழ்ப் பத்திரிகைக்கு 20 டொலர் கொடுத்தால் இன்ன நிறத்திலை இன்ன சாதிப் பெண் வேண்டுமென்ற மணமகள் தேவை விளம்பரம் போடுவினம். சொன்னா நம்புங்கோ, அந்தப் பத்திரிகை 20 டொலர் கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் போடும்.
நான் கொஞ்சம் கறுப்புத்தான். இப்ப அதுக்கு என்ன எண்டுறன். ஆணுக்கு கறுப்புத்தான் வடிவென்று உவையளுக்குத் தெரியாதாக்கும். வாறவள் கறுப்பெண்டாலும் பரவாயில்லை; என்ன கொஞ்சம் சீதனம் கூடத் தர வேண்டியிருக்கும்.
ஐயோ சொல்ல மறந்து போட்டன். வாறவள் படிச்சிருக்கக் கூடாது. படிச்சவைதான் பெண் சுதந்திரம் என்று சும்மா குடும்பத்திலை குழப்பத்தைக் கொண்டு வருகினம். கல்யாணங் கட்டினாப் பிறகு அவள் தன்ரை தாய் தகப்பனை ஸ்பொன்ஸர் பண்ணுற வேலையெல்லாம் இருக்கக்கூடாது. அதுகள் கிழடுகள்...இங்கை வந்து வீட்டிலை கரைச்சல், அதுகளுக்கும் கரைச்சல்.
அவள் வேலைக்குப் போறன் எண்டாலும் எனக்குப் பரவாயில்லை. இங்கை பருங்கோ, நாங்கள் பெண்களின் உணர்வுகளை மதிக்கப் பழக வேண்டும். ஏனெண்டால் அதுகள் ஏற்கனவே பலவீனமானவர்கள்.
அவள் வேலைக்குப் போனால் அந்தக் காசிலை என்ரை தங்கைச்சிக்கு நல்ல இஞ்சினியர் மாப்பிள்ளையா கட்டிக் கொடுக்கலாம். என்ரை அம்மா, அப்பா பாவம். அவையளையும் ஸ்பொன்ஸர் பண்ணலாம்.
கதையோடை கதையா வேலைக்குப் போனாலும் அவள்தான் சமைக்க வேணும். தங்கைச்சியின் கல்யாணம் முடிஞ்ச அடுத்த நாளே இவள் வேலைக்குப் போறதை நிப்பாட்ட வேணும். சொந்தமா நாலு காசு உழைச்சா இவளவைக்கு திமிர் வந்திடும். சொல்ல மறந்து போனன்...நான் பெண்களை மதிக்கிறவனாக்கும்.
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு பற்றி எமது சங்க கால இலக்கியங்கள் திரும்பத் திரும்பச் சொன்னதை இவள் கட்டாயம் திரும்பத் திரும்பக் கடைப்பிடிக்க வேணும். வேறொரு ஆண்மகனை அவள் ஏறெடுத்தும் பார்க்கக்கூடாது. பெடியங்கள் நாங்கள் என்னவும் செய்யலாம். எங்கடை அரசர்கள் எத்தினை மகாராணிகளை வைச்சிருந்தார்கள் என்று உந்தப் பெண்களிற்குத் தெரியாதாக்கும். ஏன், எல்லாம் வல்ல எம்பெருமான் முருகன்கூட வள்ளி, தெய்வானை என் இரண்டு பெண்களைத் திருமணஞ் செய்தானே. மகேசன் எவ்வழி மக்கள் அவ்வழி. இரண்டு ஆண்களைத் திருமணஞ் செய்த பெண் கடவுள் இருந்தல் சொல்லுங்கோ...நான் இப்பவே மன்னிப்புக் கேட்கிறன்.
(தொடரும்)
....................................................
கனடாவில் நிகழ்ந்த "வீரம்" என்ற மேடை நிகழ்வில் இது வாசிக்கப்பட்டது (2000இல் எண்டு நினைக்கிறன்).
2 Comments:
:-)))))))))
\\அதை படைத்ததே நான் தானே//
ஆரோக்கியம் என்ன சொல்ல வாறியள்? உங்களுக்கு என்ன எழுதுவதென்றும் எனக்குத் தெரியவில்லை. இல்லைங்க...உங்கள் பிழைப்பிலை நான் கை வைக்கலை.
துளசி, சிந்திக்கிறதுக்கும் அதிலை "சில" விடயங்கள் இருக்குது எண்டும் ஞாபகத்திலை வைச்சிருப்பம்.
Post a Comment
<< Home