Saturday, June 11, 2005

சில லூசுகள் சீதனம் வாங்க மாட்டினமாம் (பகுதி 2)

சுதந்திரம் இல்லையெண்டு கூச்சலிடும் அளவுக்கு நான் அவளுக்கு என்ன குறைதான் வைக்கப் போறன்.

எல்லாத் தமிழ திரைப்படங்களுக்கும் கூட்டிப் போவன். சித்தி, மங்கை, சக்தி, கோகிலா எங்கை போறாள், அர்ச்சயா, ஆலயம், குடும்பம், குப்பம், யன்னல், அலுமாரி என வரும் எல்லா நாடகங்களையும் பார்க்க வாங்கிக் கொடுப்பன்.

படையப்பா சாறி, குஷி சாறி, பூவேலி சாறி, அமர்க்களம் சாறி, மின்னலே சாறி, முழக்கமே சாறி எண்டு எல்லாச் சாறிகளும் வாங்கிக் கொடுப்பன். CTR, CTBC, கீதவாணி எண்டு எல்லா 24 மணிநேர வானொலிகளும் இழுக்கின்ற வானொலி 110 டொலருக்கு வாங்கிக் கொடுப்பன்.

எனது மனைவியை வானொலியில் நேயர் விருப்பங் கேட்க விடுவன். சில கணவன்மார் அதுக்கே அனுமதி கொடுப்பதில்லையாம். பாட்டுக் கேட்கவே சுதந்திரம் கொடுக்காத மிருகங்கள். உவ்வளவு சுதந்திரம் கொடுக்கிற என்னை அவள் பூப்போட்டு கும்பிட வேணும்.

இவ்வளவுக்கு மேலை உவளுக்கு வேறை என்ன சுதந்திரம் வேணும். ஊரிலை புழுதி மண்ணைப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு கனடாவையே காட்டப் போற எனக்கு அவள் உண்மையிலேயே அடிமையாக இருக்க வேணும். ஆனால், நான் அப்படியெல்லாம் அவளை அடிமையாக வைச்சிருக்கமாட்டன். ஏனென்டால் நான் பெண்களை மதிக்கிறவன்.

சில ஆண் சிங்கங்கள் இருக்கினம்...தங்கடை சொந்த மனிசிமாரை கார் முன் சீற்றிலை இருக்க விடமாட்டினம். பெண்களே விண்வெளிக்குப் போறா இந்தக் கம்பியூட்டர் காலத்திலை உவங்கள் உப்பிடி எல்லாம் செய்யலாமோ? நான் எனது மனைவியை முன் சீற்றிலை இருக்கவிடுவன். ஆனால். அதுக்காண்டி கார் ஓட எல்லாம் விடமாட்டன். எனக்குத் தெரிஞ்ச சிலபேர் தங்கடை மனிசிமார் சொண்டுக்குப் பூசுவதையெல்லாம் தேசியப் பிரச்சினை எண்டு நினைச்சுக் கொண்டிருக்கினம். ஆனால் நான் மனைவிக்கு சிவப்பு, ரோஸ், ஏன் அவள் விரும்பினால் பச்சைக் கலரிலை கூட வாங்கிக் குடுப்பன். அவளுக்கு நான் அவ்வளவு சுதந்திரம் கொடுப்பது ஏன் தெரியுமோ? நான் பெண்களின் உணர்வுகளை மதிக்கிறவன். என்ரை அம்மாவும் ஒரு பெண்தானே! பெண்களின் உணர்வுகளை மதியாதிருப்பது தாயையே மதியாதிருத்தல் போலல்லோ.

என்ரை இவர் பான்ஸ் போட விடுவாரோ, அல்லது சேலைதான் கட்டிகொண்டு மாரடிக்க வேணுமோ என்ற கேள்வியே எழாத வண்ணம் நான் கனடாவுக்கு ஏற்ற மாதிரி விதம்விதமா பான்ஸ் எல்லாம் போடவிடுவன். கனடாவிலை பொட்டுப் போடுறது, போடாமல் விடுவது பெரிய விடயமாப் போச்சு இப்ப. அதிலை எனக்கொரு பிரச்சினையும் இல்லை. நான் பெண்களது சுதந்திரத்துக்கு முன்னுரிமை கொடுக்கிறவன். அவள் பொட்டுப் போடலாம், போடாமல் விடலாம். அது அவளின்ரை தனிப்பட்ட விருப்பமல்லோ.

திரும்பவும் நான் சொல்லுறன். வீட்டிலை எல்லா வேலையும் அவள்தான் செய்யவேணும். நான் ஒரு துரும்புமே தொடமாட்டன். என்ரை அம்மா என்னை இராசா போலை வளர்த்தவா. நான் இராசா...சிங்கக்குட்டி. எல்லாத்துக்கும் மேலாலை நான் ஒரு தமிழன் எல்லோ

(முற்றும்...மேடைப் பேச்சு மட்டுமே)

....................................................
கனடாவில் நிகழ்ந்த "வீரம்" என்ற மேடை நிகழ்வில் இது வாசிக்கப்பட்டது (2000இல் எண்டு நினைக்கிறன்). பகுதி ஒன்றுக்கு இங்கே செல்லவும்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

22 Comments:

At 11:59 AM, June 11, 2005, Blogger இளைஞன் said...

//சில ஆண் சிங்கங்கள் இருக்கினம்...தங்கடை சொந்த மனிசிமாரை கார் முன் சீற்றிலை இருக்க விடமாட்டினம். பெண்களே விண்வெளிக்குப் போறா இந்தக் கம்பியூட்டர் காலத்திலை உவங்கள் உப்பிடி எல்லாம் செய்யலாமோ? நான் எனது மனைவியை முன் சீற்றிலை இருக்கவிடுவன். ஆனால். அதுக்காண்டி கார் ஓட எல்லாம் விடமாட்டன்.//

பின்ன, நாங்கள் முன் சீற்றில இருக்கிற அளவுக்கு சுதந்திரம் கொடுத்திட்டம். இவை என்னடா எண்டால் கார் ஓடுறதுக்கும் சுதந்திரம் கேக்கினமெல்லோ. நாங்க குடுத்த சுதந்திரத்த இவை தவறா பயன்படுத்துகினம். சுதந்திரம் குடுத்தாப் பிறகும் அதயும் மிஞ்சி சுதந்திரம் கேட்டா நாங்க எங்க போறது. :(

 
At 3:20 PM, June 11, 2005, Blogger deep said...

யார் கொடுப்பார் இந்த அரியாசனம்?!

கீழே எழுதியிருக்கிற கவிதையை எழுதிய - - - - - யார்?

;-)



அன்புள்ள அம்மாவே...!



முந்நூறு நாள் கருவறையில்
என்னதான் எதிர்பார்த்து
என்னை நீ சுமந்தாய்?

கோழிகள் மிதித்து
குஞ்சுகள் வருந்தாத மண்ணில்
குஞ்சு நான் மிதித்து
நொந்து போன என் அம்மாவே...!

பார்க்கும் இடமெல்லாம்
உன் முகந்தான் தெரிகின்றது
ஓ! நீ தூணிலும் இருப்பவளோ
துரும்பிலும் இருப்பவளோ?

என் சுகங்கள் எங்கேயோ
சுகமாக இருக்கின்றது
ஆனால் நானோ
என்றும் மனசுக்குள்
செத்துக் கொண்டிருக்கின்றேன்...!

இறுகிப்போன இந்த இரவுகளில்
கண்ணீர்கூட வருவதில்லை
ஏன் தெரியுமா?
கண்ணீர் வந்தால் துடைப்பதற்கு
என்னருகில் நியில்லையே...!

நீ கொடுத்து வைத்தவள்
நான் சொன்ன முதல் வார்த்தை கூட
"அம்மா" ஆகவே இருந்தது

ஒரு வரியும் அறவிடாமல்
எனக்கென்று ஓர்
முகவரி தந்த தாயே- என்
மூச்சுக்கள் கூட
உன்னைத்தான் இசைக்குதம்மா...!
~

 
At 3:25 PM, June 11, 2005, Blogger deep said...

அரியாசனம் ? சரியாசனம்????

 
At 5:18 PM, June 11, 2005, Blogger இளைஞன் said...

ஆருக்கு அரியாசனம்?
அம்மாவுக்கா -அவள்
பிளளைக்கா -அவன்
மனைவிக்கா? :-)

 
At 9:03 PM, June 11, 2005, Blogger வசந்தன்(Vasanthan) said...

நான் பிரதீபாவைக் கண்டிக்கிறன். இப்ப எதுக்கு அந்தக் கவிதைய இதுக்க கொண்டந்து செருக வேணும்?
அதுசரி, உந்தப் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த ஆக்கள் நல்லாக் கைதட்டியிருப்பாங்களே?

மற்றது கிசோ!
எனக்கும் ஒருக்கா இப்படி பேசுறதுக்கு ஒரு வாய்ப்பு வாங்கித்தாருமன். நானும் நல்லாப் பேசுவன். குறிப்பா உந்த பெண்விடுதலை, சீதனப் பிரச்சினை பற்றியெல்லாம்.

 
At 9:08 PM, June 11, 2005, Blogger வசந்தன்(Vasanthan) said...

//ஆருக்கு அரியாசனம்?
அம்மாவுக்கா -அவள்
பிளளைக்கா -அவன்
மனைவிக்கா? :-) //


அதுதான் தாங்கள் சிங்கம் எண்டு சொல்லிப்போட்டாரெல்லோ?
அப்ப 'அரி' ஆசனம் அவைக்குத் தானே?

எந்த நேரமும் சும்மா படுத்திருந்து கொண்டு, பெரிசா சவுண்டு விடுறதத் தவிர (இத கர்ஜனை எண்டும் சொல்லுவினம்) வேறெதுவும் செய்யத்தெரியாமல், மனுசி கஷ்டப்பட்டுக் கொண்டுவாற சாப்பாட்டைச் சாப்பிட்டுக் காலத்தைக் களிக்கிற (அல்லது கழிக்கிற) சிங்கத்தை எங்களுக்கு ஒப்பிடுறதை எப்பதான் நிறுத்தப்போறியளோ தெரியேல;-(

 
At 9:48 PM, June 11, 2005, Blogger இளைஞன் said...

இப்ப என்ன சொல்றீர் வசந்தன்? நாங்கள் ஆம்பிளச் சிங்கங்களா? ஆம்பிளப் புலியளா?

 
At 10:16 PM, June 11, 2005, Blogger இளங்கோ-டிசே said...

கிஸோ, இப்படி எல்லாம் நீரெழுதியதை வாசித்துவிட்டும் ஒரு சீவன் உம்மை நம்பி வந்திருக்கின்றார் என்று நினைக்கக் கவலையாகத்தான் இருக்கின்றது. அவருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் :-).

 
At 10:21 PM, June 11, 2005, Blogger வசந்தன்(Vasanthan) said...

//கிஸோ, இப்படி எல்லாம் நீரெழுதியதை வாசித்துவிட்டும் ஒரு சீவன் உம்மை நம்பி வந்திருக்கின்றார் என்று நினைக்கக் கவலையாகத்தான் இருக்கின்றது. அவருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் :-).//


அடடா!
ஆள் வந்துட்டுதோ?
கவிதைத் தலைப்புக்கள் கொஞ்சம் அப்பிடியிப்பிடி இருக்கேக்கயே யோசிச்சனான்.

இளைஞன்!
நான் ஏதும் சொல்லிற நிலையில இல்ல. கிசோ தான் சிங்கம் எண்டு சொன்னவர். ஆனா அது எங்கள அவமானப்படுத்திற உவமை எண்டதத்தான் சொல்ல வந்தனான். இஞ்ச புலியெண்டு சொன்னாலும் பிரச்சினையப்பா. (அதச் சொல்ல வைக்கத்தான் நீர் தூண்டில் போடுறீர் எண்டதும் தெரியும்.)

 
At 10:30 PM, June 11, 2005, Blogger இளங்கோ-டிசே said...

//கவிதைத் தலைப்புக்கள் கொஞ்சம் அப்பிடியிப்பிடி இருக்கேக்கயே யோசிச்சனான்.//
அது எவை வச(ய)ந்தகுமாரா :-)?

 
At 11:12 PM, June 11, 2005, Blogger வசந்தன்(Vasanthan) said...

அட பக்கத்து அட்டவணையில பாரும். முதலிரவு எண்டு இருக்கிறதுகூடவா தெரியேல?

 
At 4:25 AM, June 12, 2005, Blogger Chandravathanaa said...

நல்லா எழுதுறிங்கள் கிஸோக்கண்ணன். இல்லையில்லை நல்லாப் பேசுறிங்கள்.

நீங்கள் சுதந்திரம் கொடுத்து... பெண்கள் அதை வாங்கி.....

 
At 10:34 AM, June 12, 2005, Blogger இளைஞன் said...

This comment has been removed by a blog administrator.

 
At 10:36 AM, June 12, 2005, Blogger இளைஞன் said...

கிசோக்கண்ணன்,
ஆணாதிக்கக் கருத்துடைய - பிற்போக்குத்தனமான சிந்தனையுடைய - பெண்ணடக்குமுறை எண்ணமுடைய - கிணற்றுத்தவளைகள் பலரது கருத்துக்களை உள்வாங்கி அவர்கள் நிலைநின்று எழுதிய (பேசிய) உங்கள் எழுத்து(பேச்சு) அவர்களையே ஒருமுறை சிந்திக்கத் தூண்டும்.

 
At 11:24 AM, June 12, 2005, Blogger deep said...

ஐயோ!
அந்தக் கவிதை இதற்குத் தொடர்புடையதா இலலையா தெரியவில்லை; கைவசம் இருந்ததால்தான் போட்டது... முன்பு வானொலி நிகழ்ச்சிகளில் கிஸோக்கண்ணன் பங்குகொண்ட நிகழ்ச்சிகளை மிகவும் ரசித்துள்ளோம். இந்தக் வார நட்சத்திரமும் சுவாரசியத்துடன் போனது.
நன்றி!

 
At 3:00 PM, June 12, 2005, Blogger Muthu said...

///இஞ்ச புலியெண்டு சொன்னாலும் பிரச்சினையப்பா. (அதச் சொல்ல வைக்கத்தான் நீர் தூண்டில் போடுறீர் எண்டதும் தெரியும்.)///
:-)))

 
At 6:00 PM, June 12, 2005, Blogger துளசி கோபால் said...

நல்ல பகடியப்பா!!!!

உங்க வாரம் ரொம்ப நல்லாப் போனது. அப்பப்ப பின்னூட்டம் இடாமல் ஒளிஞ்சு மாறிட்டேன்.

நல்ல இருங்க.
என்றும் அன்புடன்,
துளசி.

உங்க வீட்டுப் பெண் சிங்கத்துக்குக் காரோட்டும் 'லைசன்ஸ்' வாங்கியாச்சா?

 
At 7:32 PM, June 12, 2005, Blogger கிஸோக்கண்ணன் said...

\\சுதந்திரம் குடுத்தாப் பிறகும் அதயும் மிஞ்சி சுதந்திரம் கேட்டா நாங்க எங்க போறது.// உங்கள் நியாயமான ஆதங்கங்கள் எனக்கு(ம்) புரிகின்றது. நிறையக் கவலைப்பட்டு உடம்பைக் கெடுக்காதீர்கள்.:-) உங்கள் பெயர் என்னவோ?

பிரதீபா, அந்தக் கவிதையை எழுதியது நானே. மெனக்கெட்டு தட்டச்சுச் செய்திருக்கின்றீர்கள். நன்றி. ஒன்று தெரியுமா? இந்தக் கவிதையைப் பதியலாமோ என்று உங்கள் பின்னூட்டத்திற்கு முந்திய நாள்தான் எண்ணினேன். பிறகது எண்ணியதோடு போயாச்சு. அந்தக் கவிதைக்கும், இம்மேடைப் பேச்சுக்கும் என்ன தொடர்பிருக்கின்றது என்று நானும் ஏற்கனவே அப்படி இப்படிப் போன மூடியைப் பிய்ச்சுக் கொண்டிருந்தேன். ம்...அரியாசனம் கொஞ்சம் சரியில்லாமல்தான் போய்விட்டது. வானொலி நிகழ்ச்சிகளும் கேட்டிருகின்றீகள் போலை. பாவம் அந்த வானொலிக் கலைஞர்கள்...இப்போது கண்டாலும் ஓடி ஒளிக்கின்றார்கள். :-)

 
At 7:39 PM, June 12, 2005, Blogger கிஸோக்கண்ணன் said...

வசந்தன், நல்லாத்தான் கைதட்டிச்"சினம்". அந்தப் பேச்சுமுடிய அதனையொட்டி ஒருநாடகமும் இருந்தது. நாடகத்தில் நடிக்கத்தெரியாமலும் இன்னபிற காரணங்களாலும் சொதப்பிவிட்டோம். (கறுப்பி கவனிக்க்க).

உங்களுக்கும் பேசுறதுக்கு ஒரு சந்தர்ப்பம் வாங்கித்தல்லாம். இதுக்காகத்தனே நான் உயிர் வாழுறன். எப்ப கனடா வருவீங்கள் எண்டு சொல்லும். (இதிலை டீசேக்கு ஒரு ஆட்சேபனையும் இல்லையென்று நம்புவோமாக)

\\காலத்தைக் களிக்கிற (அல்லது கழிக்கிற) சிங்கத்தை எங்களுக்கு ஒப்பிடுறதை எப்பதான் நிறுத்தப்போறியளோ தெரியேல//
இதைப் பற்றி பாவம் அந்த அப்பாவிச் சிங்கம் என்ன நினைக்குது எண்டு யாராவது யோசிச்சுப் பார்த்தீங்களே?

 
At 7:50 PM, June 12, 2005, Blogger கிஸோக்கண்ணன் said...

\\அவருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்//
அனுதாபங்கள் உரிய இடத்துக்குப் போய்ச் சேர்ந்துவிட்டன. நன்றி டீசே.

\\நீங்கள் சுதந்திரம் கொடுத்து... பெண்கள் அதை வாங்கி...//
எனக்கு விளங்குது. இதைவிட அவையள் சுதந்திரம் இல்லாமலே இருக்கலாம் என்று சொல்லுறியளே சந்திரவதனா.

உங்கள் அழகான புன்னகை கண்டு நாங்களும் புன்னகைத்தோம் முத்து. ஆகா, முத்து முத்தாச் சிரிக்கிறீங்க.

\\உங்க வீட்டுப் பெண் சிங்கத்துக்குக் காரோட்டும் 'லைசன்ஸ்' வாங்கியாச்சா?//
என் வீட்டில் ஒரு பெண் சிங்கமும் இல்லை. இங்கு நாங்கள் இருக்கவே இடமில்லையாம். அப்படி இருக்க ஒண்டுக்கும் உதவாத (வசந்தன் தந்த ஞானம்) சிங்கத்தை வளர்த்து நான் ஓட்டாண்டியாப் போகவோ! உங்கள் அன்பிற்கு நன்றி துளசி.

பின்னூட்டமிட்ட பெயர் தெரியா வாசகர்களுக்கும் நன்றி.

 
At 3:54 PM, June 13, 2005, Blogger கிஸோக்கண்ணன் said...

ஓமோம்; வெளியே சொல்லிவிடாதீர்கள்.

 
At 11:26 AM, July 20, 2007, Anonymous Anonymous said...

Sorry, i am not sure how to type in Tamil, so I appologize!!! Read your story... First of all, I know you are being very sacastic... so, its okay... but they also say something else about those who are sacastic... they write what they think... so...

 

Post a Comment

<< Home

statistics