Friday, May 20, 2005

சாபம்

காதலிற்கு வேலியில்லை
காதலிற்கு சாதியில்லை
பரம்பொருளே சொல்லும்போது
பரதேசிகள் உங்களுக்கு
இன்னும் என்ன பிடிவாதம்?

நிலவினில் கால் பதித்து
செவ்வாய்க்கு வண்டி அனுப்பி
விஞ்ஞானத்தை வளர்த்தோம்-ஆனால்
மெஞ்ஞானத்தை வளர்த்தோமா?

மலைச்சாதி வள்ளியை
எம்பெருமான் முருகன்
ஓடி ஓடிக் காதலித்த கதை கேட்டு
கைதட்டி மெய்சிலிர்த்த நீங்கள்
மானிடக் காதலுக்கேன்
மண்ணை அள்ளிப் போடுகின்றீர்?

காதலிற்கு குறுக்கே நிற்போர்
குறுக்காலே போகட்டும்.
காதலரை எதிர்ப்பவர்கள்
நரகத்திற்கு போகட்டும்.

சாதிகள் இல்லையடி பாப்பா!
ஆதியிலே சொன்ன கவிஞன்
பாடையிலே போய்விட்டான்.
பாடையிலே போனது
அவன் மட்டும்தானா?

காதலில் உவர்கள்
சாதிகள் பார்க்கும் மட்டும்
ஊழிக்காற்று வீசட்டும்;
ஊமத்தங்குருவி
ஊரெல்லாம் அலறட்டும்!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, May 16, 2005

தொலைந்த இரவுகள்

ஒற்றை ஆலமரம்
பிள்ளையார் கோவிலடி
நட்சத்திரக் குழந்தைகளோடு நிலவம்மா.
எல்லாம் பார்த்தபடி
உன்னை எதிர்பார்த்தபடி
நான் இன்னும் காத்திருக்கிறேன்...!

ஆசையுள்ள ஆன்மா
அழிவதில்லையாம்.
ஆதலால்தான் இன்னும்
காதலோடு கை கோர்த்து
காலங் கழிக்கிறேன்.

திருவிழாப் பொழுது
சப்பரத் திருவிழா...
திருமுழுக்கு முடித்து
சுவாமி கோவில் சுத்துவார்.
கையோடு கை கோர்த்து
நாமும் சுத்துவோம்- அப்போ
"இப்படியே உயிர் போக வேண்டும்" என
நீ ஏதோ வாய் குழறுவாய்.
இப்போதும் திருவிழாவருகிறது...
சாமியும் கோவில் சுத்துகிறார்
நீ மட்டும் வரவில்லை.

உன்னை இழந்ததனால்
என்னையே இழந்து போனேன்.
ஆனால் இன்னும்
கொஞ்சத் தாடியும்
கொஞ்சூண்டு சோகமும்
நாலைஞ்சு கவிதையும்
எச்சமாய் உள்ளது.

*அடிக்குறிப்பு: நீண்ட காலத்திற்கு முன்பு எழுதியது. இதில் வரும் சம்பவங்கள்...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
statistics