Thursday, March 24, 2005

மௌனம் தவிர்ந்த ஒரு மொழியில் சொல்லிவிட்டுப் போ...

உங்களிற்குப் பிடித்த விடயம் பற்றிச் சற்றுச் சொல்லலாம் என்றால், உங்களுக்கு என்ன பிடிக்கும் என்பதனைக் கண்டு பிடிக்கவே ஒரு ஜென்மம் பிடிக்கும் போலுள்ளது.

எனவே உங்களில் ஒருவருக்காவது பிடித்த விடயம் பற்றிச் சற்றுச் சொல்வேன் கேளுங்கள்:

முன்பெல்ல்லாம் அன்னமக்கா வீட்டு நாய்க்குட்டியாய் நீ என்னையே சுற்றிச் சுற்றி வருவாய். அந்த உறவுக்கு ஸ்நேகம் என்று பெயரும் வைத்தோம். என் காதல் சொன்ன அன்றிலிருந்துதான் நீயென்னில் பிடிப்பின்றி வாழ்கின்றாய்.

உன்னை எனக்கு நிறையப் பிடிக்கும் என்பதனால் உனக்கு என்னைப் பிடிக்கவில்லையா? அல்லது பிடிப்பின் மீதே உனக்குப் பிடிப்பில்லையா?

ஒரு பெண் பிடித்தல் மட்டும் என் காதலில்லை; பிடித்த ஒருத்தியைப் பிடிக்கச் செய்வதே என் காதல்.

நான் இப்படிக் கதைப்பது உனக்குப் பிடிக்காதென்று எனக்குத் தெரியும். உண்மையில் உனக்குப் பிடிக்காதவற்றையே இன்னும் செய்ய எனக்குப் பிடிக்கின்றது. அப்படியாவது நீ என்னை வெறுத்து வெறுத்து இறுதியில் அந்த வெறுப்பின்மீதே வெறுப்பு வந்து இறுதியில், போனால் போகுது...இவனைக் காதலிச்சுத் தொலைப்போம் என்று உனக்கு என்னில் பிடிப்பு வராதா என்ற விருப்பு இன்னும் நெருப்பாக...

இந்தப் பிடிப்பை ஏன் எனக்குப் பிடிக்கும் என்பதனைச் சொல்ல சிறிது நேரம் பிடிக்கும். என்ன பரவாயில்லை? சரி! உனக்குப் பிடித்ததனால் சொல்கின்றேன்:

மூன்று வயசில் தவண்டு உடும்பு பிடித்தது...

குழப்படி செய்தால் பேய் வந்து பிடிக்கும் என்று அக்கா(ப்பேய்) சொன்னது...

10 வயசில் அடிச்சு பிடித்து விளையாடியது...

15 வயசிலும் அம்மாவின் கரம் பிடித்து நடந்தது...

பள்ளிக்கூடத்திலை காதல்கலை புரிந்த மல்லிகா ரீச்சரையும், மார்க்கண்டு சேரையும் அதிபரிடம் பிடித்துக் கொடுத்கது...

மழையென்றால் எனக்குச்சளி பிடித்ததும், சளிக்கு என்னைப் பிடித்ததும்...

வெள்ளிக்கிழமைகளில் கால் கடுக்க நின்று "பிடியதனுருவுமை" எனத் தேவாரம் பாடப் பிடிக்காமல் காய்ச்சல் பிடித்தது போல் நடித்து பள்ளிக்குக் கள்ளம் அடிச்சதுவும்...

எனக்கு வணக்கம் சொல்லாமல் போன ஓணானை எலிப்பொறி கொண்டு பிடித்ததும்....

அறுவடையான வயல்களில் கண்ணி வைத்துப் புறா பிடித்ததும்...

இப்படியாக எல்லாம் தந்த பயிற்சியில் கன்னியுன் கரம் பிடிக்கலாம் என பிடிமானங் கொண்டேன்.

என்னைப் பிடிக்காமலே என்னைப் பிடிச்சதாக நீ சொல்ல வேண்டாம்... ஆனால், பிடித்துக் கொண்டே பிடிக்கவில்லை என்று சொல்ல வேண்டாம் என்பதனையே இந்த விநாடியிலும் சொல்லிக்கொள்ளப் பிடிக்கின்றது.

எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதென்றும், அதனால்தான் பிடிப்பையே இன்று பிடித்துக் கொண்டிருக்கின்றேன் என்றும் ஒரு முடிவுக்கு வரவே உனக்குப் பிடிக்கும் என்பதனைப் புரியாமல் போக நான் ஒன்றும் லூசு பிடிச்சவனல்லன்.

உன்னையே பிடித்தாகிவிட்டதாம், இனி இதுக்குமேல் பைத்தியம் பிடிச்சென்ன; பிடிக்காது விட்டென்ன. எல்லாம் பிடித்தாகிவிட்டது; இனி எஞ்சி இருப்பது உன் கரமும், சனியனும்தான்.

மேற்சொன்னவற்றில் நான் எதைப் பிடிப்பது உனக்குப் பிடிக்கும் என்பதனையாவது உனக்குப் பிடிச்ச (மௌனம் தவிர்ந்த) ஒரு மொழியில் சொல்லிவிட்டுப் போ...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
statistics