ஒரு கூரையும், இரண்டு படிகளும்
பனையால் விழுந்தவனை மாடேறி மிதிச்சது போல்
போரால் நொந்தவரை கடலேறிக் கொன்றதுவே.
......
சொந்தமாய் ஒருவீடு வேண்டுமென்பதே -எம்
சொந்தங்களின் கொள்கையாய் இருந்தது.
......
ஐந்து பத்தாய் மிச்சம் பிடிச்சு
கந்து வட்டிக்கு கடனும் வாங்கி
கட்டி வைத்தார் வீடொன்று.
இன்று சுனாமி வந்து
தன் கோர முகங்காட்ட
இடிந்து போனது அவர் வீடுகள் மட்டுமா?
......
வீடென்பது வெறும் வீடல்ல.
வீடென்பது மழையிலும், வெய்யிலிலும் இருந்து
எம்மவரைப் பாதுகாக்கும்
ஒரு வதிவிடம் மட்டுமல்ல.
......
என்வீடு என்பதற்குள் என் வாழ்வே நிறைந்துள்ளது.
என் வீட்டுச் சுவரில் நான் கிறுக்கி வைத்தேனே
அதைப் பார்த்து என் அம்மா அன்னை அடிக்க வந்தாவே.
நான் பயந்து என் அப்பா பின் ஒளிந்து நின்றேனே.
அந்த ஞாபகமும் கடலோடு போயிற்றே.
மரித்துப்போன பாட்டியின் பழைய படமொன்றை
சுவாமியறையில் மாட்டி வைத்தோமே.
அதனையும் கடல் அடித்துப் போயிற்றே.
......
ஆம்... வீடென்பது வெறும் சீமெந்தும், மணலும் கொண்டு
கட்டப்பட்ட ஒரு கட்டடம் அல்ல.
அது இரத்தமும் சதையுங் கொண்ட ஒரு உயிர்ப்பான ஒரு உறைவிடம்.
ஒருவீடு ஓர் ஈழத்து வறிய தந்தையின் 25 வருட உழைப்பின் பயன்.
ஒரு தியாகத்தின் பயன்.
......
எமக்கு ஒரு மாளிகை வேண்டாம்
வீடுகள் கட்டித் தருவோம் என்ற
சிறீலங்கா அரசின்பொய்யான வாக்குறுதிகள் வேண்டாம்.
நாம் கேட்பது ஒரு கூரையும், இரண்டு படிகளும்.
தருவீரா... எம் தொப்புள்கொடி உறவுகளே.
தருவீரா... எம் கனேடியத் தமிழ் உறவுகளே!
......................................................
*அடுத்த ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் நடைபவனிக்காக இது கனேடியத் தமிழ் வானொலியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை வாசிக்கப்பட்டதன் ஒரு பகுதி.
2 Comments:
ஓம். வீடென்பது தனியே வதிவிடம் மட்டுமன்று.
இன்றைய எமது சமுதாய உறவுகள் கூட தீர்மானிக்கப்படுவது வீடு எனும் சடப்பொருளிலிருந்துதான்.
அதுவே உறவுமாகி வாழ்க்கையுமாகி நிற்பது.
நல்லாயிருக்கு
நீங்களும் உங்கள் வீடு பற்றி ஏதாவது சொன்னால் அதையும் அடுத்தமுறை வானலையில் சொல்லலாம்.
Post a Comment
<< Home