Wednesday, June 08, 2005

குஞ்சுகள் (சிறுகதை)

இருட்டுப் போர்வை பூமியை மூட ஆரம்பித்த மாலை வேளை. வானத்தில் நிலவும், நட்சத்திரங்களும் மட்டுமே மீதியாக இருந்தன. ஆனால் காற்றோ இப்பவும் சூடாகவே வீசிக்கொண்டிருந்தது.


"எணை அப்பு...! என்ரை செல்லத்தைக் காணேல்லை. நீ கண்டனியோணை?" அரக்கப்பரக்க ஓடிவந்து கேள்வி கேட்ட என் பேரனிற்கு பதிலளிப்பதற்காய் வாய்க்குள் குதப்பிக் கொண்டிருந்த வெற்றிலைச் சாற்றினைத் துர உமிழ்ந்தேன்.

"இல்லை ராசா. நான் காணேல்லை. கொஞ்சம் முன்னந்தானே நீ மடியிலை வைச்சுக் கொஞ்சிக் கொண்டிருந்தனீ..." அவனது தலையை ஆதரவாகத் தடவி கொடுத்தவாறே கேட்டேன்.

"ஓமணை அப்பு. பவுடர் பூசி, ஒட்டுப் பொட்டும் வைச்சுப்போடு விட்டனான். அதுக்குன்னம் காணைல்லை" என்று விம்மத் தொடங்கிய எனது பேரனுக்கு வாற ஆவணி மாசம் பதினான்கு வயசாகின்றது.

கோழிக்குஞ்சுகள் வளர்ப்பதென்றால் அவனுக்குக் கொள்ளை ஆசை. பள்ளிக்கூடத்தால் வந்து நேரே கோழிக்கூட்டிற்குத்தான் செல்வான். அவை பெருகப் பெருக அவற்றை விற்று உண்டியலில் காசு சேர்ப்பான்.
கோழிக்குஞ்சென்றால் உயிரோ அன்றி அவற்றால் வரும் பயனுக்காக வளர்க்கின்றானோ என்று அறுபத்திரண்டு வயசுக் கிழம் என்னால் இன்னுமே புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனென்றால் முட்டை வித்த காசைக் கொண்டுபோய் வல்லிபுரக் கோயில் திருவிழாவிலை விளையாட்டுச் சாமான், சமயப் புத்தகங்கள் எல்லாம் வாங்குவான்.

படிப்பு, வீட்டுவேலை, கோழிக்குஞ்சுகள் இவைகள் மட்டுந்தான் இவனது வாழ்க்கை. தான் படித்து பெரிய ஒரு டாக்குத்தராக வரவேண்டும் என்று எப்பொதும் சொல்லிக் கொண்டிருப்பான்.

கொஞ்ச நாட்களாக கோழிக்குஞ்சுகள் அடிக்கடி காணாமல் போயின. மனசு நிறைய அன்போடு, பவுடர் பூசி, ஒட்டுப்பொட்டு வைச்ச அந்த சாம்பல் நிறக் கோழிக்குஞ்சுதான் இப்போது காணாமல் போய்விட்டது.

அழுவதைத் தவிர வேறு ஒன்றுமே செய்யத்தோன்றாமல், எவ்வளவுதான் மன்றாடிக் கேட்டும் சாப்பிடவே விரும்பாமல் இருந்த அவனைப் பார்க்கையில் என் நெஞ்சுக்குள் எங்கோ வலித்தது.

"எடை மோனை... போயும் போயும் ஒரு அற்பக் கோழிக்குஞ்சுக்கோ அழுது கொண்டு இருக்கிறாய்! வேணுமெண்டா சொல்லு ராசா... உனக்கு நான் நாளைக்கே நூறு குஞ்சுகள் வாங்கித் தாறன். இப்ப சாப்பிடு மோனை. படுக்கைக்கு வெறும் வயித்தோடை போகக்கூடாது." என்று அவனை நான் ஆசுவாசப்படுத்த, அது எடுத்த எடுப்பிலேயே தோல்வியில் முடிந்தது.

"ஏனணை அப்பு... நான் திடீரெனச் செத்துப் போனா, வேறை வீட்டிலை இருந்து ஒரு பிள்ளையை வாங்கி வளப்பீங்களோ? என்னை அதுக்குன்னம் மறந்து போவீங்களோ...?" அந்தப் பிஞ்சின் கேள்விக் கணைகளை எதிர்க்க முடியாமல் வாயடைத்து போய் ன்றேன்.

இரவு முழுவதும் என்ரை செல்லம்...என்ரை செல்லம் என்று அனுங்கிக் கொண்டிருந்தான். காலையில் சற்றுப் பிந்தியே எழும்பினான். அவனது கண்கள் அளவிற்கு மீறிச் சிவந்திருந்தன. இண்டைக்கு பள்ளிக்கூடத்திலை சோதினைக்கு வாங்கில், மேசை அடுக்குறது எண்டு பொய் சொல்லி பள்ளிக்கூடத்திற்கு போகாதுவிட்டான்.

கோழிக் குஞ்சுகளை மேயவிட்டு, ஒளித்து ன்று அவன் பார்த்துக் கொண்டிருக்க, குஞ்சுகளிற்கு என்ன நடக்கிறது என்று அறியும் ஆவலில் நானும் அவனைச் சேர்ந்து கொண்டேன். மணி பத்தாகியும் குஞ்சுகளிற்கு ஒன்றுமே நடக்கவில்லை. தன் முயற்சியில் சற்றுமே மனந் தளராத விக்கிரமாதித்தன் போல என் பேரனும் மனந்தளரவில்லை. மத்தியான வெய்யில் தன் அகோரத்தை காட்டிய வேளையில், முருகேசர் வீட்டு கறுப்புப் பூனை பதுங்கிப் பதுங்கி வந்து ஒரு குஞ்சை லபக் என்று வாயால் கெளவியபடி ஒரு கண நேரத்தில் ஓடி மறைந்தது.

ஒரு குஞ்சு போனாலும் அந்தப் பிஞ்சின் முகம் மகிழ்ச்சியில் நிறைந்திருந்தது. தன் குஞ்சுகளைக் கவருகின்ற இயமனைக் கண்டு கொண்டதால்தான் அந்த மகிழ்ச்சி என்று என்னால் தெளிவாக உணர்ந்து கொள்ள முடிந்தது.
அன்று பிந்நேரம் வீட்டால் வெளிக்கிடாமல் ஒரு மூலைக்குள் ஒடுங்கிக் கொண்டிருந்தான். முகமெல்லாம் வேர்த்துக் கிடந்தது.

"என்ன ராசா... ஏதேனும் வருத்தமோ? என் உப்பிடி இருக்கிறாய்? விளையாடப் போகேல்லையோ?" என்று அவனது தலையைத் தடவிக்கொடுத்தவாறே கேட்டேன்.

அந்தப் பிஞ்சு நாலு பக்கமும் பார்த்துவிட்டு,
"ஒருத்தருக்கும் சொல்லாதையணை அப்பு... என்ரை கோழிக்குஞ்சுகளை பிடிக்கிற பூனைப்பிள்ளம் சின்னம்மா வீட்டுக்குப் பின்னாலை நல்ல நித்திரையாகக்கிடந்தார். ஒரு கொங்கிறீற்றுக்கல்லை எடுத்து அவருக்கு மேலை போட்டுட்டன். அவர் ஆடாமல், அசையாமல் கிடக்கிறார்; நான் ஓடியந்திட்டன். எணை அப்பு, பூனையின்ரை ஒரு மயிரை கொட்டினால் ஆறு பிராமணர்களைக் கொன்ற பாவங்கிடைக்கும் எண்டு பள்ளிக்கூடத்திலை பெடியள் எல்லாம் சொல்லுறவங்கள். அது உண்மையோணை?"
பயந்து பயந்து கேட்ட பேரனைப் பார்க்கும்போது எனக்கு ஒரே நேரத்தில் பாவமாகவும் இருந்தது; சிரிப்பாகவும் இருந்தது.

"அதுக்கே மோனை நீ உப்பிடி யோசிக்கிறாய்? வாய் பேசாப் பிராணிகளை தொந்தரவுபடுத்தக் கூடாது எண்டு உப்பிடித்தான் எங்கடை பழைய ஆக்கள் கதையளை பரப்பிப்போட்டினம். ஆபத்துக்குப் பாவமில்லை! சரி ராசா... நீ விளையாடப்போ. கட்டையன் உன்னை தேடிக்கொண்டிருந்தவன். நான் போய் அந்தப் பூனை செத்துப்போச்சோ இல்லையோ எண்டு பார்த்து கொண்டு வாறன். "என்று சமாளித்தபடி அங்கு போனபோது கல்லுமட்டுந்தான் கிடந்தது; பூனையைக்காணவில்லை.

அன்றிரவு சுடுதண்ணிக் கேத்திலோடு எங்கேயோ ஓடினான். மறுநாள் அந்த பூனையின் தோல் பொசுங்கி இருந்ததைக்கொண்டு என்ன நடந்தது என்று என்னால் ஊகிக்க முடிந்தது.

இவன் இவ்வளவு ஆக்கினைகள் செய்தும் அந்தப்பூனை மீண்டும் ஒரு குஞ்சை பிடித்துவிட்டது. வயசு போன காலத்திலை என்னால் மட்டும் என்ன செய்ய முடியும்?

"உவருக்கு இண்டைக்கு நான் நல்ல பாடம் படிப்பிக்கிறன். அடியாத மாடு படியாது" என்று முணுமுணுத்துக்கொண்டு வெளியே போனவன் ஏழெட்டுப் பெடியளோடை வீட்டுக்கு வந்தான். அவனையும், அவனது சிநேகிதர்களையும் பார்க்கும்போது காரணம் புரியாமல் சிரிப்பு வந்தது.

ஓடியோடித்திரிந்து காலமை வெளிக்கிட்டவர்கள் மத்தியானம் போல் அந்தப்பூனையோடு வந்தார்கள். பூனைக்காக ஊரெல்லாம் அலைந்திருக்கிறார்கள் என்பதற்குச் சாட்சியாக அவர்களது உடல்களில் புழுதி மணல் அப்பிக் கிடந்தது. ஒரு பெடிப்பிள்ளையார் என்னிடம் ஓடிவந்து,
"எணை அப்பு... உன்ரை பேரன் ஒரு பழைய சாக்கு வாங்கிவரட்டாம்" என்று கேட்டார். என்னதான் நடக்கப் போகின்றது என்று அறியும் ஆவலில் நானும் அவர்கள் கேட்டதைக் கொடுத்தேன்.

விறு, விறு என்று பூனையை சாக்குக்குள் போட்டுக்கட்டினார்கள். எல்லாப் பெடியளும் கைதட்டிக் கொண்டிருக்க என்ரை பேரன் ஒரு கையால் நழுவிக் கொண்டிருந்த காற்சட்டையை இழுத்துப்பிடித்தவாறே அந்தச்சாக்கை வேம்போடு சேர்த்து அடிக்கத்தொடங்கினான். என்ன செய்தும் அவனை தடுக்கேலாது எண்டபடியால் நானும் பேசாமல் இருந்தேன்.

இவனது கண்களோ சிவந்திருந்தன. உடலில் இருந்து வேர்வை ஆறாக ஓடத்தொடங்கியது. பூனை கீச்சிட்டு அலறுவது இப்போது பெரிதாகக்கேட்டது.
"எடே...! என்ரை குஞ்சுகள்தான் சத்தம் போடுதுகள். அடியாத மாடு....இல்லை இல்லை; அடியாத பூனை படியாது" குரலை உயர்த்தியவாறே பூனையைக்கொன்றுவிட்டான்.

நேரே என்னிடம் ஓடிவந்து, "அப்பு! என்ரை குஞ்சுகளிலை இனி ஒருத்தரும் கைவைக்கேலாது!" உரத்துக் கூக்குரல் இட்டான்.

இது நடந்து கிட்டத்தட்ட இரண்டு மாசங் கழித்து, வழமையைப்போலவே சூரியன் கிழக்கே உதித்த நாளொன்றில் சிறீலங்கா இராணுவத்தின் குண்டு வீச்சுவிமானம் போட்ட குண்டில் பதினாறு குஞ்சுகள் ஒரேயடியாக செத்துப்போயின.

குஞ்சுகளின் சிதிலங்கள் விசிறிக்கிடக்க, செட்டைகள் காற்றில் அசைந்து கொண்டிருந்தன. பேரனிற்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று நான் கவலையோடு யோசித்துக்கொண்டு அவனது முகத்தைப் பார்த்தேன். அன்று அந்தப்பூனையை கொன்ற போதும் உப்பிடித்தான் இருந்தது.

"சாப்பிடன் ராசா..! படுக்கைக்கு வெறும் வயித்தோடை போகக்கூடாது".
"எனக்கு பசிக்கேல்லை...!"
சிணுங்கியவாறே சொன்னவன் அந்த விடயத்தைப்பற்றி ஒன்றுமே கதைக்காமல் விட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. காவோலை ஒன்று விழுஞ்சத்தம் கேட்க, அந்த நேரத்திலும் காகம் ஒன்று கரைந்து விட்டுப்போனது.

காலமை எழும்பியவுடன் அவனது முகத்தைப்பார்த்தேன். இரவு முழுவதும் அழுதிருக்கிறான் போலை; முகம் கன்றிப்போய் இருந்தது. "அப்பு..." என்று ஏதோ சொல்லவந்தவன் ஒன்றுமே கூறாமல் பள்ளிகூடம் போனான். போனவன் திரும்பி வரவில்லை. முருகேசரின்ரை பேரப்பெடியள் எல்லாம் வந்துட்டுதுகள்; இவனை மட்டுங் காணவில்லை.

"எணை அப்பு...! உன்ரை பேரன் இயக்கத்திற்கு போட்டானாம்." பக்கத்துவீட்டுப் பெடியன் சொல்லிவிட்டுப்போனான்.

"என்ரை ராசா..." எனக்கு மெய் சிலிர்த்தது. கூடவே பெருமிதமாகவும் இருந்தது. பிஞ்சுகளிற்கு உள்ள ரோசம், மானம், துணிவு கூட எனக்கு இல்லாமல் போய் விட்டது. அடியைப்போல் அண்ணன் தம்பி உதவமாட்டான் என்பது எவ்வளவு உண்மை.

என் முதுகைப்போலவே என் உள்ளமும் கூனிக்குறுகி இருந்தது. மனசுக்குள்ளும் வெளியேயும் ஒரே நேரத்தில் புழுக்கமாக இருக்க, வீட்டைவிட்டு வெளியே வந்தேன். முற்றத்தில் நின்ற வேப்பமரத்தை தாண்டி வருங்காற்று தண்ணென்றிருந்தது

(யாவுங் கற்பனையல்ல)


...........................................................................
இக்கதை எட்டு வருடங்களிற்கு முன்னால் (1997) எழுதப்பட்டது. மேலும், இதுவே எனது முதலாவது சிறுகதை. unicode அறிமுகமாத காலத்தில் முரசு அஞ்சல் மூலம் தட்டச்சு செய்து பின்னர் webTamil எழுத்துருவுக்கு மாற்றித்தான் வைத்திருந்தேன். தற்போது எழுத்தெல்லாம் மாறியிருக்கின்றது. XPக்கு webTamilஐப் பிடிக்கவில்லை என்று நினைக்கின்றேன். எனவே எழுத்துப் பிழைகள் இருந்தால் என்னை மன்னித்து XPஐச் சாடவும்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

1 Comments:

At 5:06 PM, June 09, 2005, Blogger Muthu said...

நல்ல கதை. சிந்திக்க நிறைய இருக்கிறது இதில்.

 

Post a Comment

<< Home

statistics