வாசித்த சிலவும் பாதித்த சிலவும்:
கடந்த ஆண்டு ஊருக்குப் போய்வந்த நண்பன் ஒருவன் வன்னியின் தற்போதைய தோற்றம் பற்றிச் சில விடயங்களையும் படங்களையும் பகிர்ந்ததுண்டு. அந்த நண்பனுக்குப் 'பழைய' வன்னி பற்றிப் பெரிதும் தெரியாது.
முழக்கம் வார இதழில் "வன்னிப் பயணம்" என்ற தலைப்பில் ஒரு பெரியவர் பயணக் கட்டுரை எழுதி வருகின்றார். அவர் வயதாலும், அறிவாலும் பெரியவர். எனவே பழைய-புதிய என்று ஏதாவது ஒப்பிட்டு எழுதுவார் என்ற எதிர்பார்ப்பில் வாசிக்கத் தொடங்கினால் ஒரே ஆச்சரியம்! அதில் பத்து சவீதங் கூட அவர் வன்னி பற்றிக் குறிப்பிடவில்லை.
பயணத்திற்கு முதல் தான் வாதநோய் மருத்துவரைப் போய்ப் பார்த்ததாகச் சொல்கின்றார்.... வாதம் பற்றி தான் இணையத்தளத்தில் தேடியதாகச் சொல்கின்றார்... பிறகு, "நல்லதம்பி" என்ற திரைப்படம் பற்றிச் சொல்கின்றார்...
ஏயர் லங்கா விமானப்பணிப் பெண்கள் சிங்களத்தில் மட்டும் (ஆயுபோவன் சொல்லி) வரவேற்றதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழர்கள் சிறீலங்காவில் சம உரிமையுடன் வாழவில்லை என்பதைப் பற்றி இப்ப எவரும் சொல்வதில்லைத்தானே! பூமி தட்டை இல்லை என்பதை எத்தனை நாளுக்குத்தான் சொல்லிக் கொண்டிருப்பது!
ச்சை! நான் சொல்ல வந்தது அதில்லை. பயண அனுபவம் எழுதும்போது வரலாற்று நிகழ்வுகளைக் குறிப்பிடுவதும், பழைய நாட்களை இரை மீட்பதும் நல்ல விடயம்தான். ஆனால் அதுவே அளவுக்கு மீறினால்...?
குமுதம் இதழில், இருமனைவிகளுடன் முதலிரவு என்று ஒரு கட்டுரை. அடடா, தமிழநாட்டிலும் இப்படியா? ஒருவனுக்கு ஒரு மனைவி அல்லது ஒருமனைவிக்கு ஒரு கணவன் என்பது அங்கு சட்டம் இல்லையா? சரி, அப்படி இருந்தாலும் இந்த விடயத்தை தமிழ்நாட்டுக்கே முரசறைந்துவிட்டுச் செய்வானா ஒருவன்?
ஒண்டுமில்லையாம். திரைப்படமொன்றுக்கான காட்சியாம் அது. அக்கட்டுரை பின்வருமாறு போகின்றது. "...இங்கே மனைவியுடன் பாடும்போது காதலியின் நினைவு வந்துவிடுகிறது. அதனால் மனைவிக்கு ஒரு பல்லவி காதலிக்கு ஒரு பல்லவி என்று டூயட் போகிறது"
முதலமைச்சருக்குத் தீவிரவாதிகளுடன் தொடர்பென்று ஒரு படத்தில் காட்சி வந்தால் அதையே ஒரு கட்டுரையாகப் போட இவர்களுக்குத் துணிவு இருக்கா?
போனால் போகின்றது; அவர்களது எழுத்துச் சுதந்திரம் என்று விட்டுவிடலாம் என்றால், அதன் இறுதிவரிகள் கடுங்கோபத்தை உண்டாக்குகின்றன. அது இதுதான்:
"இந்தக் காட்சிகள் படமெடுக்கப்பட்டது பாண்டிச்சேரியில் பாரதியார் வாழ்ந்த வீட்டுக்குப் பக்கத்தில். செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே"
பாரதியின் பெயரைப் போகிற போக்கில் எடுத்துவிடுவது பாரதி இனி உயிர்த்துவர மாட்டார் என்ற துணிவிலன்றி வேறெதுவாக இருக்கப் போகின்றது!
உண்மையைச் சொல்லுங்கள். இப்படியான கட்டுரை சமுதாய விழிச்சிக்காகவா எழுதப்பட்டது? எனக்கென்னமோ இக்கட்டுரையின் நோக்கத்தை விட அக்காட்சி பரவாயில்லைப் போலுள்ளது!
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்?
0 Comments:
Post a Comment
<< Home