என்னை வாழவிடு
இந்தப் பௌர்ணமி நிலவு வட்டமாக இருக்கிறது. அதனைப் பார்க்கும்போது உந்தன் நினைவுகள் அலைகளாய் என்னை அலைக்கழிக்கின்றன...! இருந்தும் இந்தக் கொட்டும் பனி இரவில் நிலவை -பஞ்சுமிட்டாய் பார்க்கும் ஒரு பாலகனாய்- பார்த்துக் கொண்டிருக்கிறேன்...!
சின்னஞ் சிறு வயதுகளில், சின்னஞ் சிறு வகுப்புகளில் படித்த(?) நாட்களில் எனக்கு உன்னைப் பிடிப்பதில்லை. அப்போது உனக்கு என்னைப் பிடித்திருக்கலாம். ஆனால் நான் அதனை அறியாமல் விலகியே நடந்தேன்.
அந்த நாட்களில் என்னோடு படிக்கும் குட்டி, சிவா இருவரும் சந்தோசத்தில் பாட்டெல்லாம் பாடுவார்கள்...! நீ எப்போது வகுப்புக்கு வருவாய் என்று ஆவலோடும், ஆசையோடுங் காத்திருப்பார்கள். அப்படியே இப்போதெல்லாம் நானும் உன் வருகையை எதிர்பார்க்கத்தொடங்கி விட்டேன். ஆனால்...அந்தக் குட்டிக்கும், சிவாவுக்கும் நீ தொடர்ந்து கண் காட்டுவதை என்னால் உணர்ந்து கொள்ள முடிகின்றது. என்னில் மட்டும் ஏனிந்த ஓரவஞ்சனை...?
அவன் போட்ட எந்த மந்திரத்தில் நீ அவனது வலையில் விழுந்தாய் என்று இந்தப் பதினாறு பௌர்ணமிகட்கும் முந்திய ஒருநாளில் சிவாவையே கேட்டேன். நான் உன்னைக் காதலித்தால் நீயும் என்னைக் காதலிப்பாய் என்று அவன் சாதாரணமாய்ச் சொன்னான்.
நீ என்னைக் காதலிக்காவிடின் என் கல்வியே குழம்பிவிடும். ஏன், என் இளமையே வீணாகிப் போய்விடும். வாலிபன் ஒருவனின் வாழ்க்கையைக் கெடுத்த பாவி என்ற பட்டத்தை தயவு செய்து நீ பெற்று விடாதே...!
என் காதலே உன்னைப் புரிந்து கொள்ள என்னால்தான் முடியவில்லை. நீயாவது என்னைப் புரிந்து கொண்டு, என்னில் இரக்கங் காட்டு...! என்னோடு படிக்கும் சக மாணவர்கள் என்னைக் கேலி செய்வதைப் பார்த்தும் உன் மனம் இளகவில்லையா? நீ எனக்கு ஒரு தடவை கண் காட்டினாலே போதும் மீதியை நான் பார்த்துக் கொள்வேன்.
ஓ என் கணித பாடமே...! நாளைய வகுப்பிலாவது நான் உன்னைப் புரிந்து கொள்வேன். அல்லது நீ என்னைப்புரிந்து கொள்வாய். அந்த நம்பிக்கையில் விடியலிற்காய் காத்திருக்கிறேன். கணிதமே, கண் திறந்து என்னை வாழவிடு...!
-கிஸோக்கண்ணன்
0 Comments:
Post a Comment
<< Home