Wednesday, July 13, 2005

ஒரு பைத்தியம் நிலா பார்க்கிறது*

கோடை காலத்தின் ஒரு உக்கிர இரவு அது. உடலின் வெப்பங் கூடியதால் அதனைச் சமப்படுத்த தோலின் நுண்ணிய துவாரங்களில் இருந்து வேர்வைத்துளிகள் வெளிப்பட்டுக் காற்றைச் சுகம் விசாரித்தன. அகோரம் தாங்க முடியாமலோ என்னவோ காற்றுஞ் சூடாக மாறியது.

வீட்டுக்குள்தான் இப்படி. வெளியில் போய் வயல்வெளியில் சற்று காற்று வாங்கினால் என்ன? உள்ளம் வயல்வெளியை நினைத்துப் பார்த்து ஒரு தடவை துள்ளிக் குதித்தது. வீட்டுப்படி தாண்டி வெளியே வந்தேன். தென்றல் செல்லமாக என் முகத்தில் அடித்தது. பின்னர் காதுகளில் இலேசாகக் குசுகுசுத்து மன்னிப்புக் கேட்டது. என்னையும் அறியாமல் சற்று வாய்விட்டு 'மன்னித்தேன் தென்றலே' என்றேன். நான் மன்னித்துவிட்ட சந்தோசத்திலேயோ என்னவோ தென்றலுக்குப் பேச்சே வரவில்லை.

செல்லமக்காவின் வளவு தாண்டி குச்சொழுங்கையின் புழுதியில் கால் வைத்தேன். அந்தப் புழுதிமணல் ஒரு பூவின் இதழ்களைப் போன்று மென்மையாக இருந்தது. 'ஐயோ உழக்கி நடந்தால் அதற்கு வலிக்கப் போகின்றதே' என்று என் ஜீவன் ஆதங்கப்படவே பாதங்களை மெதுவாய் எடுத்து வைத்தபடி வயல்வெளியைப் போய்ச் சேர்ந்தேன்.

பகலில் பச்சைப்பசேல் என்றிருந்த மரங்கள் தூரத்தே இப்போ அமைதியாய் கறுப்பாய் கோலமளித்தன. மனசில் சுகந்தத்தை வரவழைக்க தன் சில்மிசங்களைக் காட்ட ஆரம்பித்தது தென்றல் குழந்தை.
கண்களை அலையவிட்டு எட்டிய தூரம்வரை பார்த்தேன்...மனித ஜீவன்கள் உலாவுவதற்கான ஒரு அடையாளத்தையுங் காண முடியவில்லை.

இலேசாகக் கனைத்துக் கொண்டேன். பள்ளிக்கூடத்திலை சரஸ்வதிப் பூசைக்கு போட்ட படத்தில் வீரபாண்டிய கட்டப்பொம்மன் பேசிய வார்த்தைகளளை நினைவுக்குக் கொண்டுவர முயன்றேன். அவனது முறுக்கிய மீசைதான் முதலில் என் ஞாபகத்தோடு மல்லுக்கு நின்றது. தொடர்ந்து அவன் பேசிய வார்த்தைத்துளிகள் என் நினைவுப் பூமியில் தூறல்களாக விழுந்தன.

"வட்டியாம் வட்டி.
வயலுக்கு வந்தாயா?
நாற்று நட்டாயா?
இல்லை அந்தப்புரத்திலுள்ள
என் குலப்பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா?
மானங் கெட்டவனே,
யாரைக் கேட்கிறாய் வட்டி?"

காற்று வெளியில் கைகளை அலையவிட்டு வீரமாய் வசனம் பேசினேன். நான்கு தடவைகளுக்கு மேல் சொல்லிவிட்டு மீண்டும் ஆரம்பித்த போது குடலின் அடிப்பாகத்தில் இருந்து இருமல் உருவெடுக்க கூடவே களைப்பும் சேர்ந்து கொண்டது.

கைகளை தலைக்கு அணையாக வைத்து, உழுது சற்று விகாரமாயிருந்த மணலில் மேனி சாய்த்தேன். தொடக்கத்தில் சற்று நொந்தாலும் அதுவே பின்னர் சுகமாக மாறியது.

இப்போது கண்ணில் தெரிந்தது வானம் மட்டுமே. கரிய உருக்கொண்ட பேய்களாய் முகில்கூட்டங்கள் ஊர்வலஞ் செல்ல, எங்களுக்கு இந்த ஊர்வலம் எல்லாம் சரிவராது என்பது போல் நட்சத்திரங்கள் கைகட்டி வாய்மூடி மௌனியாய் இருந்தன. இவர்களுக்கு மத்தியில் இந்த வானிற்கே மகாராணி எனச் சொல்லாமல்சொல்லி நிலவு கம்பீரமாகக் காட்சியளித்தது. அதன் வெண்மை கலந்த ஒளிவீச்சின் அழகில் மிளிர்ந்தது பூமிப்பெண்ணின் முகம்.

முகில் கூட்டங்கள் எவ்வளவுதான் சீண்டிப் பார்த்தும் நிலவு எதையும் தாங்கும் இதயமாய் அமைதியாய் இருக்கவே, அதன் பொறுமையைப் பார்த்து ஒரே நேரத்தில் அதன்மீது மதிப்பு, பிரியம், பொறாமை வந்தது.

"இவ்வளவு பொறுமையை நீ எங்கிருந்து கற்றாய்...? எனக்கும் கொஞ்சம் சொல்லேன் நிலவே" உரக்கச் சத்தமிட்டேன்.

நிலவு ஒன்றுமே சொல்லாமல் மண் பார்த்தது. இந்த மண்ணை எப்படி நாம் வருத்தினாலும் அது எதிர்ப்பது கிடையாது. மாங்கு மாங்கு என்று கொத்தினாலும் மறு பேச்சு பேசுவதில்லை; எச்சில்தனை உமிழ்ந்தாலும் வாய் திறந்து வார்த்தைகளை உதிர்க்காது. அவ்வளவு பொறுமை! நிலவு அதனைத்தான் சொல்லியிருக்க வேண்டும்.

"நிலவு! நீயும் நானும் சிநேகிதர்களாக இருப்பமோ?" நான் தயங்கித் தயங்கிக் கேட்க 'அதுக்கென்ன, இருப்பமே' என நிலவு சிரித்தது.

என்னைப்பற்றி நிலவுக்குக் கதைகதையாய்ச் சொன்னேன்.
"நிலவுப் பிள்ளம்... நான் கதை கவிதையெல்லாம் எழுதுவன்" என என்னை நானே தம்பட்டம் அடித்துக் கொள்ள, அதனை நம்புவதற்கு நிலவு தயங்கியது.

"என்ரை உருவத்தை வைச்சு என்னை எடை போடாதை. கடுகு சிறுத்தாலும் காரம் போகாது ஓ! வேணுமெண்டால் இப்பவே உனக்கு ஒரு கதை சொல்லவோ?" நான் சீற 'சரி, சொல்லு பார்க்கலாம்' என்பதாய் நிலவு ஒரு பார்வை பார்த்தது. என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு ஆரம்பித்தேன்.


"ஒரு நாட்டை ஒரு இராசா ஆண்டு வந்தானாம். தான் தன்ரை நாட்டை நல்ல முறையிலை ஆட்சி செய்யுறன் எண்டு மற்றவர்களை நம்பச் செய்வதிலேயே அவன் குறியாக இருந்தானாம்.

ஒருநாள் தனது மந்திரியை அழைத்து,"மந்திரியே...! மனிதர்கள் நாங்கள் அழுதால் கண்ணீர் வரும். அதை வைத்து எங்களின் சோகத்தை மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள். ஆனால் தண்ணீரிலே இருக்கின்ற மீன்கள் பாவம். அவை அழுதால் அவற்றின் கண்ணீர் தண்ணீரோடு கலந்துவிடும். இது மனிதர்கள் பலருக்குத் தெரிவதில்லை. மீன்கள் பாவம்! அவைகளும் எனது ஆட்சியில்தானே இருக்கின்றன. அவைகளின் கண்ணீர் மனிதர்களுக்குத் தெரிய வேண்டும். எனவே எல்லா மீன்களையும் பிடித்து நிலத்திலே போடுங்கள். அவை நிலத்தில் அழுதால் மனிதர்களும் அதனைக் காணலாம். இது எனது கட்டளை" என்றானாம்.

இராசாவின் கட்டளையை ஏற்று மந்திரி அப்படியே செய்தானாம். நிலத்திற்கு வந்த மீன்கள் துடிதுடித்தன. அவற்றின் விழிகளில் இருந்து கண்ணீர் வந்தபோது, தனது நோக்கம் நிறைவேறிவிட்டது என்று இராசா பெருமிதமடைந்தானாம்".

கதையைச் சொல்லிவிட்டு நிலவின் முகத்தைப் பார்த்தேன். என் கதையில் மூழ்கியிருந்த நிலா யதார்த்ததுக்கு வர சற்று நேரம் எடுத்துவிட்டு 'ஆகா! அருமையான கதை' என்று பாராட்டுத் தந்தது.

என் கேள்விகளுக்குப் பதிலளித்து, என் கதையினை இரசித்து நிலவு உரையாடினதை என்னால் இன்னுமே நம்பமுடியவில்லை. முருகேசு வாத்தியாரட்டை பாராட்டுப் பெற்றதுமாதிரிச் சந்தோசமாக இருந்தது.

இதனை யாருக்காவது சொல்லியாக வேண்டும் என்று மனசு அவசரப்பட்டது.

"நிலவே! நீ கதைச்சதை யாருக்காவது சொல்லியாக வேண்டும். மற்றது நான் நித்திரைக்கும் போக வேண்டும். நாளைக்குச் சந்திப்பம் என்னா!"
இப்போ நிலவு அழுமாற்போல் ஒரு பார்வை பார்த்தது. இருந்தும் அரைமனசோடு நிறைய நினைவுகளைச் சுமந்துகொண்டு நிலவைப் பிரிந்து சென்றேன்.

நிலவோடு கதைச்சதை அடுத்த நாள் பள்ளிக்கூடத்திலை பெடியளுக்குச் சொன்னபோது எல்லோரும் என்னை லூசுமாதிரிப் பார்த்தபடி, "நிலவு ஒரு ஊமை; அதாலை கதைக்க ஏலாது" என்று ஏளனஞ் செய்தபோது உயிரின் ஆழத்தில் இருந்து வேதனை பீறிட்டு எழுந்தது. 'அவர்கள் நம்பாட்டா எனக்கென்ன' என்று ஒருவாறு மனசைத் தேற்றிக் கொண்டேன்.

மறுநாளைய இரவுக்காய் ஆசையோடு காத்திருந்தேன். சாப்பிடக்கூட விருப்பமில்லை. எப்ப இரவு வரும் எப்ப நிலவைப் பார்க்கலாம் என்றிருந்தது. கடைசியாய் அன்றும் இரவு வந்தது; சேர்ந்து நிலவும் வந்தது. நிலவு இறைவனாகவும், அதனைச் சுற்றியுள்ள நட்சத்திரங்கள் இறைவனுக்கு அர்ச்சிக்கப்பட்ட மலர்களாகவும் தெரிந்தன.

"நிலவு, அண்டைக்கே உன்னைக் கேட்கவேணும் எண்டு நினைச்சனான். பொறுமை மீறிக் கோபம் வரும்போது நீ என்ன செய்வாய்?"
எனது இந்தக் கேள்விக்கு நிலவு ஒன்றுமே சொல்லவில்லை. இருந்தும் அது என்ன சொல்ல வருகின்றது என்று எனக்குத் தெளிவாய்ப் புரிந்தது. கோபம் வரும்போது வார்த்தை என்னும் எச்சிலைத் துப்பாமல் மௌனித்திருக்க வேண்டும் என்பதனைத்தான் அது தன் மௌனத்தால் உணர்த்தியது.

"சரி நிலவு! நேற்றுக் கதை சொன்னனான். இண்டைக்குக் கவிதை ஒண்டு சொல்லப் போறன். சின்னக் கவிதையெண்டாலும் இது உனக்கு நிறையப் பிடிக்கும்" என்றுவிட்டு ஆரம்பித்தேன்.

ஏற்ற இறக்கத்தோடு கவிதையைச் சொல்லிவிட்டு அதன் முகத்தையே ஆவலோடு பார்த்தேன்.
'அழகான கவிதை. ஆனா, இதை நீதான் எழுதினாய் என்று நம்பத்தான் கொஞ்சம் கஸ்ரமாய் இருக்கு' என்று அதன் முகஞ் சொல்லியது.

"எந்தக் கோவில்லையும் அடிச்சுச் சத்தியம் பண்ணுறன்...இதை நான்தான் எழுதினனான்" நான் அழத் தயாரான போது நிலவு தன் புன்சிரிப்பால் என்னைச் சமாதானப்படுத்தியது.

"ஐயோ, நல்லா இருண்டு போச்சு. அம்மா என்னைத் தேடப் போறா. நான் இப்ப போக வேணும். நாளைக்கு வெள்ளண வாறன்" என்று அவசரமாய்ப் பிரிந்தேன்.

ஏதேச்சையாய் திரும்பி வான் பார்த்தேன். அதுவும் என் கூட வந்து கொண்டிருந்தது. வந்த வழியால் திரும்பி நடந்தபோது அது என் முன்னால் பாதை காட்டி ஒரு போர்வீரனாய்ச் சென்றது.

"ஏன் நிலவு எனோடையே வாறாய்? உனக்கு என்ன வேணும்?" கேள்வி கேட்டபோது நிலவு குறும்பாய்ச் சிரித்தது.

"இந்த விளையாட்டு எல்லாத்தையும் வேறை ஆரோடையும் வைச்சுக் கொள்ளு" செல்லமாய்க் கோபித்தபடி வீடு நோக்கிக் கால்களைச் செலுத்தினேன்.

மனசுக்குள் ஏதோ உறுத்த திரும்பிப் பார்த்தேன். கள்ள நிலவு...! இப்பவும் என் பின்னாலேயே வந்து கொண்டிருந்தது.

"குட்டி நாய்க்கும் செல்லப் பிள்ளைக்கும் செல்லங் கொடுக்கக்கூடாது எண்டு சொல்லுவினம். அதோடை உன்னையும் சேர்க்க வேணும் போலை கிடக்கு" என்று நான் பகிடிக்குச் சொன்னேன்.
நிலவோ, "ஆர் குட்டிநாய்? நீதான் குட்டிநாய்" என்பது போல் என்னை ஏளனமாய்ப் பார்த்தது.

"எனக்குப் பின்னாலை வரக்கூடாது எண்டால் வரக்கூடாது. சொல்வழி கேக்காட்டால் அடிச்சுப் போடுவன் ஓ...!" நான் என்ன சொல்லியும் அது என் பின்னாலேயே வந்தது.

ஒருமுறை நன்றாய் மூச்சை இழுத்துவிட்டு, வீட்டை நோக்கிக் கால்கள் தெறிக்க ஓடினேன். திரும்பிப் பார்த்தால் அது என்கூடவே வரும் என்ற பயத்தில் திரும்பியே பார்க்கவில்லை.

வீடு வந்து களைப்பில் கட்டிலில் போய் விழுந்தேன். படுத்த வேகத்திலேயே நித்திரையும் வந்தது. திடீரென் விழித்துக் கொண்டேன். நடுச்சாமம் பன்னிரண்டு மணி முப்பது நிமிடம். நிலவு என்ன செஞ்சிருக்கும். அது என்னோடை ஓடுமோ...? நான் கோட்ட மட்டதிலேயே ஓட்டத்திலை முதலாவதாக வந்தனான். இருந்தும் மனசு புறாக்குஞ்சாகக் குறுகுறுத்தது. சத்தம் போடாமல் கதவைத் திறந்து முற்றத்திற்குப் போய் சற்று அண்ணாந்து வான் பார்த்தேன். கள்ள நிலவு சிரிச்சுக் கொண்டிருந்தது.

"உனக்கென்ன நிலவு, நீ பள்ளிக்கூடத்துக்கும் போறேல்லை. நான் அப்படியோ? காலமை ஏழு மணிக்கே எழும்ப வேணும். நாளைக்குப் பார்ப்போம்" என்றுவிட்டு அதனைப் பார்க்கப் பாவமாய் இருந்தது. நித்திரை கண்ணைச் சுழற்ற திரும்பப் போய்ப் படுத்தேன். பாவம் நிலவு! இரவு முழுக்க தனிய இருக்கப் போகுது. நினைத்துப் பார்க்க எனக்கு அழுகை வந்தது.

காலையில் கண் விழிச்சதும் வெளியே போய் ஆகாயத்தைப் பார்த்தேன். நிலவைக் காணவில்லை.
"அச்சாப்பிள்ளை நிலவு. உப்பிடித்தான் சொல்வழி கேட்க வேணும்."


வயல்வெளியின் வரம்புகளையும், தென்றலையும் சாட்சியாக வைத்துக் கொண்டு எம் சினேகிதம் வளர்ந்தது. இதுவரை தவழ்ந்து கொண்டிருந்த அந்தச் சினேகக் குழந்தை இப்போ மெல்லக் காலூன்றி எம் இதயப் பிரதேசத்தில் ஓடிவிளையாடியது.

அன்றும் வழமையைப் போல் நிலவோடு கதைச்சுக் கொண்டிருந்தேன். அப்போதுதான் கவனித்தேன். என் நிலவு தேய்ந்து கொண்டிருந்தது. குறுகியதாய் ஆனால் மிகவும் கொடியதாய் ஒரு வலிமின்னல் என் நெஞ்சில் வெட்டியது.

"ஏன் நிலவே நீ ஒவ்வொரு நாளும் தேஞ்சு கொண்டு போறாய்?"ஒன்றுமே பேசாமல் அது சோகமாய் இருந்தது. நான் மன்றாடிக் கேட்டும் அது காரணஞ்ச் சொல்லவில்லை.

இப்போதெல்லாம் அது என் வீட்டருகே வருவதில்லை. சற்றுத் தொலைவிலேயே நின்றுவிடும். எப்பவுமே மூஞ்சையை 'உம்' எண்டு வைச்சுக் கொண்டு ஒரு சோகப்பார்வை பார்க்கும்.


பதின்மூன்றாம் நாள். முதல்நாளையைவிட இன்று அது இன்னுங் கூடத் தேஞ்சிருக்கும் என்பதை எண்ணிப் பார்த்தபோது என் உடல் பதறியது. என் கைகள் நடங்குவதை என்னாலேயே உணர்ந்து கொள்ள முடிந்தது.

மனசு பூரவும் சோகத்தை நிரப்பிக் கொண்டு வயல்வெளியை நோக்கி நடந்தேன். காற்றுக்கு அன்று என்ன நடந்ததோ தெரியாது. அள்ளி அடிச்சு பலமாக வீசியது. புழுதி மணல் முகத்தில் அடிச்சு வலது கண் எரிந்தது. ஒற்றைக் கையால் அதனைப் பொத்திக் கொண்டு வயல்வெளியை அடைந்தேன்.

தலையைச் சற்றி உயர்த்தி வான் பர்த்தேன். நட்சத்திரங்களும் முகில்களும் மாத்திரமே தெரிந்தன; என் நிலவைக் காணவில்லை. என்னுள் சோகத்தீ பற்றிக் கொண்டு சுடர்விட்டு எரிய, பொல பொலவென்று கண்ணீர் முத்துக்கள் சொரிந்தன.

நிலவு சொல்லித் தந்த பொறுமையைக் கைவிடாமல் காத்துக் கொண்டிருந்தேன்.

இரவு ஒரு மணியிருக்கும்...இன்னுமே நிலவு வரவில்லை.

"நட்சத்திரங்களே...! என் நிலவைக் கண்டனீங்களோ? எனக்காக இங்கை காத்திருக்கிறன் எண்டு சொன்னது. ஆருங் கண்டனீங்களோ?" எனக்கு வாய் குளறியது. வார்த்தைகள் தொண்டைகுழி தாண்ட முடியாமல் தடுமாறின.

"நான் காத்திருப்பதை வான் பார்த்திருப்பதை விழி பூத்திருப்பதை எப்படி மறந்து போனாய்? என் நிலவே! நீ எங்கை போய் விட்டாய்? விளையாடினது காணும்...தயவு செய்து வெளியை வா. நீ வராட்டால் நான் செத்துப் போவன் ஓ! உனக்கு ஆர் உப்பிடிச் செஞ்சது? அதையாவது சொல்லிவிட்டுப் போ" உயிரின் ஜீவநாடியில் இருந்து ஆர்ப்பரித்தேன்.
ஒரு பதிலுமே வரவில்லை.

உடம்பு உதறத் தொடங்க, நடக்கவே சக்தியில்லாமல் கால்களும் சோர்வுற்றன.

"என்ரை குஞ்செல்லோ...என்ரை செல்லமெல்லோ...என்ரை தங்கப்பவுணெல்லோ... தயவு செய்து என்னைவிட்டுப் போய்விடதை. போறதெண்டால் என்னையும் கூட்டிக் கொண்டு போ. சொல்லு என்னையும் ஆட்கொள்ளுவாயா அன்றி ஆட்கொல்லியாய் மாறுவாயா...?"வாய்விட்டு அலறினேன்.

"கந்தையாவின்ரை லூசு இந்த நேரம் வயலுக்கை என்ன செய்யுது?" ஆரோ பக்கதிலை கத்திக் கேட்டது. சற்றுத்தூரம் ஓடிவிட்டுத் திரும்பிப் பார்த்தேன். நான் எதிர்பார்த்தது போல் அங்கு என் நிலவில்லை. இன்னுங் கொஞ்சத்தூரம் ஓட, வரம்பு தடக்கி கால்கள் இடறிக்கொண்டன.

முகம் நிலத்தில் அடிபடவிழுந்து மூக்குடைந்து இரத்தம் மெல்லக் கசிந்தது. வலியின் வேதனை தாங்க முடியாமல் இறுக மூடிய கண்களை இலேசாகத் திறந்தேன். மேலே முகில்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறியிருந்தன.

"என்ரை குஞ்செல்லோ...என்ரை செல்லமெல்லோ...!"



(முற்றும்)
............................................................
5 அல்லது 6 வருடங்களுக்கு முன்னர் எழுதியது*.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, June 23, 2005

எழுதி முடிக்கப்படாமல் போன சிறுகதை

பத்து ரூபா.

இந்தத் தலைப்பில் ஒரு சிறுகதை (கிறுக்கலாய்) எழுதி வைச்சிருந்தேன் 6 வருடங்களுக்கு முன்பு. அதனை மெருகேற்ற வேண்டும் என்று எண்ணி அது நிறைவேறாமலே போய் விட்டது.

அந்தக் கிறுக்கலை இப்போது காணவில்லை. இன்னும் ஒருக்கா வடிவா தேடிப் பார்க்க வேண்டும். சிறுகதையில் எனக்கு இப்ப நம்பிக்கை இல்லாமல் போனதும் தொலைந்தமைக்கு ஒரு காரணமாக இருக்கும் என்று நினைக்கிறன்.

பத்து ரூபா என்பதுதான் அக்கதையின் தலைப்பு.

பத்து ரூபா.

இது ஒரு தமிழ் ஆசிரியரின் கதை. நேர்மையும் கண்டிப்பும் நிறைந்த தமிழ் ஆசான் அவர். ஒருநாள் அவரது பாதையில் ஒரு பத்துரூபாத்தாள் கேட்பாரற்றுக் கிடந்தது. அக்கம்பக்கம் பார்த்துவிட்டு அதனை தனது சட்டைப்பையினுள் போட்டுக் கொண்டார்.

ஆனால், அவர் வீடு வந்ததும் குற்ற உணர்ச்சி அவரைப் பிய்த்துத் தின்றது. ஊருக்கு உபதேசம் செய்யும் தானே இப்படியான ஒரு செயலை எப்படிச் செய்யலாம் என்று அவருள் கேள்வி எழுந்தது.

மறுநாள் மற்றவர்கள் எல்லாம் இவரினைச் சுட்டி எள்ளி நகையாடுவது போல இவர் உணர்கின்றார்.

...
...

இப்படியான வதைகளின் பின் ஓடோடி வீடு வரும் அவர் அந்தப் பத்து ரூபாவை பிள்ளையார் கோவில் உண்டியலில் போட முடிவு செய்கின்றார்.
கோவிலுக்குப் போய் பையினுள் கையை வைச்சால் அங்கு அந்தப் பத்து ரூபாவைக் காணவில்லை.

வந்த வழியே அவர் திரும்ப பதறிக்கொண்டு ஓடுகின்றார். அங்கு ஒருவன் குனிந்து எதையோ எடுக்கின்றான். அது அது... அது அவர் எடுத்த பத்து ரூபா.

இவர் கெக்கட்டம் விட்டுச் சிரித்தார். தான் பட்ட மன உளைச்சலை இப்ப இந்த ஒருவன் படப் போகின்றானே என்று. பாதையால் போவோர் இவரை விசித்திரமாய்ப் பார்த்துச் செல்கின்றார்கள்.

...................................................
இதுதான் கதை. எழுதி முடிக்கப்படாத எனது 2ஆவது அல்லது 3ஆவது சிறுகதை.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, June 21, 2005

நாய் கடிக்கும் கவனம் (பகுதி 2)

செல்லமக்காவீட்டு நாய்க்குட்டிக்கு சோறு போட்டால் எப்படிச் சிரிக்குமோ அப்படி அவள் சிரித்தாள்.


நாய் ஒன்று அமைதியில்லாமல் அல்லாடிக் கொண்டிருந்தது. ஓ அதுவும் நான் தேடுமாற்போல் யாரையோ தேடுகின்றதோ? கேட்க நா துடித்தது. அதன் கூரிய பற்களைப் பார்த்த பின்பு என் முடிவினை மாற்றிக்கொண்டேன். பிறகொருநாள் அதன் பல்லெல்லாம் கொட்டுப் பட்ட பின்னர் கேட்கலாம் என்று எனது மனசைச் சமாதானப்படுத்திக் கொண்டேன்.

..........
பகுதி ஒன்றுக்கு இங்கே செல்க.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, June 20, 2005

அந்நியன் ஆனேனே

இரண்டு கல்யாணங்களுக்குப் போய் நன்றாய் உண்டுங் கண்டும் வீடு திரும்பும் போது அந்நியன் படம் பார்க்க நண்பர்கள் திட்டமிட்டார்கள்.

எனக்கு ஒரே அசதியாய் இருந்தது. படம் பார்க்கவே அன்று விருப்பம் இருக்கவில்லை. அதனைவிட நானொரு கஞ்சன். அநியாயமாய் ஒரு படத்திற்கு 15$ செலவழிக்க நானொருபோதும் விரும்பேன்.

10$ தான் இம்முறை என்று நண்பன் சொன்னபோது மறுப்பேதும் சொல்லமுடியவில்லை.

ஒரு திரையரங்கிற்குப் போனால் அங்கு house fullஆம். சரியென்றுவிட்டு இன்னொரு திரையரங்கிற்கு பெருந்தெரு ஊடாகப் பயணஞ் செய்து போயாகிவிட்டது.

அங்கு இருக்கைகளுக்கு இலக்கம் இல்லை. யாரும் எங்கும் இருக்கலாம். வெளியில் பார்வையாளார்களை வரிசையாக நிற்க வைக்கக்கூட அந்தப் புண்ணியவான்கள் முயற்சி செய்யவில்லை.

ஒருவாறு முண்டியடித்துப் படம் பார்க்க இருந்தாயிற்று.

அந்தத் திரையரங்கின் ஒலியமைப்பு சரியான கேவலம். ஒலியினளவைக் கூட்டி விட்டிருந்தார்கள். நானொன்றும் பாதி செவிடில்லை என்று சொல்லி திரையரங்கின் உரிமையாளரின் பிடரியில் ஒரு சாத்து சாத்த முடியாதா என்று மனசு வன்முறையாய்ச் சிந்திச்சது.

ச்சை...அஞ்சு சதத்துக்கு உதவாத ஒரு திரைப்படத்திற்காக நானேன் வன்முறையாய்ச் சிந்திப்பான். என்னிலேயே எனக்கு வெட்கம் எழுந்தது. பக்கத்தில் இருக்கும் தோழன் சொன்னான் "perfect volume" என்று. ஒருவேளை என்னில்தான் பிழையோ?

எப்படா படம் முடியும் என்றிருந்தது. ஒரு கட்டத்தில் வெளியே போய் நண்பர்கள் படம் பார்த்து முடியும் வரை காத்திருக்கலாமோ என்றும் யோசித்தேன். அவர்களது இன்பத்தை நான் ஏன் குலைப்பான் என்றுவிட்டு அமைதியாய் படம் பார்த்தேன்.

படம் முடிந்து வெளியே வரும்போது முடிவு செய்தேன். இனி திரையரங்கிற்குச் சென்று தமிழ்ப்படம் பார்க்ககூடாது.

அதனைவிட முக்கியமாய் என்னுள் ஒரு கேள்வியெழுந்தது. ஏன் என்னால் என் நண்பர்களைப்போலிருக்க முடியவில்லை? நான் ஏன் அந்நியனானேன்?

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, June 17, 2005

இலக்கணம் பிழைக்குதடி தலைக்கனம் குறையுதடி

நேற்று வருவதாக நாளைக்குச் சொல்கின்றாயே.

ஏன் வருவாள் என்றுவிட்டு வராமல் இருப்பாய்?

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
statistics