Thursday, May 12, 2005

மருமகளுக்கு ஒரு கடிதம்

கனடா
வைகாசி 4, 2001

அன்புள்ள மருமகள் சந்தியாவிற்கு உன் மாமாச்சி சின்னக்குட்டி எழுதும் அன்பு மடல் இது. நீ எப்பிடிப் பிள்ளை இருக்கிறாய்? என் சுகத்திற்கென்ன... நீயிருக்கும் வரைக்கும் எனக்கென்ன குறை வரப் போகின்றது?

மாமாச்சிக்கு லூசு. ரெலிபோனிலை கதைக்கிறதை விட்டிட்டு கடிதம் எழுதுறான் எண்டு இம்மடல் பார்த்ததும் நீ சொல்லுவாய் என்று எனக்குத் தெரியும். நான் ரெலிபோனிலை கதைப்பதை உன்னால் திரும்பவுங் கேட்க முடியுமோ? ஆனால் கடிதத்தை நீ கிழவியானாப்பிறகும் வைச்சு வாசிக்கலாம் எல்லோ.

நீ கள்ளி... "படிச்சு டொக்டராக வந்து உனக்குத்தான் மாமாச்சி உழைச்சுத் தருவன்" எண்டு எனக்குச் சொல்லி, என்ரை பொக்கற்றுக்கை உள்ள காசு எல்லாத்தையும் எடுப்பாய். பிறகு உன் கொப்பாவிடம் போய், மாமாச்சி கள்ளன்; அவனுக்கு ஒரு சதமுமே குடுக்கமாட்டன். எல்லாக் காசும் என்ரை அப்பாக் குட்டிக்குத்தான் எண்டு சொல்லுவாய். உது நியாயமோ...? தர்மமோ? உனக்கு மனச்சாட்சியே இல்லையா?

கொம்மாவோடை வேலை செய்யிற கமலாக்கா உங்கள் வீட்டுக்கு வந்தபோது, அவவுக்கு முன்னாலை நிண்டுகொண்டு, "அம்மாவோடை வேலை செய்யிற குண்டம்மா வந்திட்டாள்" எண்டு சொன்னியாம். மொக்கு...மொக்கு! உப்பிடி வயசுக்கு மூத்த ஆக்களைச் சொல்லலாமோ? சரி, சொன்னதுதான் சொன்னாய்... அதோடை நிறுத்தி இருக்கலாம்தானே. மாமாச்சிதான் சொல்லித் தந்தவன் எண்டு ஏனடி என்னை மாட்டி விட்டாய்? உனக்கு ஆனா, ஆவன்னா சொல்லித் தந்ததைத் தவிர வேறென்ன பாவம் நான் செய்தேன்...?

விடுமுறை நாட்களில் உன்னைப் பார்க்கவந்து ஓய்வாக அமர்ந்திருக்கும் பொழுதுகளில் நான் பாட்டுப் பாடுவதில் நீ அப்படி என்ன இமாலயத் தவறைக்கண்டுவிட்டாய்? நான் பாடும்போது, "அழு...அழு! மாமாச்சி,நல்லா அழு" என்று நீ சொல்லலாமோ? அழுகைக்கும், பாட்டுக்கும் வித்தியாசம் தெரியாத ஜீவன் நீ! உனக்கு எங்கே என் பாடலின் இனிமை தெரியப் போகின்றது?

நான் எஞ்சினியரிங் படிக்கிறன் பிள்ளை. உனக்கு சொக்கா விக்கிற கடையே வாங்கித்தருவன்... தயவு செய்து "என்ரை மாமாச்சி இங்கிணிங்கிணி படிக்கிறான்" எண்டு ஆக்களுக்குச் சொல்லித் திரியாதை. போன கிழமை சுதன் அண்ணை என்னைக் கண்டதும், "டேய் சின்னக்குட்டி... ஒழுங்காக இங்கிணிங்கிணி படிக்கிறியோ?" எண்டு கேட்டார். எல்லாம் உன்னால்தான் வந்தது.

உன்னோடை படிக்கிற அபிராமியின் தோட்டை கழட்டிக் கொண்டு வந்திட்டாய் எண்டு அந்தப் பிள்ளையின்ரை தாய் வந்து முறைப்பாடு செஞ்சது எண்டு கேள்விப்பட்டன். சந்தோசம்... மிக மிகச் சந்தோசம். "ஏனடி பிள்ளை அபிராமியின்ரை தோட்டைக் கழட்டிக்கொண்டு வந்தனீ?" என்று கொம்மா கேட்டபோது "அந்த மூஞ்சைக்கு தோடு வடிவே இல்லை" என்று நீ சொன்னதைஅந்தப் பிள்ளையின்ரை தாய் கேட்டிருந்தால் அன்று ஒரு பூகம்பமே நிகழ்ந்திருக்கும். நல்லவேளை! மாமாச்சிதான் கழட்டிக்கொண்டு வரச் சொன்னவன் என்று நீ சொல்லவில்லை. அதுக்காக நான் வாழ்நாள் முழுவதும் உனக்கு நன்றிக்கடன்பட்டிருக்க வேண்டும் நான்.

இங்கு என்னோடு படிக்கும் ஒரு நங்கை ஒவ்வொரு நாளும் சொக்கா கொண்டு வருவார். நான் "என்ரை மருமகளிற்கும் ஒரு சொக்கா தாங்கோ" எண்டால் அந்த நல்ல மனசு படைச்சவர் உனக்கென ஒன்றுமே தரமாட்டார். நீ நல்ல வடிவென்று அதுக்கும் பொறாமை தெரியுமோ! அத்துடன்நான் உன்னில் வானளாவிய அன்பு வைத்திருக்கின்றேன் என்று எல்லாருக்கும் தெரியும். எப்போதும் உன்னைப் பற்றியே அவர்களிற்குச் சொல்லிக் கொண்டிருப்பேன். உனது படத்தைக் காட்டுமாறு கேட்பார்கள். நாவூறு பட்டிடுமே என்ற பயத்தில் நான் காட்டவே இல்லை. "சரி, எப்பிடி உங்கள் மருமகள் இருப்பாள்? அதையாவது சொல்லுங்கோ" என்பவர்களிற்கு நான் என்ன பதிலளிப்பேன் தெரியுமா? "நீங்கள் எப்பவாவது தேவதை பார்த்திருக்கிறீங்களோ? அந்த தேவதைகள் எல்லாம் எனது மருமகளின் அழகு கண்டு, பிரமித்துப் பூச்சொரியும்" என்பேன். அதுக்கு அவையள் "உங்கடை மருமகள் ஒரு குட்டிப்பிசாசு! நீங்கள் ஒருபெரிய பிசாசு" என்பார்கள். பாவம் அவை! வீட்டிலை கண்ணாடி இல்லைப்போலை கிடக்கு.

நான் தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால் வந்தமர்ந்தால் "போடா மாமாச்சி! போய் மரியாதையா புத்தகத்தை எடுத்துப் படி" என்று எனக்குக் கட்டளை இடுவாய். சொந்த மாமாவையே 'டா' போட்டுக் கதைக்கும் நீ மரியாதை பற்றிக் கதைக்கிறாய். அவளவை உன்னை குட்டிப் பிசாசு என்று சொன்னதும் சரிதான் போலை கிடக்கு. அடுத்த முறை உங்கை வரும்போது பெடியளோடை வருவன். அவங்களுக்கு முன்னாலை என்னை நீ 'டா' போட்டுக் கதைச்சியெண்டால் உனக்கு இருக்கு.

பிள்ளை இண்டைக்கு என்ன படிச்சது எனக்கேட்டால், தமிழ் வகுப்பிலை ஆ, பே, சே படிச்சனாங்கள்; டேக்கெயாரிலை ஆனா, ஆவன்னா படிச்சனாங்கள் என்று சொல்லுவாய். தமிழ் வகுப்பிலை போய் பிரெஞ்சும், பிரெஞ்சு வகுப்பிலை தமிழும் படிக்கிற ஒரேயொரு ஆள் நீதான். அது சரி, நீ இரண்டு வருசமா ஆனா, ஆவன்னாவோ படிக்கிறாய்? ஏன் உங்கடை ரீச்சருக்கு அதுக்கு மேலை ஒண்டுமே தெரியாதோ? ஒருவேளை உன் அறிவுக்கு ஆனா, ஆவன்னா தவிர வேறொன்றும் எட்டவில்லையோ?

நீ கெலிப்பிடிச்சவள். என்ன வாங்கினாலும் அது உனக்குத்தான் சொந்தமாகவேண்டும். எல்லாமே நீதான் செய்ய வேணும். இல்லையெண்டால் அபியின்ரை பிறந்தநாளுக்குப்போய் நான்தான் கேக்கு வெட்டுவன் என்று அடம் பிடித்திருப்பாயோ?

நீயும் மற்றவர்போல் நல்லவள்தான். என்ன, சின்னதொரு வித்தியாசம்! எல்லாரும்உயிர்களிடத்தில் அன்பு வைப்பார்கள். நீயோ சடப்பொருட்களில் அன்பு வைக்கின்றாய். தொலைபேசிக்கு தேத்தண்ணி பருக்கிய ஒரேயொரு மனிதப்பிறப்பு இந்த உலகத்தில் நீ மட்டும்தானே. பாரதி இருந்திருந்தால் உன்னை வைத்துக் காவியமே வரைந்திருப்பான்.

வேறென்ன சொல்ல. குழப்படி செய்யாமல், அம்மாவுக்கு சமையலில் "உதவி" செய்யாமல் நல்ல பிள்ளையாக இரு. எனது படிப்புகள் வாற மாச நடுப்பகுதியில் முடியும். அப்போது உன்னைக்காண நான் நேரில் வருகிறேன்.

பிற்குறிப்பு: இம்மடல் கண்டதும் உடன் பதில் போடவும் என்று உனக்குச் சொல்ல முடியாது. நீதான் ஆனா, ஆவன்னாவைத் தாண்ட மனம் இல்லாமல் இருக்கின்றாயே. ஆனா, ஆவன்னாவை அவ்வளவு தூரம் (இரண்டு வருசம்) நேசிக்கின்றாயா?

அன்புடன்
உனது மாமாச்சி,
சின்னக்குட்டி.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

6 Comments:

At 11:47 PM, May 12, 2005, Blogger இளங்கோ-டிசே said...

நல்ல கடிதம் + நனவிடைதோயதல். ஏற்கனவே வாசித்ததாய் ஞாபகம் :-).

 
At 12:03 PM, May 13, 2005, Blogger கிஸோக்கண்ணன் said...

சத்தி, எங்களை மாதிரி எழுதத் தேவையில்லை. நீங்கள் வழமையாய்(?) எழுதுறது போலையே எழுதுங்கோ. இவை வலைப்பதிவுகள்(blogs); இலக்கியத்துக்காக இல்லை. உங்களது அனுபவங்களை, பாதித்த விடயங்களை என்று எதுவானாலும் எழுதலாம். தமிழில் வலைப்பதிய இங்கு செல்லுங்கள். http://www.thamizmanam.com/

டிசே, ம்ம்ம் உண்மைதான் இது ஏற்கனவே பிரசுரமானது(எனது பதிவில் உள்ள பெரும்பாலான மற்றைய ஆக்கங்கள் போல).

 
At 9:08 PM, May 13, 2005, Blogger வசந்தன்(Vasanthan) said...

சின்னக்குட்டியின்ர கடிதம் நல்லாயிருக்கு.
நன்றி.
அடிக்கடி எழுதுங்கோ.

 
At 3:52 PM, May 16, 2005, Blogger கிஸோக்கண்ணன் said...

எழுதினால் போச்சு.

 
At 3:12 PM, June 20, 2005, Blogger சினேகிதி said...

மாமாச்சி கடிதம் போட்டு நாலு வருசமாச்சல்லோ ஏன் இன்னும் மற்றக் கடிதம் போடேல்ல?

 
At 4:45 PM, June 20, 2005, Blogger கிஸோக்கண்ணன் said...

பேனை மையெல்லாம் தீர்ந்து போச்சு

 

Post a Comment

<< Home

statistics