Tuesday, February 22, 2005

கணபதிப்பிள்ளை வாத்தியாருக்கு ஒரு கடிதம்

சின்னக்குட்டி
கனடா
மாசி 22, 05
--------
திரு. கணபதிப்பிள்ளை
துன்னாலை தெற்கு
கரவெட்டி
தமிழீழம்
-----
.
என்றும் அன்பும், பண்பும், பிரம்பும் கொண்ட கணபதிப்பிள்ளை வாத்தியார் அவர்களுக்கு, என்றும் உங்கள் மேல் பயமும், பக்தியும், இன்னும் பயமும் கொண்ட கடை மாணாக்கன் சின்னக்குட்டி எழுதும் அன்பு மடல் இது.

மேலும் என்று ஆரம்பிக்க, நீங்கள் காரணமில்லாமல் எங்களுக்கு மேலுங் கீழும் அடிச்ச வலி(மை)யான பொழுதுகள் ஞாபகத்திற்கு வந்து தொலைக்கின்றன... இன்னுமே தொலையாமல்!

அவளைத் தொடுவானேன்; கவலைப்படுவானேன் என்று உங்கள் கல்யாணம் முடிந்த அடுத்த வாரம் நீங்கள் வகுப்பிலை அடிக்கடி சொல்வதன் அர்த்தம் எனக்கு இன்னுமே புரியவில்லை. ஒருவேளை நானும் கல்யாணம் செய்தால் புரியுமோ என்னவோ!

வர வர மாமியார் கழுதை போலானார் என்று அடிக்கடிசொல்வீர்கள். நாங்கள் வரவர மொக்குகளாய் வாறம் எண்டு சொன்னீர்களோ அன்றி உங்களது புது மாமியார் பற்றிச் சொன்னீர்களோ அதுவும் தெரியாது. கனடாவாக இருந்திருந்தால் கேட்டிருப்போம். நீங்களும், "இது உங்களுடைய வணிகம் இல்லை" என்று ஆங்கிலத்தில் சொல்லக்கூடும்.

நியாயமான காரணத்துடன் எப்பவாவது ஒருநாள் நாங்கள் பள்ளிக்கூடம் வராதுவிட்டால், "எனக்கு எல்லாம் தெரியும். தம்பி பள்ளிக்கூடத்திற்குக் கள்ளம் அடிச்சுப் போட்டு எங்கையெங்கையெல்லாம் சுத்தினவர் எண்டும் தெரியும்; தம்பி எத்தினை வயசிலை அரைஞாண் கொடி கட்டினவர் எண்டுந் தெரியும்" என்று பொழுது போக்காய் அடிக்கும் எல்லாம் தெரிந்த உங்களுக்கு உங்களையும் சரஸ்வதி ரீச்சரையும் இணைத்துக் கக்கூசுச் சுவரிலை (வரலாற்றுப் பதிவாய்) கிறுக்கி வைத்தது யாரென்று தெரியாமல் போனது மட்டும் அதிசயம்.

இவர் மட்டும் பெரிய அறிவுக் கடலோ! இவரும் இஞ்சினியரிங் கிடைக்காமல்தானே வாத்தியாராக வந்தவர் என்று நாங்கள் எங்களுக்குள் கதைத்து உங்களைப் பழி வாங்குவதுண்டு. ஆனால் உங்கள் மாணவப் பருவத்தில் நீங்கள் அதிகாலை நான்கு மணி தொட்டு காலை ஏழுவரையும், மாலையில் நான்கு மணிதொட்டு இரவு எட்டுமணிவரை தோட்டத்தில் உங்களது ஐயாவிற்கு உதவியாய் இருந்ததை நாங்கள் கணக்கில் எடுப்பதில்லை.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஊருக்கு வந்தேன். உங்களையும், எனது பழைய நண்பர்களையும் சந்திக்க வேண்டுமென்ற ஆர்வத்தோடு பயணமானேன். சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையின் போது நீங்கள் உங்களது இரண்டு கால்களையும் இழந்து போனதாய் அங்கு வந்த போதுதான் அறிந்தேன். நிமிர்ந்த நடை. பார்ப்பவரைக் கூசச் செய்யும் கூரிய பார்வை. நிரந்தரமானதாய் நெற்றியில் அழகாய் ஒரு திருநீற்றுப் பூச்சு. மில்க்வைற் சவர்க்காரத்திற்கு விளம்பரங் கொடுக்குமாற் போல் என்றும் பளிச்சிடும் வேட்டி. இவைகள் எதுவும் இல்லாமல் அழுக்குப் பிடித்த சாரத்துடன் ஊன்றுகோலின் உதவியுடன் வாழும் உங்களைப் பார்க்கும் தெம்பு எனக்கு இல்லை.

எங்களுக்கு ஒரு நாடு இருந்திருந்தால் என்றும் போல கம்பீரமான வாத்தியாராகவே நீங்கள் இருந்திருப்பீர்கள் என்ற உண்மை என்னை வாட்டுகின்றது. இதற்காய் நானும் என்ன செய்யப் போகின்றேன். இம்மடலை எழுதிவிட்டு மீண்டும் என் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்திடுவேன்.
(தொடரும்...)

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

6 Comments:

At 10:50 AM, May 02, 2005, Blogger Sundar said...

உரிமையிண்மை, ஆதிக்கத்தின் கீழ் அடிமையாயிருத்தல், வாழ்வுரிமைப்போர் போன்றவற்றை துளி கூட உணர வாய்ப்பில்லாத ஒரு 25 வயது இந்தியன் கண்களின் ஓரத்திலும் கண்ணீர் வரச் செய்யும் பதிவிது.

 
At 6:14 PM, May 02, 2005, Blogger கிஸோக்கண்ணன் said...

வணக்கம் சுந்தர்,

இம்மடலின் மிகுதி இன்னும் பதியப்படாமல் என் மனசிலும், கொஞ்சம் என் கணனியிலும் இருக்கின்றது. உங்கள் கருத்தைப் பார்த்ததும்தான் அதனை முழுமையாக வலையேற்றம் செய்யவேண்டும் என்ற சிந்தை மீண்டும் எழுந்தது.

...உரிமையிண்மை, ஆதிக்கத்தின் கீழ் அடிமையாயிருத்தல், வாழ்வுரிமைப்போர் போன்றவற்றை துளி கூட உணர வாய்ப்பில்லாத ஒரு 25 வயது இந்தியன் கண்களின் ஓரத்திலும் கண்ணீர் வரச் செய்யும் பதிவிது...

எமது உணர்வுகளை நாமிருக்கும் நாடா தீர்மானிக்கின்றது? ஈழத்தில்/இந்தியாவில் ஒரு அப்பாவி மனிதம் கொல்லப்பட்டால் எவ்வளவு கவலையுறுவோமோ அவ்வளவுக்கு நாம் கவலையுற வேண்டும் ஈராக்கில் ஒரு மனிதம் கொல்லப்படுகையிலே. ஆனால், "சுயம்", "எங்கள்", "நம்மவர்கள்" என்ற சிறிய வட்டத்துக்குள் சிறைப்பட்டுப் போனோம்.

 
At 2:13 AM, May 03, 2005, Anonymous Anonymous said...

நல்ல பதிவு கிசோக்கண்ணன்.பண்பும் பிரம்பும் கொண்ட வாத்தியாருக்கு என்ற ஆரம்பம் ரசிக்கக்கூடியாதாக உள்ளது.உள்ளக்கிடக்கைகளை கொட்டியுள்ள உள்ளடக்கமும் அருமை.

 
At 9:55 AM, May 03, 2005, Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

உங்கள் வலைப்பதிவை feedreaderஇல் போட வைத்த பதிவு.

ஃபெப்ரவரிக்குப் பிறகு இப்பதான் வந்திருக்கிறீங்க என்பதால் கூடிய சீக்கிரம் தொடருவீங்க என்று எதிர்பார்க்கிறேன்.

இதைப்போலவே உங்களுடைய பழைய பதிவொன்றும் மிகவும் பிடித்திருந்தது. சுட்டி எடுத்துக்கொண்டு வருகிறேன்.

http://kanitham.blogspot.com/2004/07/blog-post_108949558854953389.html

படிச்சு நிறைய நாளைக்கு மறக்கேலாம இருந்த பதிவு இது -
http://kanitham.blogspot.com/2004/12/blog-post_08.html



-மதி

 
At 10:48 AM, May 03, 2005, Blogger கறுப்பி said...

தம்பி நல்லா அதே நகைச்சுவையோடு மனதையும் நெருடும்படி எழுதுகின்றீர்கள். தொடருங்கள்.

 
At 11:58 AM, May 03, 2005, Blogger கிஸோக்கண்ணன் said...

அருணன் சொன்னது: உள்ளக்கிடக்கையைக் கொட்டியுள்ள உள்ளடக்கம்...
நான்: அடடா இதுவும் நல்லா இருக்கே. உங்கள் தளம் http://aliyosai.blogspot.com/ என்றுதான் இங்கு தெரிகின்றது. எப்படி? alaiyosai அல்லவா?

மதி சொன்னது: ஃபெப்ரவரிக்குப் பிறகு இப்பதான் வந்திருக்கிறீங்க.
நான்: (பெப்ரவரிக்குப் பிறகு வர நானென்ன மார்ச்சா?). மார்ச்சில் 2 தடவையும், ஏப்ரலில் 2 தடவையும் பதிந்திருக்கின்றேன். நீங்கள் குறிப்பிடும் அந்த பாட்டிக்கு ஒரு கடிதம் உண்மைச்சம்பவங்களில் கோர்ப்பு. எனவேதான் அது மனசைத் தொடக்கூடியதாக உள்ளது.

கறுப்பி சைட்...: தம்பி நல்லா அதே நகைச்சுவையோடு மனதையும் நெருடும்படி எழுதுகின்றீர்கள். தொடருங்கள்.
நான்: நன்றியுங்கோ கறுப்பியக்கோவ்.

 

Post a Comment

<< Home

statistics