Thursday, January 13, 2005

சுனாமியும் அந்நிய உறவுகளும்

எனது பேராசிரியர் ஒருவர் மின்னஞ்சல் செய்திருந்தார். சாரம் இதுதான்:

"அன்புள்ள கிஸோ,

நீ சிறீலங்காவின் தமிழ்ப்பகுதியைச் சேர்ந்தவன் அல்லவா. உனது குடும்ப அங்கத்தவர்கள் யாவரும் பாதுகாப்பாக உள்ளார்களா? உனக்கு ஒரு பிரச்சினையும் இல்லையென்று நம்புகின்றேன். அந்தப் பேரழிவால் உனது படிக்கும் திறனுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்னால் முடிந்தளவிற்கு உதவத் தயாராகவுள்ளேன். உனக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் தயவு செய்து என்னைக் கேட்கவும்."


"எனது குடும்பத்தவர்கள் தற்போது மொன்றியால் நகரினில் வசிப்பதனால் அவர்கள் நலமே. ஆனால் எனது குடும்பத்தவரை இழந்தால் எவ்வளவு கவலையுறுவேனோ அவ்வளவு கவலையுறுகின்றேன். சுனாமி ஏற்படுத்திய வேதனையைவிட சிறீலங்கா அரசின் பாரபட்சமான நடவடிக்கைகளே என்னை மிகவும் காயப்படுத்துகின்றன" என்று எழுதினேன். (அப்போதுதான் சுனாமியினால் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பகுதிகள் மீதான சிறீலங்கா அரசின் மனிதநேயமற்ற செய்கைகள் பற்றிய செய்தியொன்றினை வாசித்திருந்தேன்.) மேலும், சிறீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள "அக்கறையையும்" அதனது மோசடிகளையும் சுருக்கமாக விளக்கினேன். நிவாரண நிதி சேகரிப்புப் பற்றிய தகவலையும் வழங்கினேன்.

அவர் உடனேயே பதிலளித்திருந்தார்.

"எனக்கு ஐரிஷ் பின்னணியும் இருப்பதானால் உனது நாட்டு நிலமையினை ஓரளவிற்கு விளங்கிக் கொள்ள முடிகின்றது. நடந்து முடிந்த இயற்கை அனர்த்தம் இரு பகுதியினரையும் சமாதானத்திற்குக் கொண்டுவருமென்று முட்டாள்தனமாக நம்பிவிட்டேன். அது நடக்காது என்பது எவ்வளவு வேதனையான விடயம்! கனடாவின் DART எந்தப் பகுதிக்குச் செல்கின்றது?

இதற்கிடையில் உனது குடும்பத்தவர்கள் யாவரும் பாதுகாப்பாக உள்ளார்கள் என்பது மகிழ்ச்சியைத் தருகின்றது. நாளைக்குச் சந்திப்போம்.

-------*--------*----------*--------

இதெல்லாம் பெரிய விடயமில்லை. ஈழத்தவர்கள் வேலைசெய்யும் வேலைத்தளங்களின் மேலதிகாரிகள், முகாமையாளர்கள், முதலாளிகள் தமது பெயர் குறிப்பிடாமல் TROவிற்குப் பங்களிப்புச் செய்ததனை எப்படி மறக்க!
எமது குஞ்சுகள் விடுமுறை நாட்களில் அந்நியரின் கதவினைத் தட்டிப் பங்களிப்புக் கேட்டபோது தம்மாலான நிதியும், தாகத்திற்கு நீரும் வழங்கிய அவர்களின் இளகிய மனசினை எப்படி மறக்க!
இவர்களுக்கு எப்படி நாம் கைம்மாறு செய்யப் போகின்றோம்.
அந்த வெள்ளையின இளைஞன்
என்னைப் பார்த்தான்...
முருகேசர் வீட்டு சொறிநாயை நான்
அருவருப்பாய்ப் பார்ப்பது போல.
என்றவாறு பொருள்படும்படி நாம் எழுதிய கவிதைகள், கதைகள் எல்லாம் ஞாபகத்துக்கு வருகின்றன. எமது பார்வையில்தான் இதுவரை தவறுகளா? ஒன்றிரண்டு இடங்களில் இடம்பெறும் இனத் துவேசச் செயல்களை நாங்கள்தான் உள்ளங்கையில் வைத்துப் பார்க்கின்றோமோ?

கனடாவின்
நிறவாதத்தைக்கண்டனஞ் செய்தபடியே
கறுப்பன், சப்படையன் என
ஏளனஞ் செய்யும்
எமது சமூகத்தின்....
என்ற இளங்கோவின் வார்த்தைகளில் பொய்யில்லைத்தான்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

1 Comments:

At 2:32 PM, May 04, 2005, Blogger கிஸோக்கண்ணன் said...

பழைய பின்னூட்டங்கள்:

........................
கிஸோ,
உங்களின் பேராசிரியரின் அன்பு கனதியானது. நீங்கள் கூறுவதுபோலத்தான் சிலவேளைகளில் இனத்துவேஷம் என்று பொதுப்படையாக பார்த்துக்கொண்டிருக்கிறோமோ என்று நானும் நினைப்பதுண்டு. பாருங்கள் இன்றும் தொடர்ந்து மூன்று மணித்தியாலங்களாய் CBC தொலைகாட்சி, வானொலியின் ட்சூனாமி நிதிசேகரித்துக்கொண்டிருக்கிறார்கள். பங்குபெற்றிய, கலைஞர்கள்/celebraties ற்கும் தென்கிழக்காசியாவிற்கும் என்ன
Dj | Homepage | 01.13.05 - 11:55 pm | #
-----------------------------------
சம்பந்தம்? மனிதம் ஒன்றுதானே இணைத்துவிட்டிருக்கிறது. இப்படி இவர்களுக்கு ஒன்று நிகழ்ந்திருந்தால் நாங்கள் என்ன செய்துகொண்டிருப்போம் என்று யோசிக்கிறேன்.
.....
மற்றது தொடர்ந்து எழுதவும். சின்னக்குட்டியும் அவ்வப்போது தூக்கத்தைக்கலைத்தார் என்றால் இன்னும் நல்லம்.
Dj | Homepage | 01.13.05 - 11:56 pm | #

-----------------------------------
Nalla Pathivu, Meelum ezuthungkaL
Karthikramas | 01.14.05 - 9:39 am | #

-----------------------------------
உங்கள் கருத்துக்கு நன்றி டிஜே மற்றும் கார்த்திக். நானும் CBCஇன் நிதி சேகரிப்பி நிகழ்ச்சி பற்றி வாசித்து அறிந்து கொண்டேன். தொலைக்காட்சியின் அருமை இப்போதுதான் தெரிகின்றது.

எழுதவேண்டும் என்பதற்காக எழுதாமல், எழுதித்தான் ஆக வேண்டும் எனும்போது எழுதுவே இப்போது நேரம் உள்ளது.
கிஸோ | Homepage | 01.14.05 - 6:39 pm | #

 

Post a Comment

<< Home

statistics