பாட்டிக்கு ஒரு கடிதம்
அன்புள்ள பாட்டிக்கு உன் அருமைப் பேரன் சின்னக்குட்டி எழுதும் அன்புமடல் இது. நீ எப்படிப் பாட்டி இருக்கிறாய்? என்ரை சுகத்துக்கென்ன... பனி வந்தால் மட்டும் மூக்குக்கு என்னமோ எல்லாம் நடக்குது பாட்டி. ஏலுமண்டால் என்ரை மூக்கின்ரை பேரிலை எங்கடை நுணுவில் பிள்ளையாருக்கு ஒரு அருச்சனை செய் பாட்டி.
மேலும் உனக்கு என் கடிதங்கள் கிடைத்திருக்காது. போட்டால்தானே கிடைப்பதற்கு... அப்படித்தானே பாட்டி? உனக்கு விழிப்பாக இருக்கும்... உந்தப்பெடியன் ஊரிலை இருக்குமட்டும் அம்மம்மா என்று விளித்துவிட்டு, கனடாவைக் கண்டதும் பாட்டி என்று அழைக்கின்றானே என்று. உனக்கு ஒன்றுமே தெரியாது பாட்டி. அம்மம்மா என்று சொல்வதைவிட பாட்டி என்பதில்தான் நிறைய பாசமும், கிக்கும் இருக்கிறது.
உன்னோடை பகிர்வதற்கு என்று நிறைய இருக்குது பாட்டி. ஆனாலும் அவற்றை எல்லாஞ் சொல்லி உன்னை ஏன் வீணாகக் கவலையடையச் செய்ய வேண்டும் என்ற ஆதங்கத்தில் சிலதைச் சொல்லாமலே விடுகிறேன்.
இப்ப நான் முந்தி மாதிரி இல்லைப் பாட்டி... அப்பவெல்லாம் எங்கடை ஊர் நாய்கள் எல்லாம் எனக்கெதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானங் கொண்டுவரும் அளவுக்கு நான் அதுகளுக்குக் கல்லாலை எறிந்து ஆக்கினை கொடுப்பன். மடித்துக் கட்டியும் நிலத்தை சாறம் முட்டும். இப்ப நான் வளந்திட்டன். மீசையும், ஆசையும் முளைத்து இப்ப ஆம்பிளையாக வந்திட்டன். உனக்குத்தான் என்னை இப்பிடிப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையோ என்னவோ...
"உந்தப் பெடியன் எல்லாரையும் மறந்து போச்சு" எண்டு போன வருசம் ஊருக்கு வந்த மாமாவுக்கு நீ சொன்னதாக அறிந்தேன். கனடாவிலை வாழ்ந்தாலும் நான் ஒண்டும் உன்னை மறக்கேல்லைப் பாட்டி! கனடாவுக்கு வந்ததும் அரைஞாண் கொடியைத்தான் அறுத்து எறிஞ்சனான்... தொப்புள் கொடி உறவை எப்படிப் பாட்டி அறுக்க முடியும்....?
உனக்கு ஞாபகம் இருக்கோ பாட்டி....? சின்னக்காடரின்ரை தேவன்ரை கலியாண வீட்டுக்கு எல்லாரும் போக, நீயும் நானும் மட்டும் வீட்டை இருந்தம். நான், "எனக்கு குழல்புட்டு பசிக்குது... எனக்கு குழல்புட்டு பசிக்குது" என்று சிணுங்கினேன். உடனே நீ, "சரி ராசா. அவிச்சுத்தல்லாம், அழாதை" எண்டுபோட்டு, மாவைக் குழைச்சு குழலுக்கை போடப்போட அது நிரம்பவே இல்லை. "இது என்னடா மாயமாக் கிடக்கு" எண்டு நீ குழலை இறக்கிப் பார்க்கத்தான் தெரிஞ்சுது நீ குழலுக்கை தட்டுப் போட மறந்து போனாய் எண்டு. "உதை ஒருத்தருக்கும் சொல்லாதை ராசா, நான் வல்லிபுரக் கோவில் திருவிழாவுக்கு உனக்கு இருபது ரூபா தருவன்" எண்டு சொன்னியே பாட்டி... அதை எப்ப தரப் போறாய்....?
முத்தையன்கட்டிலை கள்ளுக் குடிக்கக் காசு தரேலை எண்டு அம்மப்பா உனக்கு அடிக்க, உன்ரை காது பிஞ்சு தோடு தொலைஞ்சதாவது உனக்கு ஞாபகம் இருக்குதோ பாட்டி? "உவனுக்கு இடி விழாதோ?" என்று நீ அம்மப்பாவைத் திட்டி ஒரு கிழமையாலை அவருக்கு மலேரியாக் காய்ச்சல் வந்து படுத்து அனுங்கியபோது, அவரது காலைப் பிடிச்சுக்கொண்டு நீ கண்ணீர் விட்டாயே பாட்டி... உன்னை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
வெள்ளைக்காரத் துரைமார் தேங்காய் மூட்டை தரச் சொல்லிக் கேட்க, பூசணிக்காய்களை சாக்கில் போட்டு அம்மப்பா கொடுத்தாராம். அண்டேலை இருந்து அவருக்கு "உலகப்பிரட்டி" என்று வெள்ளைக்காரர் பட்டம் வைச்சதாக அம்மப்பா சொல்லுவார். ஆனால் வெள்ளைகாரருக்கு தமிழ் தெரியாதே. அம்மப்பா எனக்கு நல்லாவே புழுகிப் போட்டார். அப்படித்தானே பாட்டி.....?
மூன்றாம் பிறை படத்தைப் பற்றி யாராவது கதைத்தால் எனக்கு உன் ஞாபகம்தான் வரும். மூத்தக்காவின்ரை கல்யாண வீட்டண்டு மூன்றாம்பிறை படம் பார்த்தம். கன நாட்களுக்குப் பிறகு அந்தப்படம் பற்றிக் கதைக்கேக்கை, "கமலும் , சிறீதேவியும் கடைசியாக ஒன்று சேரவே இல்லை" என்று அம்மா சொன்னா. உடனே நீ, "சீச்சீ, யார் சொன்னது? நான் சின்னத்தங்கம் வீட்டை ஒரு படம் பார்த்தனான். அதிலை இரண்டு பேரும் கல்யாணம் கட்டுகினம்" எண்டு சொன்னாயே பாட்டி... அந்தப் பொழுதுகள் மீண்டும் வராதா?
இங்கை என்னோடை படிக்கிற பொடியள் எல்லாருக்கும் அவங்கடை வீட்டிலை பாட்டி இருக்கிறா. நான் மட்டும்தான் உன்னைப் பிரிந்து இருக்கிறன். பாட்டி வடை சுட்ட கதையைத் தங்களது பாட்டிமார் அடிக்கடி சொல்வதாக "லெவல்" அடிப்பாங்கள். நான் என்ன சொல்வது பாட்டி... அந்த பாட்டி வடை சுட்ட கதையிலை வாற பாட்டியே எனது பாட்டிதான் எண்டு சொல்லுவன். வயித்தெரிச்சல் பிடிச்சவங்கள் நான் சொல்லுறதை நம்புறதே இல்லை. "நான் பாட்டிக்குக் கடிதம் எழுதுறன்" எண்டு சொன்னால் உவங்கள் சிரிக்கிறாங்கள். நான் என்ரை "பார்ட்டிக்குத்தான்" கடிதம் எழுதுறன் எண்டு சொல்லுறாங்கள். இந்தக் கடிதம் உனக்குக் கிடைக்கும் எண்டு எனக்கே நம்பிக்கை இல்லைப் பாட்டி.
அழகமக்காத்தை வீட்டு அலம்பல் வேலியிலை நிற்கிற தும்பியைப் பிடிச்சு, அதன் வாலை அறுத்துப்போட்டு, நூல் கட்டி கடிதம் எண்டு சின்னனிலை அனுப்புவம். அப்படிச் செய்யலாம் எண்டால் இங்கை தும்பிகூட இல்லைப் பாட்டி.
உன்னை ஒண்டு கேக்க வேணும் பாட்டி. நீ குமரியாக இருக்கேக்கை நல்ல வடிவாம். அந்தக்காலப் பெடியள் எல்லாம் உனக்குப் பின்னாலேயே வருவாங்களாம். இப்பவும் நீ வடிவுதான் பாட்டி. தலை நரைத்தாலும் உன் அழகு இன்னும் நரைக்கவில்லைத்தானே. உன் அழகின் மர்மம் என்ன பாட்டி...?
சந்தைப்பக்கம் போனால் பார்வதி விலாஸிலை நீ எனக்கெண்டு வாப்பன் வாங்கி வருவாய். எனக்கு வாப்பன் நிறையப் பிடிக்கும் எண்டு உனக்கு மட்டும் எப்படித் தெரியும் பாட்டி?
நீ பாவம் பாட்டி. எங்கள் கல்வீட்டிலை தங்காமல் கொட்டில்லைதான் இருந்தாய். காலமை ஏழு மணிக்கு மூக்குப் பேணியுடன் தேத்தண்ணி வேணுமெண்டு அம்மாவிடம் வருவாய். "நான் கொண்டுவந்து தருவன்தானே. ஏன் பிச்சைகாரி மாதிரி அலையுறாய்?" என்று அம்மா அக்கறையுடன் கத்துவா. அப்பவெல்லாம் நீ மௌனித்து நிலம் பார்க்கும் பொழுதுகளில் என் நெஞ்சில் அமிலம் தெறித்தது போல் இருக்கும் பாட்டி.
எனக்கு நடந்த ஒப்பிரேசன் பற்றிக் கேள்விப்பட்டு இரண்டு நாட்களாகச் சாப்பிடாமல் கிடந்தாய் எண்டு பெரியம்மா ஃபோனிலை சொன்னவா. எனக்கு இப்ப பரவாயில்லைப் பாட்டி. "ஒப்பிரேசனை இந்தப் பாலன் எப்படித் தாங்கும்?" என்று மனங் கலங்கினாயாம். சொன்னால் நம்பமாட்டாய் பாட்டி.... ஒப்பிரேசன் பெரிதாக எனக்கு வலிக்கவில்லை. அதன் மூலம் நான் கண்டு "களித்த" உறவுகளினதும், சினேகிதங்களினதும் வேசமும், பாசமுந்தான் என்னை மெய்சிலிர்க்கச் செய்கின்றது.
என் இப்போதைய ஆசை என்ன தெரியுமா பாட்டி...? நான் ஊரிலை இருந்துகொண்டு உனக்கு ஒவ்வொரு நாளும் காலையிலை தேத்தண்ணி போட்டுத் தரவேணும். ஒவ்வொரு நாளும் பெரியம்மா வீட்டுக் கிணத்திலை நீ குளிக்க நான் தண்ணி அள்ளித் தரவேணும். இது மற்றவர்களுக்குப் பேராசை மாதிரித்தான் தெரியும். ஆனால் நீயே சொல்லு பாட்டி... எனது ஆசை நியாயமானதுதானே....?
போன மாசம் மொன்றியாலிலை இருந்து மூத்தக்கா ஃபோன் எடுத்தாள். அண்டைக்குப் பிந்நேரம் தன்ரை மகள் என்ன தமிழ்ச்சொல் சொன்னாள் என்பதை ஒப்புவித்துவிட்டு, " அம்மம்மாவின்ரை அந்தியேட்டிக்கு தங்கமக்கா போகேல்லையாம்" என்று ஏதோ சொன்னாள். எனக்கு இதயமே விறைச்சுப் போனது மாதிரி இருந்துச்சுப் பாட்டி. நீ செத்துப் போனாயாம். தங்களுக்கு ஆறு மாசத்துக்கு முன்பே தெரியுமாம். சின்னம்மா சொல்லியிருப்பா என்று நினைச்சுத்தானாம் தான் எனக்குச் சொல்லவில்லையாம்.
எனக்கு ஒண்டுமே விளங்கேல்லைப் பாட்டி. என்னைத் தனிய விட்டுப் போக உனக்கு எப்படி மனசு வந்தது பாட்டி....? என்ரை பிள்ளையளுக்கு நீ எனக்குச் சொல்லாத கதையெல்லாம் சொல்லவேணும் எண்டு எவ்வளவெல்லாம் ஆசைப்பட்டன் தெரியுமோ பாட்டி....?
பாட்டி....பாட்டி, சாகமுதல் என்னைப்பற்றி பெரியம்மா ஆக்களிடம் ஏதாவது கேட்;டனியோ? சாகும் பொழுதில் என் முகம் உனக்கு ஞாபகம் வந்ததோ பாட்டி...? இப்ப என்ரை மனசு பூராவும் குற்ற உணர்வு பாட்டி. உன்னைப் பராமரிக்கவில்லையே என்ற கவலை இந்தக் கணப்பொழுதிலும் என்னை வாட்டுகின்றது.
உன்னைப் பராமரிக்காத காரணத்தால் நான் நரகத்திற்குத் தான் போகமுடியும். நீயோ சொர்க்கத்தில் இருக்கிறாய். நான் உன்னைப் பார்க்க வேணும். பாட்டி, நரகத்தில் இருந்து சொர்க்கத்துக்குப் போக ஏதாவது பாலம் இருக்குதோ எண்டு கேட்டுச் சொல்லுறியோ...?
பாட்டி...நான் பகிடிக்குத்தான் கேட்டனான். அந்த இருபது ரூபா நீ எனக்குத் தரத் தேவையில்லை. ஆனால் அதற்குப் பதிலாக நீ ஒன்று செய்ய வேண்டும். என் கனவில் எப்பவாவது வந்து, நீ சாகும்போது என்னை நினைத்ததாக (பொய்யாவது) சொல்லிவிட்டுப் போ...
வேறென்ன பாட்டி... கனவில் உன்னைக் கண்டதும் மறுமடல் தொடரும்.
அன்புடன்
உன் பேரன்,
சின்னக்குட்டி.
7 Comments:
:(
பழைய பின்னூட்டங்கள்
தயவு செய்து மேலுள்ள இணைப்பில் உங்கள் பின்னூட்டங்களை இடவேண்டாம்.
ippadik kodunga Kiso.
உந்தப்பெடியன் ஊரிலை இருக்குமட்டும் அம்மம்மா என்று விளித்துவிட்டு, கனடாவைக் கண்டதும் பாட்டி என்று அழைக்கின்றானே என்று. உனக்கு ஒன்றுமே தெரியாது பாட்டி. அம்மம்மா என்று சொல்வதைவிட பாட்டி என்பதில்தான் நிறைய பாசமும், கிக்கும் இருக்கிறது.
-/. | 12.08.04 - 11:01 pm | #
--------------------------------------------------------------------------------
«ó¾¿¡û »¡À¸í¸û... ¸ÉÅ¡ö þ¨½Â¾Çò¾¢ø ¸ñ¼Ð ¸ñÎ Á¸¢ú.
shanmuhi | Homepage | 12.09.04 - 3:14 am | #
--------------------------------------------------------------------------------
very nice. keep it up.
puthiya kana | 12.09.04 - 9:43 am | #
--------------------------------------------------------------------------------
அருமையாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.
அதுசரி முத்தையன்கட்டில் எந்த இடம்?
வசந்தன் | Homepage | 01.14.05 - 8:17 am | #
--------------------------------------------------------------------------------
பாராட்டுக்கு நன்றி வசந்தன் & புதிய கனா.
முத்தையன்கட்டில் இடதுகரை. பாடசலை விடுமுறைகளில் அங்கு போவோம் (கரவெட்டியிலிருந்து) விபரம் புரியாத வயசில்...
கிஸோ | Homepage | 01.14.05 - 6:47 pm | #
--------------------------------------------------------------------------------
Thanks for reply.
வசந்தன் | Homepage | 01.15.05 - 1:29 am | #
--------------------------------------------------------------------------------
உவன் சின்னக்குட்டியன் என்ன செய்யிறான். அவன ஒரு கடிதம் போடச்சொல்லுங்கோ. (எனக்கில்ல ஆருக்கெண்டாலும்)
வசந்தன் | Homepage | 03.13.05 - 7:54 am | #
--------------------------------------------------------------------------------
தயவு செய்து கீழே உங்கள் பின்னூட்டங்களை இடவேண்டாம்.
கிஸோக்கண்ண | Homepage | 05.03.05 - 4:53 pm | #
கிஸோ, சின்னக்குட்டியைத் தூங்கவிடாமல் தொடர்ந்து அவரைக்கொண்டு ஊர் ஞாபகங்களை எழுதுங்கள். உங்களின் சின்னக்குட்டியிற்கு நான் வளாகத்தில் படித்தகாலம் தொடக்கம், அவரின் முதல் வாசகர். இப்போது ஊர் ஞாபகங்களை அவுஸ்திரேலியாவிலிருந்து வசந்தன்-சயந்தன் என்ற இரட்டையர்கள் எழுதிக் கலக்கிக்கொண்டிருக்கின்றார்கள். எங்கட கனடா மானத்தை நீர் ஒருத்தராவது காப்பாற்றவேண்டும், ஊரின் நனவிடைதோய்தல்களை எழுதி.
முந்தி, மூன்று நான்கு வருசங்களுக்கு முன், நீங்கள் வாசிக்கத்தந்த ஆக்கங்கள் கொஞ்சம் என்னிடம் இருக்கிறது. எங்கட கனடா மானத்தைக் நீங்கள் காப்பாற்ற முன்வராவிட்டால், நான்தான் எழுதினது என்று என்ர பெயரில் அவற்றையெல்லாம் வலைப்பதிவுகளில் போட்டுவிடுவன் (களவெடுத்துப்போட்டால்தானே நல்ல 'இழக்கியவாதி'க்கு அழகு). முக்கியமாய், பைத்தியம் நிலா பார்த்த கதை என்று நீங்கள் முந்தி எழுதியதை விரைவில் இங்கே பதிந்துவிடுங்கள். எனென்றால், சில ஆக்கள் தாங்கள்தான், உலகத்திலேயே இருக்கின்ற ஒரேயோரு 'நிலவு' என்று சொல்லிக்கொண்டு திரிகினம். அவையள் இதை வாசித்தினமென்டால், கப்சிப்பாய் அடங்கியும்விடுவினம் :-).
naanum DJ othuuRan
-Mathy
டிசே, உங்கள் அப்படி கொஞ்சம் உங்களிடம் தந்ததை நான் மறந்தேபோனன். "ஒரு பைத்தியம் நிலா பார்க்கிறது" இன்னும் இங்கேதான் (எனது கணனி/அறை) உள்ளது. எடுத்துப் போட்டுவிட்டால் போயிற்று.
எனது ஆக்கங்களிற்கு நான் தான் முதல் வாசகன் என்று நினைச்சுக் கொண்டிருந்தேன்...ஆனால் இப்ப நீங்கள் முதல் எண்டு சொல்லுறியள்.
இ'ழ'க்கியவாதிக்கு என்று தெரிந்துதான் சொன்னீர்களா?
வசந்தன்/சயந்தன் சின்னப் பொடியள்... கொஞ்ச நாளைக்குப் புகழ்பெறட்டும். இதோ வெற்றிகொடி கட்டு....வானமே எல்லை என்று தொடங்குகின்றேன் (ச்சும்மா).
நீங்களும் எழுதுங்கள். என் தோளில் எல்லா பாரத்தையும் சுமத்திவிட்டு ஜாலியாய் இருக்கலாம் என்று கனவு கணாதீர்கள்.
.....
மதி, நீங்கள் போட்டதுபோலத்தான் பழைய பின்ன்னூட்டங்களைப் போட முதலில் முயற்சி செய்து பார்த்தேன். ஆனா, அது கொஞ்சம் அப்பிடி இப்ப்டிப் போச்சு. திரும்பவும் முயற்சி செய்து பார்க்கிறன்.
பின்னூட்டத்திற்கு நன்றி மூர்த்தி.
Post a Comment
<< Home