Sunday, November 07, 2004

வலியது வாழும்

பெயரினில் ஐக்கியம்
செயலினில் அயோக்கியம்
கயவரில் அதியுயர்
கயவனே கவனி!

உங்கள் தேசநலனுக்கு
பங்கந் தரு தேசமென்று
ஆங்கோர் போர் கொண்டீர்
எண்ணெய்யில்
பங்குபெற விரும்பும்
சிலவாலுகள் பங்குபெற.

சற்றலைற் கொண்டு -நீவிர்
'பெற்றெடுத்த' படங்கள்
சிரிப்பென்ற சிரிப்பெல்லோ.
டைனோசர் ஈராக்கில்
ஒட்டகம் ஓட்டுதல் போலவும்
சதாமும் பின்லாடனும்
சதா சந்திச்சு
பேரீச்சம்பழஞ் சாப்பிடல் போலவும்
படமெடுத்துத் தர
சீரிய சேவகர் கொண்டீர்.

உங்கள் அந்தப்புரங்களில்
நீங்கள் அணுகுண்டுகள் செய்து
அடுக்கி வத்திருப்பதும்
இஸ்ரேலும், தாங்களும்
மைனர் மாப்பிள்ளைகளாய்
ஈவ்டீஸிங் செய்வதுவும்
எவர்க்குமே தெரியாதே.

'சீ என்ன என்ன'
சொல்லுறதோ
அதையே தெய்வ வாக்காக்கி
பிறகதையே வாக்காக்கி
மீண்டும் நீவிர் அரசாள...

தோ தோ நாய்க்குட்டிகளும்
தோதாக உங்கள்
பின்னாலே துள்ளிவர...
பாவம்
அவையும் யாது செய்யும்?
ஒட்டுக்கேட்டல்களினால்
சொந்தச் சுதந்திரத்திற்கே
வக்கில்லாத போது
உலகமைதிபற்றி
எதைச்செய்து கிழிக்க.

வலியது வாழும் - ஈர்ந்த
வலியதுவும் வாழும்.
நிலைத்திருப்பது
நிலையாமையன்றி
வேறெதுவுமில்லை.
கோடைகடந்தொருநாள்
குலைநடுங்கக் குளிர்வருதல்
புதிதில்லை
சர்வதேச காவல்துறை ஐயா.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home

statistics