Wednesday, May 04, 2005

விடை தேடும் வினாக்கள்

கறுப்பியின் பதிவைப் படிச்சதும் எழுதியது இது. அவரது பதிவுக்கும், எனது இந்தப் பதிவிற்கும் என்ன தொடர்பு இருக்கின்றது என்று...(இந்த வரியினை நீங்களே முடிச்சுக் கொள்ளுங்கள்).
........
.
ஒரு தமிழாசிரியரிடம் கேட்டேன் தமிழர்கள் என்றால் யார் என்று. அவர் சொன்னார் தமிழ் மொழி பேசுகின்ற, தமிழ்க் கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்கள் என்று. நான் கேட்டேன், எனது குழந்தை இங்கு கனடாவில் தமிழ் கதைக்காமல் (அதாவது கதைக்கத் தெரியாமல்) தனியே ஆங்கிலம் மட்டுமே கதைத்தால் அது தமிழ்க்குழந்தை இல்லையா என்று. அவர் சொன்னார் "நீர் தமிழ்தானே, அப்ப குழந்தையும் தமிழ்தான்". நல்லது, அப்ப தமிழனுக்கு/தமிழிச்சிக்குப் பிறந்த குழந்தை மட்டும்தான் தமிழா? கட்டாயம் இருவரும் தமிழர்களாக இருக்க வேண்டுமா? எனக்கு திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை என்பதைக்காட்டிலும் எதிர்க்கேள்விகளால் சுக்குநூறாக்கப்படக்கூடிய பதில்களே எனக்குக் கிடைத்தன என்று சொல்வதே மிகச்சரியாக இருக்கும்.

சரி இருக்கட்டும்; மற்ற விடயத்துக்கு வருவோம். தமிழ்க் கலாச்சாரம்/பண்பாடு என்றால் என்ன? ஊரிலை மூண்டாம் நாலாம் வகுப்புகளிலை படிக்கேக்கை எங்களுக்குக் கிடைச்ச் சமூகக்கல்விப் புத்தகத்திலை தமிழர்கள் என்றுவிட்டு சேலையுடன் ஒரு பெண்ணை (அம்மா) காட்டுவார்கள். அவருக்குப் பக்கக்திலை வேட்டி சால்வையுடன் ஒரு ஆணை (தந்தை?). பிறகு இரண்டு பிள்ளைகள். அந்தப் பிள்ளைகள் என்ன அணிந்திருந்தார்கள் என்பதனை மறந்துபோனேன்.

ஓ, அப்ப சேலையணியும் பெண் தமிழிச்சி; வேட்டி சால்வை அணியும் ஆண் தமிழன். கனடாவில், பூச்சியத்துக்குக் கீழை 30 பாகை செல்ஸியஸாக இருக்கும்போது கட்டாயம் வேட்டிதான் கட்ட வேண்டும் என்று சொல்ல நான் ஒன்றும் மொக்கனுமில்லை; காட்டுமிராண்டியுமில்லை.

நான் வேட்டி கட்டுவதில்லை. (அக்காவின் கல்யாணத்துக்கும், பல்கலைக்கழகத்திலை நடந்த ஒன்றிரண்டு நிகழ்விலையும்தான் வேட்டி கட்டினான்). ம்ம்ம்...நாசமாப் போக...நானும் அப்ப தமிழில்லை.

முன்பு நான் படிச்ச பல்கலைக்கழகத்திலை நடக்கும் தமிழ் மாணவர் மன்றத்தின் நிகழ்வுகளிலை ஆரம்ப காலங்களிலை தமிழ் மாணவிகள் பொட்டு வைக்கிறேல்லை; தமிழ்ப்பண்பாட்டைப் பின்பற்றுவதில்லை என்று ஆக்கபூர்வமான(?) விவாதத்திலை ஆண்சிங்கங்கள் ஈடுபடும். அவளவையும் சும்மா இல்லை. நீங்கள் வேட்டி கட்டிக்கொண்டு வாங்கோ, நாங்கள் பொட்டு வைச்சுக்கொண்டு வாறம் எண்டுவினம்.

என்ன சொல்ல வாறன்? ஓ சொல்ல மறந்து போனன், பொட்டு வைச்சால்தான் தமிழெண்டுமில்லை; பொட்டு வைக்காட்டா தமிழில்லை எண்டுமில்லை என்பதுதான் பெரும்பான்மையானவரின் கருத்தாக இருந்தது.

ஆனாப் பாருங்கோ, இந்த மனிதர்களே விசித்திரமானவர்கள். தண்ணியடிக்கும்வரைக்கும் தண்ணியடிப்பது பிழையென்று ஒருவர் சொல்லுவார். புகைப்பிடிக்கும்வரை புகைப்பிடிப்பது புற்றுநோய்த் தப்பென்று இன்னொருவர் சொல்லுவார். தான் பொட்டு வைச்சுக் கொண்டிருக்கும்வரை, பொட்டு வைக்கும் பெண்கள்மட்டும்தான் தமிழெண்டு ஒரு மாணவி சொல்லுவார். ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களோடு பாலியலுறவு கொள்ளும்வரைக்கும் ஒருவர் சொல்லுவார், "ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையைத் தன் வாழ்விலும் எவர் கடைப்பிடிக்கின்றாரோ அவர்தான் உண்மையான தமிழர். (உம், அப்பிடிப் பார்த்தால், ஒருத்தியுமே இல்லாமல் வாழ்ந்தால் தமிழில்லையோ? இது சும்மா இந்தப் பதிவை ஞனரஞ்சகமாக்க).

(இந்த விவாதங்கள் தந்த பாதிப்பிலை நானும், "இங்கு ஒவ்வொரு நாளும் சோறும் இடியப்பமும் சாப்பிட்டுக் கொண்டு, தமிழ்ப்படம் பாக்கிறவையெல்லாம் தாங்களும் தமிழர் எண்டு நினைச்சுக் கொண்டிருக்கினம்" என்று முழங்கினேன் பல்கலைக்கழக தமிழ் நிகழ்வுகளில். அதெல்லாம் ஒரு காலம்...)

என்ன சொல்ல வாறன் எண்டு யாருக்காவது புரிஞ்சால் ஆனந்தம். என் கேள்விகளுக்கு கொஞ்சமேனும் ஏற்றுக்கொள்ளக் கூடிய/அறிவுபூர்வமான பதிலை யாரும் தந்தால் இன்னும் ஆனந்தம்.

கொஞ்சம் தெளிவா என் கேள்விகளை நான் சொல்லேல்லை எண்ட மாதிரி ஒரு நினைப்பு.

கேள்வி 1: இவர்தான் தமிழ் என்று திட்டவட்டமாகச் சொல்லல் கூடிய ஏதாவது வரையறை இருக்கின்றதா?

கேள்வி 2: அப்படி வரையறை இருந்தால், அந்த வரையறை என்ன?

கேள்வி 3: தமிழ்க் கலாச்சாரம் என்று நாம் குறிப்பிடுவது எதனை?

கேள்வி 4: கலாச்சாரமும், பண்பாடும் வெவ்வேறு பதங்களா?

கேள்வி 5: நாலாவது கேள்விக்குப் பதில் ஆம் எனில், கலாச்சாரம் என்றால் என்ன? பண்பாடென்றால் என்ன?

கேள்வி 6: தமிழ்ப் பண்பாடுகள் யாவன?

கேள்வி 7: ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையினை தமிழர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டுமா? அப்படிக் கடைப்பிடிக்காவிடின், தமிழரில்லையா?


கேள்வி 8: நான் இன்று தமிழன் என்றால், என் மறைவு வரைக்கும் தமிழனா? அல்லது இடையில் நான் தமிழனன்றிப் போவேனா? எதனைப்பின்பற்றாவிட்டால் அப்படி நடக்கும்?

கேள்வி 9: எனது வினாக்கள் நியாயமான கேள்விகளா?

..........................................................................
இவற்றை நான் ஏன் கேட்கின்றேன் என்று கட்டாயம் சொல்லியாக வேண்டும். கனடாவிலை எனது காலத்திலை வாழுற அனைத்துத் தமிழர்களும் தமிழ் கதைக்க வேண்டுமென்பது எனது ஆசை. அதற்கு என்னால் முடிந்த முயற்சியை நான் இன்னும் செய்யவில்லை. ஆனாலும், ஒருசில முயற்சிகளைச் செய்து அவை வெற்றிகளாயின. இப்படியாகப் பேராசைப்படும் நான் கட்டாயம் அந்த ஒன்பது கேள்விகளுக்கும் பதிலை அறிந்து வைச்சிருக்க வேண்டும் அல்லவா!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

6 Comments:

At 7:38 PM, May 04, 2005, Blogger Kumar Ratnam said...

கிஸோக்கண்ணன் ரொம்பத்தான் குழம்(ப்)பிவிட்டார். அடிமடியைத் தொட்டு வெளியே விழும் குழந்தையிடம் ஐ.டி. கார்ட் கேட்பது போலிருக்கிறது இவரது வினாக்கள். ஆனால் அனைத்தும் நியாயமானவை.

என்னைப் பொறுத்தவரை தமிழன் என்பது ஒரு குறியீட்டு அடையாளம். பேசும் மொழி, அணியும் உடை, பழக்க வழக்கங்கள், மிளகாய்த் தூள் வாங்குமிடம், மீன் சமைக்கும் முறைகள் எல்லாமே ஒருவனை “இன்ன இனத்தவன்” எனறு அடையாளம் காட்டக்கூடியன. இதில் ஒரு சில குறியீடுகள் இருந்தாலே “தமிழன்” என்ற முத்திரை குத்த மூன்றாம் மனிதனுக்கு உரிமையுண்டு. அந்த முத்திரை குத்தலில் நாம் பெருமைப்பட்டுக் கொள்ளவேண்டும். ஏனென்றால் ஒரு அடையாளமும் இன்றி எத்தனையோ மனிதங்கள் இருக்கின்றன.

போகும்போது கிஸோக்கண்ணன் செத்தான் செந்திலான் செத்தான் என்பதை விட கிஸோக்கண்ணன் தமிழனாக வாழ்ந்தான் என்று சொல்வது எவ்வளவு பெருமையாக இருக்கும்?

 
At 11:48 AM, May 10, 2005, Blogger Sundar said...

கேள்வி நான்கிற்கான பதில்: எனக்குத் தெரிந்தவரை கலாச்சாரமும் பண்பாடும் ஒரே பொருளைக் குறிப்பன, கலாச்சாரம் வடமொழிச் சொல்லிலிருந்து வந்தது.


முதல் கேள்விக்கான பதில் இங்கே கிடைக்கலாம்.

 
At 12:07 PM, May 10, 2005, Blogger கறுப்பி said...

நல்ல முசுப்பாத்தி சுந்தர். தமிழ் பீப்பிளைப் பற்றி நாங்கள் இங்கிலீசில ரீட் பண்ணி அறிய வேண்டிய நிலை. வெறி குட்.

 
At 12:33 PM, May 10, 2005, Blogger Sundar said...

இங்கே அக்கட்டுரைக்கு பங்களிப்பு செய்தவர்களைக் காணலாம். தமிழ் மொழி பற்றியும் மிக நல்ல கட்டுரை ஒன்றை நான் உட்பட பலர் இணைந்து ஆங்கிலத்தில் இங்கே எழுதினோம். இம்முசுப்பாத்தி மாற வேண்டுமெனில் தமிழர் பலரும் இங்கே பங்களிப்புச் செய்ய வேண்டும்.

 
At 12:39 PM, May 10, 2005, Blogger Sundar said...

எவ்வாறான கட்டுரைகள் தமிழ் விக்கிபீடியாவில் தொகுப்படுகின்றன என்பதை இங்கே கானலாம்.

 
At 5:00 PM, May 10, 2005, Blogger கிஸோக்கண்ணன் said...

வருக செந்திலான். வலைப்பதிவு எனும் ஜோதியில் கலந்து கொள்க. "...அடிமடியைத் தொட்டு வெளியே விழும் குழந்தையிடம் ஐ.டி. கார்ட் கேட்பது போலிருக்கிறது...". நல்ல ஒப்புவமை. உங்கள் கடைசி வரி எல்லா இனத்தவருக்கும் பொருந்தும் என்பதனையும் நினைவினில் கொள்வோம்.

சுந்தர், உங்கள் இணைப்புகளுக்கு நன்றி. அந்தப் பக்கங்களில் உங்களது பங்களிப்பையுங் காணக் கூடியதாக உள்ளது. வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

கறுப்பி, நீங்கள் சொல்வது கொஞ்சம் மனம் நோகும் பகிடிதான். ஆனால், மற்றைய இனத்தவருக்கு/மொழியினருக்கு எமது மொழியின் புகழைச் சொல்ல ஆங்கிலத்தில் எழுதினால்தான் நிறையப் பயனிருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து. தமிழிலும் அப்படியான பக்கங்கள் இருக்கும் (இருக்க வேண்டும்). தேடிப் பார்க்கின்றேன்.

 

Post a Comment

<< Home

statistics