Sunday, April 03, 2005

கனவு

நிறைவேறத் தயாராகும் அல்லது நிறைவேறத் தகுதியில்லாத அடிமனசின் விருப்புகள் மெல்லக் கண்திறந்து கண்மூடியிருக்க வருதல் கனவென்று மேலெழுந்தவாரியாகவும், கீழெழுந்தவாரியாகவும் இலக்கணஞ் சொல்வார் அறிவுடையார் (யார் என்று நானறியேன்).

எப்பவாவது வானவில் வருமாற்போல் சில கனவுகள் நனவில் நிறைவேறியதுமுண்டு. அவை பலவேளை கனலாகவும், சிலவேளை தென்றலாகவும் எழும்.

கனல் சுடுமென்றாலும் வருக்கும் கனவு பிடிக்கும்; கனவு காணப் பிடிக்கும். மற்றவரின் கனவினில் வரப் பிடிக்கும்; குறைந்தது, கனவில் வந்தாய் என்று மற்றவள்/ன் பொய் சொல்லிக் கேட்கப் பிடிக்கும்.

தென்றலாய் வீசுகின்ற கனவுகள் வருகையில், இது கனவாக அல்லாது நனவாக இருக்க வேண்டுமென்று மனசு ஆதங்கப்படும். கனலாக எழுகின்ற கனவுகள் முள்ளுக்கரண்டியாய் இதயத்தைப் பிராண்டும். "ஐயோ இது கனவாக இருக்க வேண்டும்" என்று அந்தக் கனவிலேயே மனங்கேவும். இது கனவுதானா என்று உறுதிப்படுத்த வலது கையினால் இடது காலினில் கிள்ளி...இப்போது வலி... கால்களில் மட்டுமல்ல.

சின்ன வயசில் அடிக்கடி ஒரு பெரிய கனவு. அந்த ஒரு கனவில் எங்கள் ஊரின் ஒரேயொரு பள்ளிக்கூடத்தின் ஒரு மூலையிலை ஒரேயொரு பாம்பு படமெடுத்தபடி சீறி நிற்கும் (அவ்வளவு படங்களையும் வைத்து ஒரு புகைப்படக் கண்காட்சியே நடாத்தலாம்). எல்லா மாணவர்களும் (கம்பீரமான அதிபரும் சேர்ந்து) பயந்து ஓடுவார்கள். எனது கால்கள் மட்டும் தமது தொழிற்பாட்டை மறந்தனவாய்... நரம்புத்தளர்ச்சியெண்டால் இப்படியான கனவுகள்தான் வருமெண்டு அம்மம்மா சொல்லுவா (அவா எல்லாத்துக்கும் ஒரு மருத்துவக் காரணி வைச்சிருப்பா).

இப்போதெல்லாம் அந்தக் கனவு வருவதில்லை. ஒருவேளை அந்தப் பாம்பு செத்துப் போயிருக்கலாம். அல்லது எனது நரம்புத் தளர்ச்சி தளர்ச்சியுற்றுப் போயிருக்கலாம் (மேலதிக விளக்கஞ் சொல்ல அம்மம்மாவும் இப்ப உயிருடன் இல்லை).

அதே சின்ன வயசில் (நிறையச்) சிலவேளை ஒரு கனவு. அது இன்றும் ஈரமான நினைவொன்றாய் என்னோடு. அது யாதெனில், ஒண்டுக்கு இருக்கிறது மாதிரிக் கனவு. இடையிலை திடீரெனப் பயம் வரும். ஐயையோ...இது கனவில்லைப் போல. சீச்சீ...கனவுதான். விடியலில் தூக்கங் கலைகையில்தான் கனவும் நனவும் சங்கமித்தோடியது புரியும். காற்சட்டையை அவசரமாய் மாத்திக்கொண்டு, "அம்மா! இண்டைக்கும் தம்பி படுக்கையிலை ஒண்டுக்குப் போட்டான்" என்பேன். பாவம் தம்பி...ஒண்டுமே தெரியாதவனாய் ஏதோ கனவு கண்டுகொண்டிருப்பான். தம்பி உடையான் ஒண்டுக்கு(ம்) அஞ்சான். அம்மா எவ்வளவுதான் திட்டினாலும் வெறித்து வெறித்துப் பார்ப்பான்...என்னை. ஒரு அன்புத் தம்பியாய் உள்ளவன் இதற்கும் உதவாவிடின் பிறகெப்போதுதான் உதவுவான்? (தம்பி! தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளு).

அது என்னவோ தெரியவில்லை, கொஞ்சம் வளர்ந்த பின் கனவுகளும் வளரத் தொடங்கின. அபோதைய கனவுகள் யாவிலும் நான்தான் கதாநாயகன். நாலு பேரைப் புரட்டிப் போடும் பலங் கொண்டவனாய்... சின்ன வயசில் தமிழ்ச்சினிமாவை அளவுக்கதிகமாய் நேசித்ததன் பக்க விளைவோ பயங்கர விளைவோ யாதென்று நானறியேன்.

பருவ வயசில் பருவக்கனவுகள்தான் (அடிக்கடி) வருமென்று நல்ல மற்றுங் கெட்ட கதைகளில் படிச்சதுண்டு. அப்படியான கனவுகள் எனது கனவுகளில்கூட வந்தாதாய் எனக்கு ஞாபகமுமில்லை; தங்களுக்கு வந்ததாய் ஊரில் எவருமே (வெட்கத்தில்?) சொல்லவுமில்லை. அதனைப்பற்றியெல்லாம் சிந்திக்க எங்கு நேரமிருந்தது எமக்கு? உயர்தரம் படிக்கையில் கனவுகள் உயர்ந்தன. படிச்சுப் பேரெடுக்க வேண்டுமென்ற சொந்தங்களின் விருப்பே எனது (மற்றும் நண்பர்களதும்) கனவாயிருந்தது.

கண்ட கனவெல்லாம் நனவாகிப் போகுமெண்டால் பாம்பு கடிச்சு எப்போதோ செத்துப் போயிருப்பேனே. ஆம், படிப்புக் கனவுகள் புலம் பெயர்தலோடு புலம்பெயர்ந்தாயிற்று.

அந்நிய நாட்டில், இது பகலா இரவா என்று வெளியில் பார்த்து சொல்ல முடியாத இரவுகளில் வரும் கனவுகள்: படித்த வகுப்பறைகள்... கிளித்தட்டி விளையாடியது... துவிச்சக்கரவண்டியில் பெடியளோடை வீதியுலா வந்தது....

இன்றைய கனவுகளைக் காணும்போதே தெரியும் அது கனவென்று. ஊர்சார்ந்த மகிழ்ச்சியான பொழுதுகள் இனி எனக்குச் சொந்தமில்லையென்பது கனவில்கூட எனக்குத் தெளிவாய் தெரிந்திருக்கிறது. கிளித்தட்டு விளையாடத் தயாராகின்றார்கள். கிளித்தட்டென்றால் எனக்குக் கொள்ளைப் பிரியம். இருந்தும் நான் அவர்களோடு விளையாடமல் பார்வையாளனாக இருக்கத் தீர்மானிக்கின்றேன். எனக்குப் பயம், எங்கை விளையாட்டிலை கிளியிடம் அடிவாங்கி கனவு கலைந்துவிடுமோ என்று. இன்றைக்காவது இந்தக் கனவை கூட நேரங் காணவேண்டுமென்று அடிமனசு கெஞ்சும். யாரோ ஒருவன் 'பழம்' என்று ஒன்பது ஊருக்குங் கேட்குமாற்போல் கத்துவான் (கொஞ்சம் மெதுவாய் பழம் எடுத்தால் என்னவாம்). பிறகென்ன...நான் பயந்தது போலவே என் கனவும் குலைந்து போயிற்று. பிறகெங்கு தூக்கம் வரும். படுக்கையில் புரளும் நானாய் ஞாபகங்களும்...

நிறையக் கனவு காணவேண்டுமென்றும், அவை யாவும் மெய்ப்பட வேண்டுமென்றும் முன்பெல்லாம் நிறையவே அவா இருந்தது. இப்ப...? ஒன்றுமே இல்லை. ஆசைப்படுமளவிற்கு அப்படியொன்றும் இங்கு அதீத இன்பம் மற்றும் இறுமாப்புத் தருவனவாயில்லை. பிறகேன் மினக்கெட்டுக் கனவு காணுவான்?

இப்போது எது கனவு? நாம் தூங்கும் போது தான் விழிக்குமே அது கனவா? அன்றி, விழித்திருக்கும்போது விழிப்பது கனவா? வாழ்வில் நிறைவேறத் தவறிய மற்றும் இடையிலே பறிபோன யாவுங் கனவுகளே!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

1 Comments:

At 2:16 PM, May 04, 2005, Blogger கிஸோக்கண்ணன் said...

பழைய பின்னூட்டம்:

........................
//தம்பி உடையான் ஒண்டுக்கு(ம்) அஞ்சான்.//

இப்ப கனவுகள் நிறைய வருகிது. ஆனா விரும்பிற கனவுதான் வருகுதில்ல. விரும்பிறது கிடைக்காட்டி கிடைக்கிறத விரும்பு எண்டமாதிரி வாற கனவுகள விரும்ப வேண்டியதுதான். எனக்கொரு சந்தேகம். கனவப்பற்றி இப்பிடி ஆராய்ச்சியள் செய்யிற உங்களிட்ட தான் கேக்கோணும். அதென்னெண்டு அஞ்சு நிமிசத்திலயே அர மணித்தியாலக்கதைய கனவு காணுறம். (பதில் தெரிஞ்சும் சொல்லேலயெண்டா உம்மண்ட தல சுக்குநூறா வெடிச்சுச் சிதறும்) எண்டு சொன்ன படியே பழயபடி நான் முருங்கை மரத்தில ஏறுறன்.
வசந்தன். | Homepage | 04.03.05 - 10:21 pm | #

 

Post a Comment

<< Home

statistics